மோசமானவர்களிலேயே முக்கியமானவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியா பிக்பாஸ் ?

Published On:

| By Minnambalam Desk

போகிற போக்கைப் பார்த்தால் பிக் பாஸ் கப்பை, பார்வதியிடம் தூக்கிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது. அப்படி நடந்தால் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நேற்று நான் சொல்லியிருந்த விஷயத்தை, உறுதிப்படுத்துவதற்கான சம்பவங்கள் உடனடியாகவே நடந்தன.

பிக்பாஸில் டாப் டென் இடங்களுக்கு வருவது என்பது முதல் மைல்கல்லை அடைவது மாதிரி.

ADVERTISEMENT

அதன் பிறகான எவிக்ஷன்கள் ரொம்ப சென்ஸிபிளாகவே இருக்கும். ஆக இந்த பத்துப் பேரில் இருந்து ஒருவர் வெளியே போக வேண்டும் என்றால் இந்த பிக் பாஸ் சீசனில் அது சான்ட்ராவாகவே இருக்கும். இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம்.

கனி திருதான் கோப்பையை வெல்லத் தகுதியுள்ள ஒரே ஆள் என்று சொல்ல முடியாது. ஆனால் சான்ட்ராவா கனி திருவா யார் வெளியேற வேண்டியவர் என்ற கேள்விக்கு இந்த உலகத்தில் ஒருவர் கூட கனி திரு போக வேண்டும் சான்ட்ராவா இருக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்- பாருவைத் தவிர.

ADVERTISEMENT

ஆனால் பாருவும் பிக்பாஸும் ஒரே ரகம்.

பெரிய ஸ்ட்ராடஜி எல்லாம் கனி திருவிடம் இல்லைதான். ஆனால் பல பேர் கூடி இருக்கும் ஒரு வீட்டில் மற்றவர்களை அனுசரித்துப் போதல், எல்லோரையும் சமமாக நடத்துதல், கண்ணியமான பேச்சு, நடத்தை , அன்போடு உணவு பரிமாறல் இவற்றில் கனி திரு மிக உயர்ந்து நின்றார்.

ADVERTISEMENT

மாறாக… தனித்தன்மை இன்மை, தமிழ் அடையாளங்களுடன் இருக்கும் எல்லோரையும் வெறுப்பது, வன்மமாக தூண்டி விடுவது, வேண்டும் என்றே மற்றவர்கள் மேல் நச்சு குணத்தோடு அவதூறு சொல்லி அப்படி அநியாயமாக தூற்றப்படுபவர்கள் துடிதுடித்து மறுக்கும்போது, அதை ரத்தம் குடிக்கும் மனநிலையில் உள்ளுக்குள் ரசிக்கும் நரித் தந்திரம்,

தான் செய்த தவறுகளை யாராவது உறுதியாக சொன்னால் உடனே ஒப்பாரி வைத்து அழுது மற்றவர்களை ஸ்தம்பிக்க வைப்பது, தனக்கு ஒரு விஷயத்தில் பின்னடைவு என்றால், அந்த அவமான அழுத்த தாழ்வு மணடலம் நிலவும் 24 மணி நேரம் வரை பிக்பாஸ் ஹவுஸில் யாரும் சிரிக்கக் கூடாது. பாத்ரூம் போகக் கூடாது என்ற கேவல குணம் …

இவற்றின் மூலம், தான் பெற்ற பிள்ளைகளுக்கே உதாரணமாக இருக்கும்படி நடந்து கொள்ளாதவர் சான்ட்ரா.

பிக் பாஸில் ஓட்டுப் போடுபவர்கள் எல்லாரும் நியாய, நேர்மை, தர்ம வாதிகள் என்று சொல்லவில்லை. ஆனால் ஓட்டுப் போடும் அளவுக்கு பிக்பாஸை ஒருவர் பார்க்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக நேரம் செலவழித்து சான்ட்ராவுக்கு ஓட்டுப் போட எல்லாம் சான்ஸே இல்லை. சொல்லப்போனால் கூல் சுரேஷ், திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா வாட்டர் மெலன் திவாகர், இவர்கள் கூட சான்ட்ராவுக்கு ஓட்டுப் போட்டு இருக்க மாட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்வுகளை நிதானமாக அலசி பேசும் போட்டியாளர் விக்கல்ஸ் விக்ரம், ‘ சான்ட்ரா இருக்கிறார்; கனி திரு வெளியேறுகிறார்’ என்றதும் கதறி விட்டார். மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் யாருமே சான்ட்ரா போகாமல் கனி போய்விடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.

வன்மம் காரணமாக மட்டும் சான்ட்ரா இருப்பார்; கனி திரு போக வேண்டும் என்று கூறிய பார்வதி இப்போது அறிவாளி ஆகி விட்டார்.

