பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டு பலரையும் கவர்ந்த போட்டியாளர்களின் ஒருவர் ஜனனி (பிக் பாஸ் இரண்டில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்துக்கு வந்த ஜனனி அய்யர் வேறு.)
இலங்கைத் தமிழ்ப் பெண்ணான ஜனனி, தனது மண் மனம் மாறாத ஈழத் தமிழ்ப் பேச்சு, குழந்தைத்தனமான சிரிப்பு, குடும்பப்பாங்கான தமிழ் முகம் இவற்றால் பலரையும் கவர்ந்தார்,
எனினும் எழுபதாவது நாள் பிக் பாஸ் சீசன் 6 இல் இருந்து வெளியேறிய போது அதற்காக வருத்தப்பட்டவர்கள் பலர்.
ஜனனிக்கு விஜய்யின் அன்பும் கிடைத்தது. பிக்பாசில் இருந்து வெளியே வந்த உடன் அவரை விஜய் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் அதன் விளைவாக விஜய்யின் லியோ படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கேரக்டரில் நடித்தார் ஜனனி. ஆனால் அது ஜனனிக்கு பெரிதாக உதவவில்லை.
அதன் பின்னர் அவர் நடிப்பதாக சில படங்கள் அறிவிக்கப்பட்டு அவை எடுக்கப்பட்டனவா ? வெளிவந்ததா என்பதே கேள்விக்குறிதான்.
இந்த நிலையில் இப்போது ஆல் பாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா என்பவர் தயாரிக்கும் ஆல் பாஸ் படத்தை மைதீன் இயக்குகிறார்.
படம் பற்றிக் கூறும் மைதீன், “ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த படம் இது. வடசென்னை என்றாலே அடிதடி வெட்டு குத்து, ரத்தம் பகை கொலைன்னு தமிழ் சினிமாவில் காட்டி இருக்காங்க முதல்முறையா இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.
அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள். ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறது, அது என்ன டெஸ்ட் அதில் பாஸ் ஆனார்களா இல்லையா என்பதே இந்த படம்” என்கிறார்.
இந்த படமாவது ஜனனிக்கு ஜனங்களின் ஆதரவு கிடைக்கட்டும்.
— ராஜ திருமகன்
