BiggbossTami7 Day 40: ’ஒரு கேஸும் ஜெயிக்கல…’ நொந்து போன புல்லி கேங்… வச்சு செய்யும் ஆண்கள் அணி!

Published On:

| By Manjula

biggbosstamil7 bully gang court task

பிக்பாஸ் அவங்களுக்கு நெறைய சப்போர்ட் பண்றாரு என நடு ராத்திரியில் அமர்ந்து மாயா குழு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. biggbosstamil7 bully gang court task

‘இந்த வாரம் நான் வெளில போய்டுவேனோ?’ என பூர்ணிமா திடீரென தன்னுடைய பதட்டத்தை வெளியில் சொன்னார். மேலும் நான் வெளில எப்படி தெரியுறேன் தெரியல என அவர் கவலைப்பட்டதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ADVERTISEMENT

இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்த தெளிவான புரிதல் அவரிடம் இருக்கிறது. ஆனால் மாயா குழுவினருடன் சேர்ந்து அவர் தன்னுடைய பிம்பத்தையும் கெடுத்து கொள்கிறார். ‘நம்ம மேல தப்பு இருக்கு இருந்தாலும் வாராவாரம் ஸாரி கேட்டு கமல் சார்கிட்ட எஸ்கேப் ஆகிடுறோம்’ என மாயா ஒரு அரிய உண்மையை கண்டுபிடித்தார்.

கோர்ட் டாஸ்கில் தீர்ப்பு மாறிப்போன ஆதங்கம் பூர்ணிமாவுக்கு நிறைய இருக்கிறது போல. நள்ளிரவு 12.30 மணி வரை இதுகுறித்து ஐஷு, விக்ரம் உள்ளிட்டோரிடம் புலம்பி கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

‘என்ன என் கேமை விளையாட விடுங்க இல்லைனா வெளியில அனுப்பிடுங்க’ என்று பலவாறாக அவர் தன்னுடைய வலியை சக போட்டியாளர்களிடம் தெரிவித்து கொண்டிருக்கிறார். இதில் மற்றவர்களிடம் தன்னுடைய நிலையை எடுத்து சொல்வதை விட பிக்பாஸிடம் வெளிப்படுத்துவது தான் அவரின் நோக்கம் என்பது போல் மைக்கை எடுத்து தெளிவாக பேசிக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

40-ம் நாள் காலை மன மன மெண்டல் மனதில் என்ற பாட்டுடன் விடிந்தது. ஆர்ஜே பிராவோ திடீரென பிரேமில் வந்து இந்த பாட்டுக்கு ஜாலியாக ஆடினார். அவருக்கு தினேஷ் கம்பெனி கொடுக்க மறுபுறம் மணி, ரவீனா இணைந்து ஆடியதை பார்க்க நன்றாக இருந்தது.

பெட்டின் மேலே நின்று ஆக்ரோஷமாக முகத்தை வைத்துக்கொண்டு மாயா ஸ்டெப்ஸ் போட்டார். வீட்டில் ஏதோ பால் பிரச்சினை போல நிக்சனிடம் பெரிதாக மாயா விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அதையே பின் தன்னுடைய குழுவினரிடமும் அமர்ந்து மாயா கிண்டலடித்தார்.

இதுபோன்ற விஷயங்கள் தான் தனக்கு ஆப்பு வைக்கும் என்பதை அவர் தெரிந்து செய்கிறாரா? இல்லை தெரியாமல் செய்கிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம். இதற்கு நடுவில் பிக்பாஸ் போய் விஷ்ணுவை ரிலீஸ் பண்ணுங்க என மாயாவுக்கு உத்தரவிட, விஷ்ணு வீட்டுக்குள் வந்தார்.

மீண்டும் கோர்ட் டாஸ்க் ஆரம்பிக்க மாயா மீது தினேஷ் வழக்கு தொடுத்தார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் மாயாவால் வீட்டில் உள்ள ஆண்களின் கண்ணியம் பாதிக்கப்படுகிறது என்பது தான் தினேஷின் வழக்கு. தினேஷ் நீதிபதியாக விசித்ராவை தேர்வு செய்ய மாயா சரவண விக்ரமை தேர்வு செய்தார்.

இதில் மாயா, தினேஷ் ஒரு மனதாக இணைந்து ஆர்ஜே பிராவோவை நீதிபதியாக தேர்வு செய்தனர். நிக்ஸன் மாஸ்க் கேட்டதற்கு உள்ளாடையை எடுத்து காட்டினார் என்பது தான் தினேஷின் முக்கிய குற்றம். யார் நீதிபதி என்று தினேஷ் விவாதித்து கொண்டிருக்கும் போதே விஷ்ணு, ஜோவிகா இடையில் மீண்டும் சண்டை முட்டிக்கொண்டது. இருவரும் சீறும் நாகங்களை போல வார்த்தைகளை மாறிமாறி உமிழ்ந்து கொண்டிருந்தனர்.

