பிக் பாஸ் சீசன் 8 : ஓரம் கட்டப்படுகிறாரா சவுந்தர்யா?

Published On:

| By christopher

Bigg Boss Season 8: is soundarya avoid by housemates?

புரோமோவிற்கு கண்டெண்ட் அளிப்பதற்காக நடத்தப்பட்ட நேற்றைய கைகலப்பு நாடகத்தால் வீட்டில் ஏற்பட்ட பின் பாதிப்புகளின் தொடர்ச்சியாகத் தொடங்கியது இன்றைய எபிசோட்..

ஒரு பக்கம், கன்ஃபசன் ரூம் போக வேண்டும் என்கிற கோரிக்கையை பவித்ரா வைக்க, ‘இதை நாங்க கண்டெண்ட்காக தான் பண்ணோம். இதுல பாதிப்பு அடைஞ்சோம்ன்னு சொன்னீங்கன்னா.., அதான் கேம்’ என சொல்லி சலசலப்பை முடித்தார் ரவீந்தர். மறுபக்கம், 24×7 லைவில் மூலைக்கு மூலை உள்ள கேமராக்களில் தான் செய்த பிராங்கிற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார் ரஞ்சித்.

இன்றைக்கான வேக்கப் சாங் ஒலிக்க…, ஹவுஸ்மேட்ஸுடன் ரவீந்தரும் சேர்ந்து ஆடும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து, முதல் டாஸ்காக ஒரு கொழுத்திப் போடும் டாஸ்க் என நினைத்துக்கொண்டு ஒரு டாஸ்கை அறிவித்தார் பிக் பாஸ். அதாவது, இந்த வாரம் யார் வெளியே போவார் என ஹவுஸ்மேட்ஸ் அவரவரின் பார்வையில் ஒருவரை சொல்ல வேண்டும். சரி, அப்படி அதிக நபர்களால் சொல்லப்படும் நபருக்கு எதுவும் புதிய டாஸ்க் உண்டா? என நீங்கள் கேட்டால் , இல்லை.

சென்ற சீசன்களைப் போல் ஜெயிலுக்கு செல்வாரா? எனக் கேட்டால், இல்லை. அவர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுமா எனக் கேட்டால், அதுவும் இல்லை. பின்னர் எதற்காக இந்த டாஸ்க்? ஹவுஸ்மேட்ஸ் இடையில் கொழுத்திப் போடுகிறாராம்.

ஏற்கனவே நடந்த பிராங்கால் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதை மீண்டும் ட்ரிகர் செய்யும் வகையில் ஒரு டாஸ்கை தந்தால் தானே ஒவ்வொருவரின் உண்மை முகம் வெளி வரும்? சண்டையும் நடந்தேறி டிஆர்பி எகிறும். அட, பிராங்கை கண்டு ஏமாந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் பரிசாவாவது இருந்து போகட்டுமே? சரி, ஐடியா இல்லாத பிக் பாஸ்!

ஆனால், அவர் நினைத்தது போல் பெரிய சலசலப்பு எதுவும் இந்த டாஸ்கால் வீட்டிற்குள் நடந்துவிடவில்லை. பிராங்கில் இமேஜ் சற்று டேமேஜ் ஆனதை உணர்ந்த ரவீந்தரும், ரஞ்சித்தும் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு சலசலப்பை முற்றிலும் முடிக்க முயன்றனர். மறுபக்கம் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸால் இந்த வாரம் வெளியேறுவார் என சொல்லப்பட்ட சவுந்தர்யா, தான் கார்னர் செய்யப்படுவதாக உணர்ந்து, அனைவரையும் அழைத்து பஞ்சாயத்து பேசினார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட இந்த எபிசோடிற்கான அந்த பட்டிமன்றம் டாஸ்கில் ‘சிறந்த பெற்றோர்களாக இருப்பது ஆண்களா? பெண்களா? என்கிற தலைப்பில் இரு அணியினருக்கு இடையே விவாதம் நடந்தது. அதில் ஜாக்குலின் பேசிய ஒரு கருத்துக்கு ஆண்கள் அணியை சேர்ந்த அருண் மாற்று கருத்து சொல்ல அது கொஞ்சம் விவாதமானது. அதைத் தொடர்ந்து ‘கணவன் இல்லாத பெண்களை அட்வாண்டேஜாக சில ஆண்கள் அணுக முயற்சிக்கிறார்கள்’ என தர்ஷா குப்தா சொன்னதற்கு ‘நீங்க ஏன் அட்வாண்டேஜ் கொடுக்குறீங்க’ என கேட்ட ஜெஃப்ரிக்கு பக்குவமாக புரிய வைத்த பெண்கள் அணியின் அணுகுமுறை சிறப்பு. ஆனால், ‘அறியாத பிள்ளை தெரியாம பேசிட்டேன் ‘ என ஜெஃப்ரி கூறியது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து.