கனி திரு போன பிறகும் கூட விக்ரம், ” என்ன இங்க நடக்குது? எப்படி யாரு எதுக்கு ஓட்டு போடறாங்க? அன்பா பாசமா நேர்மையா இருந்தா இப்படித்தான் கனி திரு மாதிரி வெளிய அனுப்பிருவாங்க. நல்லவங்க எல்லாம் போய்க்கிட்டே இருக்காங்க ” என்று புலம்பியதில் உண்மை இல்லாமல் இல்லை.

அது கூட பரவாயில்லை. பிக்பாஸில் வீட்டை விட்டு வெளியேறும்போது எல்லாரும் அழுவார்கள். வந்தவுடன் ஜாலியாகப் பேட்டி கொடுப்பார்கள். அல்லது பிக்பாஸில் நடக்கும் அநியாயங்களை பற்றி பேசுவார்கள்.

ஆனால் கனி திரு நேர்மாறு. ரொம்ப உணர்ச்சிவசப்படாமல் வெளியே வந்தவர், வெளியே வந்த பிறகு மிகவும் உடைந்து போய் விட்டார். ஒரு நாள் முழுக்க தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். கணவன், உறவினர், ஆகியோர் சமாதானப்படுத்திய பிறகே வெளியே வந்திருக்கிறார்.

“நான் என்ன தப்பு பண்ணேன்? இந்த சூழ்நிலையில இவ்வளவு சீக்கிரம் வெளியேற்றும் அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கு பதில் சொல்லுங்க?” என்று மக்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.

ஆனால் இந்தக் கேள்வியை பிக்பாஸை நோக்கியும் கேட்கலாம்.

ஒருவேளை கனி திரு, சான்ட்ரா இருவரில் யாரை நீக்க வேண்டும் என்பதை,

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் போட்ட ஓட்டுகளை மட்டும் வைத்து முடிவு செய்தார்களா? மலையாளிகள் மட்டும் போட்ட ஓட்டுகளில் கனி திருவை விட சான்ட்ரா அதிக ஓட்டு வாங்கி இருந்தாரா? அதனால் இந்த முடிவா?

ஏனெனில் முன்பு ஒரு முறை காரில் அனுப்பப்பட்டவர்கள் திரும்பி வரும் முறையில் எவிக்ஷன் நடந்தபோது கூட சான்ட்ராவின் கணவர் பிரஜின் திரும்பி வர மாட்டார் என்று எல்லோருக்கும் தோன்றிய நிலையில், பிரஜினை மீண்டும் பக்குவமாக உள்ளே இருக்க வைத்தது பிக்பாஸ். எனவே தான் இந்தக் கேள்வி வருகிறது.

இல்லை ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் எந்திரன் சிட்டி மாதிரி ரெட் சிப் பொருத்திய கேவல ரோபோக்களா?

சூரியன் எப்போதும் கிழக்கே தான் உதிக்கும். ஆனால் ஒரு நாள் ஓர் ஊரில் மேற்கே உதித்தாக நம்ப வைக்கிற மாதிரி ஒரு செய்தி வந்தால் என்ன ஆகும்?

உலகமே அதைப்பற்றி பேசும்; அந்த ஊர் பரபரப்பாகப் பிரபலமாகும். அங்கே போக ஆசைப்படுவார்கள். எனவே சூரியன் மேற்கே உதித்ததன் மூலம் கிடைத்த பரபரப்பால் அந்த ஊருக்கு ‘விளம்பர வருமானம்; அதிகம் கிடைக்கும். அந்த ஊர் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு ‘டி ஆர் பி’ ஏறும்.

எனவே அந்த ஊரோ அல்லது அது போல வேறு ஊர்களோ அவ்வப்போது சூரியனை மேற்கே உதிக்க வைத்தததாக நம்ப வைத்தால் காசு கொட்டும் அல்லவா?

அந்த வகையில், வேண்டும் என்றே பிக்பாஸ் நிகழ்ச்சி இப்படி கொலை குத்து குத்தும் வேலையை செய்கிறதா? ஏனெனில் அசீம் உட்பட சிலர் பிக்பாஸ் வின்னர் ஆனதே இப்படி வம்படி பரபரப்புக்காக பிக்பாஸ் செய்த வேலைதான்.

புத்திசாலித்தனமாகவே இருக்கட்டும்.

ஆனால் இப்படி ஒரு நிகழ்சசியில் நல்ல குணங்களோடு இருப்பவர்கள் யாரும் வெல்ல முடியாது. தவறானவர்கள்தான் பரிசு வெல்ல முடியும் என்பதை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனில் பிக் பாஸ் என்பது மோசமானவர்களில் முக்கியமானவரை தேர்ந்தெடுத்து ஐம்பது லட்சம் கொடுத்து வாழ வைக்கும் நிகழ்ச்சியா?

பொதுவாக பிக் பாஸ் முடியும்போது கேட்கப்பட வேண்டிய கேள்விகளை இப்போதே கேட்க வைத்து விட்டது பிக் பாஸ் 9

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share