கொண்டையை சிலிர்த்துக் கொண்டு எழும் எத்தனையோ சண்டைக் கோழிகளை ,
மண்டை பிளக்க மடார் மடார் என்று முட்டிக் கொள்ளும் காட்டு ஆடுகளை ,
கண் மூக்கு காது என்று பார்க்காமல் குத்திக் கிழித்துக் கொள்ளும் காளமாடன்களை ,
ஒன்றை ஒன்று தூக்கிப் போட்டு மிதிக்கும் பைசன்களை எல்லாம் பார்த்திருக்கிறது இந்த பிக்பாஸ் மன்றம் .
ஆனால் இந்த ஒன்பதாவது சீசன் போல பகீர் திகீர் பயங்கரங்களை காட்டிய சீசன் எதுவும் இல்லை (இது பாராட்டு இல்லை) அதுவும் முளைச்சு மூணு இலை கூட விடாத இந்த 22 நாட்களுக்குள் !
ஆரியை அடித்து விடுவாரோ என்று பயப்பட வைத்த பாலாஜி முருகதாஸ் , புன்னகைத்துக் கொண்டே ஐஸ்கத்தியை சொருகி ஆளைக் காலி செய்யும் ரம்யா பாண்டியன் (ஐஸ்கத்தி என்றால் என்னவென்று பொது வெளியில் சொல்லலாகாது. எனவே புரிஞ்சிக்கிட்டவங்க புரிஞ்சுக்குங்க . புரியாதவங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க.), அடுத்தவரை வெறுப்பேற்றுவதற்கு என்றே பிறப்பெடுத்த மாயா, உள்ளுக்குள் கேம் ஸ்ட்ரேட்டஜியை வைத்துக் கொண்டு வெளியே பாசமலராக நெக்குருகிய அர்ச்சனா சந்தோக் என்று.. அது ஒரு நூறு இருக்கும்
ஆனால் இந்த சீசனில் வந்திருக்கும் கமருதீன், வி ஜே பார்வதி இருவர் போல டென்ஷன் கூட்டும் ஆட்கள் எங்கேயும் இல்லை.
இந்த கம்ருதீன் இருக்கிறாரே … காலையில் தூங்கி முழிக்கும்போதே யாரையோ அடிப்பது போல் தான் எழுகிறார். அந்த ஏரியாவில் பறக்கும் காக்கா குருவியிடம் கூட , ” என்ன ஒரு மாதிரி பாக்குற . இதே நான் வெளிய இருக்கும்போது இப்படி பாத்தன்னு வை . கழுத்தை முறிச்சிருவேன் ” என்கிறார் . யாராவது வந்து குட்மார்னிங் சொன்னால் கூட ”நீ வளர்ந்த விதம் சரி இல்ல” என்கிறார்
மீனவ குடும்பத்தில் இருந்து வந்ததாக அறிமுகப்படுத்திக் கொண்ட சுபிக்ஷாவிடம்தான் முதன் முதலில் , ” நீ எங்கிருந்து வந்திருக்கியோ அந்த இடம் சரி இல்ல. உன் வளர்ப்பு சரி இல்ல ” என்றார் கமருதீன்
ஆனால் பிக்பாஸ் , விஜய் சேதுபதி இருவருமே அவரைக் கண்டிக்கவில்லை . அதனால்தான் இப்போது பத்து வார்த்தைக்குள் மூணு தடவை ஒரு நாளைக்கு முப்பது தடவை ”நீ வளர்ந்த விதம் சரி இல்ல ” என்கிறார் .
இப்படியாக, பெண் என்றும் பாராமல் ஆதிரையை திட்டி அடிக்கப் போய் அவரை ஒடுங்க வைத்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தே அனுப்பி விட்டார் கம்ருதீன்.
பார்வதியைப் பற்றி என்ன சொல்வது என்றே புரியவில்லை . ஒரே வாக்கியம் . அவர் கம்ருதீனை விட ஆபத்தாக இருக்கிறார் ..
தனது பெயரை சுருக்கி யாராவது கூப்பிட்டால் முழுப் பெயரையும் சொல்லுங்க என்று கோபப்படுபவர்களை பார்த்து இருப்பீர்கள் . ஆனால் இவரிடம் அவரது பெயரை பார்வதி என்று முழுசாக சொன்னால் கூட கொந்தளிக்கிறார் .
”பாருன்னு கூப்பிடு” என்று கொதிக்கிறார் . ஆனால் அவர் முகத்தை பார்த்து யாரும் பேச முடிவதில்லை .
பத்தல எனவே பார்வதிக்கு இன்னொரு வாக்கியமும் சொல்லலாம்
பொதுவாக பிக்பாஸ் உள்ளே போகிற பிரமுகர்கள் பலரும் பெயரைக் கெடுத்துக் கொண்டு வெளியே வருவார்கள். ஆனால் ஏகப்பட்ட கெட்ட பெயரோடு உள்ளே போன வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரே இப்போது நல்ல மனிதராகத் தெரிகிறார் என்றால்.
அந்தப் பெர்ர்ரர்ர்ர்ருமை ‘பாரு’வையே சாரர்ர்ர்ரர்ர்ர்ர்ரும் (அவர் ஸ்டைலில் சொல்லிப் பார்த்தபோது இப்படித்தான் எழுத முடிகிறது )
ஞாயிறு இரவு இவர்களை எல்லாம் கண்டித்த விஜய் சேதுபதி, ” இண்டர்வியூல பேசும்போது எப்படி எல்லாம் பேசினீங்க, ஆனா இப்படி ஏன் நாறும் அளவுக்கு நடந்துக்கறீங்க ?’ என்று கேட்டார் .
அப்போ இவங்க இப்படித்தான் என்று கண்டுபிடிக்க முடியாமலா இவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பினார்கள்?
முக்கியமாக எல்லா நச்சுக் கலாட்டாக்களையும் செய்து விட்டு பிரச்னை வரும்போது பொய்யாக அழுது மேக்கப் கலையாமல் கண்ணீர் துடைக்கும் வேலையை செய்யும் பாருவை எப்படி பார்ப்பது . இதுக்கு பெரிய தண்டனை தரணுமே பிக்பாஸ்?
- ராஜ திருமகன்