 

இடையில் ஆண்கள் அணியினரிடம் தேவையே இல்லாமல் தர்ஷா குப்தா போட்ட பச்சை மிளகாய்க்கான சண்டை அவசியமே இல்லாத ஒன்று. அதிலும், தவறை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு ‘திருடுறீங்களா..? திருடி சாப்டுறீங்களா..?’ என்றெல்லாம் ஆண்கள் அணியை பார்த்து கேட்டது சரி அல்ல. ஆனால், அதை மிக சகஜமாக கையாண்டனர் ஆண்கள். ஆக, தர்ஷா குப்தா வீட்டிற்குள் பிடுங்கிய மற்றொரு தேவை இல்லாத ஆணி இது.

முதல் சீசனின் கணேஷ் வெங்கட்ராமனை நினைவுபடுத்தும் வகையில் ரஞ்சித் யோகா செய்த காட்சியை கேமரா மேன் ஃபோகஸ் செய்தது ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை நமக்கு கடத்தியது. சுனிதாவுக்கும் ஜாக்லினுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு வளர்ந்துகொண்டே போவதை வீட்டிற்குள் பார்க்க முடிகிறது. ‘அவ பேசுறதே சண்டைக்கு கூப்டுற மாதிரி இருக்கு. அவளுக்கும் எனக்கும் இந்த வீட்டில் ஒத்துவராது’ என சுனிதா புறணி பேசியது நடக்கவிருக்கும் ஒரு பனிப்போருக்கான முன்னோட்டம் என்றே தோன்றுகிறது. ஆனால், இதுபோன்ற இன்னும் சில பனிப்போர்கள் வீட்டில் வருவதற்கான சான்றுகள் நமக்குத் தெரிகிறது.

இறுதியில் ரஞ்சித், ஜாக்லின் போல் நடித்துக் காட்டுகிறார் விஷால். அதோடு இன்றைய எபிசோட் நிறைவாகிறது. ஆக, எந்த வித பரபரப்பும் இல்லாமல் இருந்த இந்த எபிசோட் பெரிதாக நமக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாவிடினும் சில ஹவுஸ்மேட்ஸ்களின் பார்வைகளை ஓரளவிற்கு பட்டிமன்றம் டாஸ்கில் பார்க்க முடிந்தது. குறிப்பாக அருண் பேசிய கருத்து, வீட்டில் காணாமல் போன ஹவுஸ்மேட்ஸ்களில் மிக முக்கியமானவர் அவர் தான். ஆக, இந்த வார இறுதியில் வி.சே வின் அணுகுமுறையே பல போலி முகங்களை தோலுரிக்கும் என நம்புவோம். காத்திருப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

மீண்டும் மீண்டுமா?: ரூ.60,000 தாண்டிய தங்கம் விலை!

நிதி கூட்டாட்சியை சிதைக்கும் பாஜக அரசு : நிதி பகிர்வுக்கு ரவிகுமார் எம்.பி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share