கடைசியில் தினேஷ் நாங்க முடிச்சுக்கிறோம் என தலையிட்டு இருவர் சண்டையிலும் சிறிது தண்ணீரை தெளித்தார். ஆனாலும் சண்டை ஓயவில்லை. முடிவில் ஜோவிகா கண்ணீர் விட மாயா அந்த நெருப்பை மேலும் ஊதி விட்டு பகையை அணையாமல் பார்த்து கொள்ளும் வேலையை நன்றாக செய்தார்.

நீறு பூத்த நெருப்பு போல விஷ்ணு-ஜோவிகா சண்டை வெளியில் தெரிந்தாலும் என்றாவது ஒரு நாள் இதன் எதிரொலி பயங்கரமாக இருக்கும் என தெரிகிறது. அந்த நாள் என்று வரும் என்பது தெரியவில்லை. மாயா, பூர்ணிமா இருவரும் ஆண்களை நிறைய இடங்களில் கிண்டல் செய்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு மட்டுமின்றி இதுவும் ஒரு பெரிய விஷயம் தான் என்பது தினேஷின் வாதம். ஆனால் இதையும் மாயா ஜஸ்ட் லைக் தட் ஹேண்டில் செய்தார். நான் கிண்டலுக்காக தான் சொன்னேன் என்பது அவரின் வாதம். அந்த இடத்தில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதுபோல தான் நான் பேசியிருப்பேன் என மாயா ஒரேயடியாக முடித்து விட்டார்.

இது ஒரு விளையாட்டு என பூர்ணிமாவும் தன்னுடைய தோழி மாயாவை விட்டு கொடுக்காமலேயே மழுப்பினார். சாட்சிக்கு நிக்சனை அழைத்து பிராவோ விசாரிக்க அவர் எனக்கு தெரியாது, தினேஷ் வீட்டுக்குள் வந்தவுடன் தான் அது எனக்கு தெரிய வந்தது என்றார்.

உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சிறிய விஷயங்களை ஊதி பெரிதாக்குகிறீர்கள் ஆனால் அதுவே தேவையில்லை என்றால் கடந்து சென்று விடுகிறீர்கள் என சரியான பாயிண்டை பிடித்து தான் ஒரு சிறந்த போட்டியாளர் என்பதை மறுபடியும் தினேஷ் நிரூபித்தார்.

இதற்காக சரவண விக்ரம், கானா பாலா ஆகியோரை அழைத்து பிராவோ விசாரிக்க, இதில் மாயா அவ்வப்போது இதுபோல வார்த்தைகளை விடுகிறார் என்பதை கானா பாலா ஒப்பு கொண்டார். இறுதியில் தினேஷ் இந்த வழக்கில் ஜெயித்ததாக பிராவோ அறிவித்தார். ஏற்கனவே வீட்டைவிட்டு வெளியில் செல்லும் மனநிலைக்கு வந்து விட்ட பூர்ணிமா, பிராவோவை பிடித்து கொண்டார்.

நான் ஒரு அடல்ட் 18+ ஜோக்குகள் சொல்வேன். அதுமாதிரி சொல்ல மாட்டேன்னு எந்த ரூல்ஸ் புக்கிலும் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்கவில்லை. அவர் வெளியில் இருந்து பார்த்து விட்டு வந்ததை வைத்து நீங்கள் இந்த தீர்ப்பை கொடுத்தது தவறு என மூச்சே விடாமல் பேச, ஏண்டா இந்த கேஸ் எடுத்தோம் என பிராவோ முழித்துக்கொண்டு நின்றார்.

அப்படியே கட் செய்து நேராக வந்தோம் என்றால் விஷ்ணு, பூர்ணிமா சண்டை போய் கொண்டிருந்தது. உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கல நான் உங்கள நம்புனேன் என பூர்ணிமா குற்றஞ்சாட்ட, பதிலுக்கு என்கிட்டே ஒரு மாதிரி பேசிட்டு மாயா கிட்ட போய் வேற மாதிரி பேசுறீங்க என விஷ்ணு பொரிந்து கொட்டினார். (காதல் பறவைகளா இருப்பாங்கன்னு பார்த்தா இப்படி சண்டைக்கோழியா மாறிட்டாங்களே)

நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? நானும் கேஸ் போடுவேன் என மணிக்கு எதிராக நிக்ஸன் வழக்கு தொடுத்தார். இதற்கு நீதிபதி விஷ்ணு. ரவீனாவின் வளர்ச்சிக்கு மணி தடையாக இருக்கிறார் என்பது தான் நிக்சனின் வாதம். இதை கேட்டு நமக்கே சிரிப்பு வருகிறபோது மணிக்கு வந்திருக்காதா என்ன? ஐஷுவின் நிழல் போலவே ஒட்டிக்கொண்டு திரியும் நிக்ஸன் இந்த வழக்கை மணி மீது தொடுத்தது தான் இந்த சீசனின் மிகப்பெரிய காமெடி.

biggbosstamil7 bully gang court task

இதில் ஐஷு-நிக்ஸனுக்கு ஆதரவாக பேச மணிக்கு ஆதரவாக ரவீனா வந்தார். அர்ச்சனாவும் சில நாட்களுக்கு முன் நடந்த சண்டையில் ஐஷுவிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க நிக்ஸன் வற்புறுத்தினார் என மணிக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க இறுதியில் நீதிபதி விஷ்ணு, மணிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.

