நேற்றைய( நவம்பர் 21) எபிசோடில் திரைத்துறையின் மாபெரும் ஹீரோவால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து விசித்ரா பேசியது வெளியேயும், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. Bigg boss Tamil 7 Day 52
சில ஆண்டுகளுக்கு முன் இதுகுறித்து அவர் புகார் அளித்த செய்தி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இன்றைய (நவம்பர் 22) எபிசோடும் அது குறித்து விசித்ராவும் தினேஷும் வாதிப்பதாகவே தொடங்கியது.

விசித்ராவிடம் ‘உங்களுக்கு அப்போம் சப்போர்ட்டுக்கு யாரும் வரல, அதான் நியாயம் கிடைக்கல. இப்போம் அப்படி எல்லாம் இல்லை’ என தினேஷ் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் பெரிய பஞ்சாயத்தை கிளப்பும் மாயா – பூர்ணிமாவே இந்த விசித்ரா vs தினேஷ் பஞ்சாயத்தை தீர்க்க முயன்றது புதிதாக இருந்தது. ஒரு வகையில் தந்திரமாகவும் இருந்தது. அப்படி மாயா பேசிய போதும், ‘அவங்க இதை பேசு பொருளா ஆக்கனும்னு செய்றாங்கன்னு தோணுது’ என சொன்னது மிகவும் அபத்தமான கருத்தாக இருந்தது என்பதே உண்மை. இதைத் தொடர்ந்து ஒன்றும் இல்லாத காரணத்திற்காக பூர்ணிமா – மாயா இடையே வாக்குவாதம் ஏற்பட்ட ஒரு ‘கண்டெண்ட்’ஐயும் காண முடிந்தது.
மன்னிக்கவும்…இந்த ’கண்டெண்ட்’ என்கிற வார்த்தை பிக் பாஸில் தடை செய்யப்பட்ட வார்த்தையாம். அதை பயன்படுத்தினால் மியூட் செய்யப்படுகிறது. மேலும், அதை சொல்லக் கூடாது என ஹவுஸ்மேட்ஸிடமே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது அப்படி என்ன தவறான வார்த்தை என விளங்கவில்லை, ’ஆண்டவர்’க்கே வெளிச்சம்.
அதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் கேப்டன்சி டாஸ்கிற்கு மணியும் விஷ்ணுவும் இப்போதே திட்டம் தீட்டுகின்றனர். அதில் ‘பருத்தி மூட்டையை’ முதலில் வீட்டிலிருந்து எறிய வேண்டும் என ‘டைட்டில் வின்னர்’ சரவண விக்ரமை அவமதித்த செயலை நிச்சயம் அவரது அகில இந்திய ஆர்மி எளிதில் விடாது.
இந்த வாரத்தின் ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்கை பிக் பாஸ் அறிவித்தார். மேலும், அதில் தோற்றால் வீட்டில் இருந்து சர்க்கரை மற்றும் அது சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்ததும் பூர்ணிமா மற்றும் பிற ஸ்மால் பாஸ் வீட்டார் சர்க்கரை பதுக்கி வைக்கத் தொடங்கினர். இந்த டாஸ்கில் பிக் பாஸ் வீட்டார் தோற்கவே, சர்க்கரை பொருட்களை வீட்டின் கேப்டன் தினேஷ் பறிமுதல் செய்ய வேண்டும் என பிக் பாஸ் ஆணையிட்டார்.
விசித்ராவின் மாத்திரை கவர்களில் சில சர்க்கரையை கண்டெடுத்த தினேஷ், அவர் தான் அத்தனை சர்க்கரையையும் திருடி இருக்கிறார் என எண்ணி அவரை கடுமையாக திட்ட ஆரம்பித்தார். ‘உங்க வயசுக்கு இந்த மாதிரி சர்க்கரைய எல்லாம் திருடலாமா..?’ ‘விதி மீறல் விசித்ரா’ போன்ற வார்த்தைகளை வீசினார் தினேஷ். அதில் விசித்ரா மீது அவருக்கு இருந்த தனிப்பட்ட வெறுப்பும் கொஞ்சம் தென்பட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த விதி மீறல் நடவடிக்கையால் வழக்கம் போல் சமையல் கேஸ் கட் ஆனது. மொத்த வீடும் சாப்பிட முடியாமல் போனது. இதனால் கடுப்பான நிக்ஷன், ‘இதே வேலையா போச்சு உங்களுக்கு’ என கொந்தளிக்க, அவரது வாயையும், பசியையும் பிரெட்டை தந்து அடைத்தார் பூர்ணிமா.

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டு, பதுக்கி வைத்திருந்த சர்க்கரையை ஸ்டோர் ரூமில் வைத்த பின்னர் மீண்டும் கேஸ் ஆன் ஆனது. இந்த சர்க்கரை பதுக்கிய விஷயத்திற்கும் விசித்ராவிற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கூறியும் விசித்ராவிடம் மன்னிப்பு கேட்க மறுத்தார் தினேஷ். ‘நீங்க எல்லாரும் என்ன வைச்சி காமெடி பண்ணி, அவங்கள திருடின்னு சொல்லுவீங்க. நான் அவங்கள திட்டுவேன். இப்போ நான் அவங்க கிட்ட சாரி கேட்கணுமா..? நீங்க தான் அவங்க கிட்ட சாரி கேட்கணும்’ என பிடிவாதமாக இருந்தார்.
அடுத்ததாக வீட்டில் பாத்ரூம் கிளீனிங், ஹவுஸ் கிளீனிங் போன்ற அணிகளை கேப்டன் தினேஷ் பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டார் பிக் பாஸ். இந்த அணிகளை தன் படுக்கையை ஒழுங்காக வைக்காதவர்கள், வேக்கப் பாடலுக்கு ஆடாதவர்கள் போன்றவர்களை வைத்து பிரிக்க வேண்டும் எனவும் கூறினார்.
அதன்படி ஹவுஸ் கிளீனிங் அணியில் அக்ஷயா, ஜோவிகா, விசித்ரா, நிக்ஷன் என பிரித்தார். அதை ஏற்காத ஜோவிகாவும் விசித்ராவும் சிறிது நேரம் கேப்டனிடம் வாதித்தனர். ‘நான் தான் ஒழுங்கா படுக்கைய வைச்சிருக்கேன்னு வீடே எனக்கு சான்றிதழ் தந்துருக்கு’ என்கிறது போல ஒரு புறம், ஜோவிகாவும், என்னால ஏற்க முடியாது என விசித்ராவும் முரண்டு பிடித்தனர்.
பின், ‘எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன். நீங்க இப்படி தான் இத்தனை நாளா இருக்கீங்கன்னு நான் சொல்லல’ என தினேஷ் கொஞ்சம் இறங்கி வந்து வாதத்தை முடித்தார். மறுபக்கம், ‘விசித்ரா அம்மா ஏன் பொய் சொல்றாங்க? அவங்க படுக்கை ஒழுங்கா இல்லாம இருக்குறத நானே பார்த்திருக்கேன்’ என அர்ச்சனா கூல் சுரேஷிடம் கூறுவதாக இந்த எபிசோட் நிறைவானது.
– ஷா Bigg boss Tamil 7 Day 52
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
