நேற்றைய எபிசோட் வீட்டுப் பணிக்கான டாஸ்க் அறிவிப்பில் தொடங்கியது. பலூன் கத்திகள் ஒரு கையில், பீட்சா அட்டை பாக்ஸ் ஒரு கையில் என வைத்துக்கொண்டு இரு அணியினரும் கத்தி சண்டை போட வேண்டும். அதில் யாருடைய அட்டை பாக்ஸ் விழுகிறதோ அவரே தோற்றவர்.
இந்த டாஸ்க்கில் ஆண்கள் அணி வெற்றி பெற, இந்த வாரமும் பெண்கள் அணியே வீட்டுப் பணி செய்ய நேரிட்டது. அதைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசனின் ‘டைட்டில் வின்னர்’ அருண், சத்யாவிற்கு தரும் சில உபதேசங்களைக் காண முடிந்தது.
‘சவுந்தர்யா நம்ம டீம்ல இருந்துட்டு கேர்ள்ஸ் டீம பலி வாங்குறேன்னு சொல்றா.., அவ கிட்ட போய் சொல்லு, நம்ம ஒன்னும் அவ்வளவு முட்டாள் இல்ல, அவ ஒன்னும் அவ்வளவு புத்திசாலி இல்லன்னு..’ என அருணானந்தா சத்யாவிற்கு உபதேசங்களை சொல்ல.., இடைமறித்து முத்துக்குமரன் வர…, அப்படியே அடுத்த காட்சிக்கு கட் ஆனது. நான்காவது வாரமாகியும் வீட்டில் தண்ணி கேன் போட வந்தவராக இருக்கும் நமது ‘டைட்டில் வின்னர்’ சீரியஸாக பேசினால் கூட சிரிப்பு தான் வருகிறது.
இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ’ஆள் மாறாட்டம்’ என்கிற டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் மற்ற ஹவுஸ்மேட்ஸாக நடித்து காட்ட வேண்டும். இது வழக்கமாக வழங்கப்படும் டாஸ்க் என்றாலும், எந்தெந்த ஹவுஸ்மேட்ஸாக யார் நடிக்கப் போகிறார் என்பதையும் பிக் பாஸே அறிவித்தார். ஏனெனில், இந்த டிப்ளமேட்டிக் ஆசாமிகள் இஷ்டத்திற்கு கேரக்டர்களை எடுத்து சொதப்ப நேரிட்டால் பின்ன சரிந்து வரும் பிக் பாஸ் டி.ஆர்.பிக்கு யார் பதில் சொல்வது.
அந்த வகையில், சுனிதாவாக சவுந்தர்யா, சவுந்தர்யாவாக ஆனந்தி, ஜெஃப்ரியாக ரஞ்சித், ரஞ்சித்தாக முத்துக்குமரன், அன்ஷிதாவாக ஜாக்குலின், ஆனந்தியாக சாச்சனா, தீபக்காக ஜெஃப்ரி, அருணாக சத்யா, சத்யாவாக அருண், விஷாலாக தீபக், பவித்ராவாக தர்ஷிகா, தர்ஷிகாவாக பவித்ரா என கேரக்டர்கள் கொடுக்கப்பட்டது.
அதில் நமது மனதில் பதிந்தது, ரஞ்சித், ஆனந்தி, சவுந்தர்யா, விஷால், ஜாக்குலின் இவர்கள் மட்டுமே. இதில், ஜெஃப்ரியின் கதாபாத்திரமாக மாற மீசையை எடுத்து, பாடி லேங்குவேஜ் கொண்டு வந்து கேரக்டராகவே இருந்த ரஞ்சித், சவுந்தர்யாவின் உடல்மொழி மட்டுமின்றி வாய்ஸையும் சேர்த்து எடுத்த ஆனந்தி, முத்துக்குமரனாக விஷால் இவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்ட கேரக்டரை மிக நேர்த்தியாக நடித்தனர்.
சுனிதாவாக நடித்த சவுந்தர்யா நடித்தார் என்பதை விட சுனிதா மீதான வன்மத்தை கக்கினார் என்பதே அப்பட்டமாகத் தெரிந்தது. அதிலும், ஸ்டேஜில் செய்த பெர்ஃபாமன்ஸ் வன்மத்தின் உச்சகட்டமே. ஆனால், இதையும் கியூட், தலைவி ஆன் ஃபையர், இனி சவுந்தின் ஆட்டம் என்கிற கேப்சன்களோடு சவுந்தின் ராணுவப் படை இன்ஸ்டாவில் போடத் தொடங்கும். ஆம், வாழ்க ஜனநாயகம்!