இதனால் கடுப்பான நிக்ஸன் வெளியில் வந்து சண்டை போட பதிலுக்கு நான் வாயை விட்டா எல்லாமே காலி புரிஞ்சுக்க என்கிட்டே எதுவும் வச்சுக்காத என மணி எச்சரிக்கை விடுத்தார். (தனியாக ஐஷு குறித்து நிக்ஸன், மணியிடம் கமெண்ட் அடித்திருப்பார் போல) மறுபுறம் மாயா, ஐஷு இருவரும் இணைந்து நிக்ஸனை வறுத்து கொண்டிருந்தனர்.

இவனுக்கு டாஸ்க் ஆட தெரியல கோபம் தான் வருது என நிக்ஸன் பற்றி பல அரிய உண்மைகளை ஐஷு விளக்கி கொண்டிருந்தார்.

biggbosstamil7 bully gang court task

கானா பாலா, அர்ச்சனா, விஷ்ணு, ரவீனா, ஆர்ஜே பிராவோ அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தீர்ப்பை மற்றவர்கள் கிண்டல் செய்ததால் எனக்கும் கோபம் வரும் என சிறிது நேரம் பிராவோ ஆங்கிரி மோடுக்கு சென்றார். கோர்ட் டாஸ்க் முடிவுக்கு வந்ததை அடுத்து நன்றாக செயல்பட்டவர்களுக்கு பிக்பாஸ் ஸ்டார்கள் வழங்கி இருந்தார்.

இதில் விஷ்ணு, விசித்ரா, தினேஷ், மணி ஆகியோர் வழக்கில் வென்றதால் தலா ஒரு ஸ்டார் கிடைத்தது. (நானே உழைச்சு வாங்குனது என விசித்ரா ஆனந்த கண்ணீர் விட்டார்) ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து ரவீனா, நிக்ஸன், விஷ்ணு, ஆர்ஜே பிராவோ என நீதிபதியாக செயல்பட்டவர்களில் ஒருவரை தேர்வு செய்து மிச்சமிருக்கும் ஒரு ஸ்டாரை வழங்கும்படி பிக்பாஸ் உத்தரவிட, அதன்படி அந்த ஸ்டார் விஷ்ணுவுக்கு கிடைத்தது.

biggbosstamil7 bully gang court task

இந்த வாரம் வெளியேற போவது பிராவோவா? இல்லை தினேஷா? என்று பூர்ணிமா, மாயா இருவரும் தனியாக டிஸ்கஸ் செய்தனர். பிராவோ என்பது மாயாவின் கணிப்பாக இருக்க, தினேஷ் போகட்டும் அவர சுத்தமா புடிக்கல என பூர்ணிமா அனத்தி கொண்டிருந்தார். ஆண்கள் பாதுகாப்பு விஷயத்தை தினேஷ் முன்னெடுத்தது தான் பூர்ணிமாவின் இந்த எரிச்சலுக்கு காரணம்.

ஆவேசமாக சண்டை போட்ட விஷ்ணு, பூர்ணிமா இருவரும் நள்ளிரவு 2 மணிக்கு அமர்ந்து சற்றே சமாதானமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதில் விஷ்ணு எனக்கு உன்ன புடிக்கும் என்பது போல இறங்கி வந்து பேசினார். அதான் பாத்தேனே என பூர்ணிமா நொடிக்க பிளீஸ்மா என கெஞ்சி சமாதானக்கொடியை ஏற்றினார் விஷ்ணு. (இவ்வளவு பயம் இருக்க கோவாலு எதுக்கு தனியா வெள்ளையடிக்க போகணும்)

ஸ்மால் பாஸ் அணியினர் 3 வழக்குகளில் வென்றுள்ளனர். விஷ்ணு 2 ஸ்டார்கள் வெற்றி பெற்றிருக்கிறார். அதோடு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் என்றுமில்லாத அளவு இந்த வாரம் உச்சகட்ட எதிர்பார்ப்பை பிக்பாஸ் நிகழ்ச்சி எட்டியிருக்கிறது. biggbosstamil7 bully gang court task

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.. 

-மஞ்சுளா 

பட வாய்ப்பு அமையவில்லை: மேலாளரை மாற்றும் பிளாக்பஸ்டர் பட நடிகை!

நடிகர் சந்திர மோகன் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share