இந்த டாஸ்க் முடிந்ததும் அதனின் ரியாக்ஷனாக அன்ஷிதா – சுனிதா – ஆனந்தி சேர்ந்து பேசிக்கொள்ளும் காட்சிகளை இதைத் தொடர்ந்து பார்க்க முடிந்தது. ‘பஞ்சயாத்துல ஒரு கொலை விழனும்னே அந்தப் பையன் இப்படி பேசுறான் டா’ என தேவர் மகன் படத்தில் சிவாஜி சொல்வது போல் ‘அவ என்ன ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டா டா’ என சுனிதா சொல்ல, ‘நீ ஜாக்குலின நோட் பண்ணியா..? அவ இந்த டைரக்ட் நாமினேஷன் பண்ணக் கூடியவங்ககிட்ட மட்டும் குளோஸா பேசுற மாதிரி தெரியல’ என புதிய பாய்ண்டை வைத்தார் ஆனந்தி. மறுபக்கம், இதே கருத்தை தர்ஷிகா – ஜெஃப்ரி பேசிக்கொள்ளும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
டைலி டாஸ்க்காக ஒரு கயிறு இழுக்கும் போட்டியின் மற்றோரு வெர்ஷன் போன்ற ஒரு டாஸ்கை அறிவித்தார் பிக் பாஸ். பிசிக்கல் டாஸ்க் என்றாலே பாய்ஸ் டீமில் இறக்கும் கும்கி யானை வேற யாரு? நமது சத்யா தான். ஆண்கள் அணியில் சத்யா, முத்துக்குமரன், ஜெஃப்ரி இறங்க, பெண்கள் அணியில் விஷால், சுனிதா, அடம்பிடித்து கலந்து கொண்ட சாச்சனா இறங்க போட்டி தொடங்கியது.
இந்த டாஸ்கில் சாச்சனாவை இறக்கியதே பெண்கள் அணியின் முதல் தோல்வியாக அமைந்தது. அதுபடியே வழக்கமான பிசிக்கல் டாஸ்க்கில் நடப்பது போல் ஆண்கள் அணியே முழு வெற்றியையும் சுவைக்க.., பெண்கள் அணி வீழ்ந்தது.
இந்த டாஸ்க்கில் பல சலசலப்புகளையும் காண முடிந்தது. குறிப்பாக முத்துக்குமரனின் கழுத்து கயிற்றில் சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்ட போது.., ஜெஃப்ரி – ஜாக்குலின் இடையேயான வாக்குவாதம் போன்றவைகள். ஆனால், ஏற்கனவே சென்ற வாரம் பிசிக்கல் டாஸ்கில் பெண்கள் மீது வன்முறை செலுத்தியதால் கிடைத்த டோஸ்கள் முத்துக்குமரனுக்கு நியாபகம் வர, ‘நாங்க எதுவும் தப்பா நடந்துக்குட்டோமா..?’ என பெண்கள் அணியில் செக் செய்துகொண்டார்.
ஆனால், எபிசோடின் முடிவில் விஷாலிடம் ஆனந்தி, ‘இந்த டாஸ்க்ல எதுக்கு சத்யாவ எறக்கனும்? நாங்க சாச்சனாவ எறக்குனது தப்பு இல்ல, அந்த கேம சுவாரஸ்யம் ஆக்க நீங்க வேற ஆள கூட இறக்கிருக்கலாம் தான..? அது தான கேம்? இங்க ஜெயிக்கிறது தோக்குறது தான் கேமா..? ‘ எனப் பேசியது மிக்க நியாயமான ஒன்றே. ஆனால், இப்படி பேசினால் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நீங்கள் விஷ பாட்டிலாக தோன்றக்கூடலாம், பல சோசியல் மீடியா ராணுவப் படைகளின் தாக்குதல்கள் உங்கள் மீது வரலாம், நீங்கள் பிக் பாஸ் போட்டியில் ஜெயிக்காமலும் போகலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா