சாச்சனாவின் ரீஎண்ட்ரி , ரவீந்தரை ஓரம்கட்டும் ஹவுஸ்மேட்ஸ், ஆண்கள் அணியின் சலசலப்பு என பல சுவார்ஸ்யமான சம்பவங்கள் நடந்த இன்றைய நீண்ட நெடிய பிக் பாஸ் எபிசோடை ஹாட்ஸ்டாரின் விளம்பரங்கள் நிறைந்த லைவில் பார்த்தோம்.
ஆம், இந்த சீசனின் சற்று சுவாரஸ்யமாக அமைந்த எபிசோட் இன்றைய எபிசோட் தான். மகாமிஷி பாடலில் தொடங்கிய வேக்கப் டான்ஸ். அதைத் தொடர்ந்து, நாமினேஷன் ஃப்ரீ பாஸ் என்கிற ஒரு வாய்ப்பை இரு அணிக்கும் தந்தார் பிக் பாஸ்.
அதாவது, இரு அணியை சேர்ந்தவர்களும் தங்கள் அணியைச் சேர்ந்த ஒருவரை தேர்வு செய்து அவருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸை வழங்க வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படும் நபரை அடுத்த வார எவிக்ஷனுக்கு யாரும் நாமினேட் செய்ய முடியாது.
இந்த தேர்வு குறித்த டிஸ்கசனில் வழக்கம் போல் பெண்கள் அணியில் அதிக சலசலப்பைப் பார்க்க முடிந்தது. டாஸ்க், அட்வாண்டேஜ் என எந்த ஒரு அறிவிப்பு வந்தாலும் ‘ஃபைண்டிங் நீமோ’ படத்தில் வரும் வாத்துக் கூட்டம் போல் எனக்கு, எனக்கு என பெண்கள் அணியைச் சேர்ந்த அனைவரும் முந்திக்கொண்டு வந்து அவர்களுக்குள்ளே முட்டிக்கொள்வது இந்த சீசனில் புதிதல்ல.
ஆனால், இம்முறை ஆண்கள் அணியின் டிஸ்கசனும் அவ்வளவு எளிதாக நடந்து முடியவில்லை. ஆனால், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஆண்கள் அணியினர் அருணை தேர்வு செய்தனர். ’என்னால எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது’ என அன்ஷிதாவும், சவுந்தர்யாவும் இழுபறியில் ஈடுபட்டதால் அவர்கள் அணிக்கு வழங்கப்படவிருந்த நாமினேஷன் பாஸை ரத்து செய்தார் பிக் பாஸ்.
சாச்சனா வீட்டுக்குள் இன்றைக்கு ரீஎண்ட்ரி தந்தது வீட்டில் சிலரை ஆச்சர்யப்படுத்தினாலும், பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முக்கியமாக ரவீந்தருக்கு பேரதிர்ச்சி. அதை வெளிப்படியாக தனது கண்களில் காட்டியும் விட்டார். 4 எபிசோடுகளை வெளியில் இருந்து பார்த்து விட்டு தற்போது உள்ளே சென்றுள்ள சாச்சனாவின் தன்னம்பிக்கை, ஆட்டப் புரிதல் பயங்கரமாக மெருகேறியுள்ளது என்பது அவரின் முதல் பேச்சில் இருந்தே தெரிந்தது.
குறிப்பாக, ஆண்கள் அணியின் பலவீனமான ஹவுஸ்மேட்ஸை எல்லோர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டிய சாச்சனா, பெண்கள் அணியின் பலவீனத்தை தனது அணியுடன் தனியாக பேசிய யுக்தி சிறப்பு.
சாச்சனா ரீஎண்ட்ரியைப் பொறுத்தவரை அது நிச்சயம் பிக் பாஸ் வீட்டிற்குள் பல தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், தனது கோப்பையை ‘என் தங்கச்சிக்கு தரேன்’ என அர்ணவ் தந்த சம்பவத்தில் சிவாஜியைக் கடந்து பி.யூ.சின்னப்பா லெவல் நடிப்பு.
சாச்சனா ரீஎண்ட்ரீ ஆண்கள் அணியிடம் சலசலப்பை ஏற்படுத்த தொடங்கியது. குழுவாக அமர்ந்து ’பஞ்சதந்திரம்’ கமல் ‘வீ மஸ்ட் யூஸ் அவர் பிரைன்’ என்பது போல் தன் அணியினருக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார் . ஆனால், ரவீந்தர் பிளான் செய்த பிராங்கிற்கு காரணம் ரஞ்சித்தை எவிக்ஷனிடம் இருந்து காப்பாற்றவே என ரவீந்தர் சொன்ன விஷயத்தை மீண்டும் வீட்டிற்குள் லாவகமாக பேச வைத்தார் சாச்சனா.
அதலால் ஆண்கள் அணிக்குள் ரவீந்தருக்கு எதிராக ஆங்காங்கே சில ஹவுஸ்மேட்ஸ் பேசும் இடங்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக பிராங்கில் ரஞ்சித் சொன்ன, ‘இங்க நீ பாஸ் இல்ல!’ என்கிற வசனத்தை தற்போது நிஜமாகவே சொன்னார். அட, பிராங்கில் சொன்னதும் நிஜம் தான் என்கிறீர்களா…..? சரி அதை விடுவோம்.
இதற்கு அடுத்ததாக வீட்டின் போலி நபர்களை சுட்டிக்காட்ட வேண்டும் என வழங்கப்பட்ட டாஸ்கில் பல ஹவுஸ்மேட்ஸ் ரவீந்தரை தேர்ந்தெடுத்தனர். ரஞ்சித்தையும் மூன்று பேர் தேர்ந்தெடுத்தனர். இந்த டாஸ்கிற்கு பிறகு, ‘நீங்க எப்படி எவிக்ஷனுக்காக ஒரு பிராங்கை நடத்தலாம்’ என கேள்வி எழுப்பினார் விஷால்.
ஆனால், பிராங் நடந்து முடிந்தது இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த எபிசோடில். தற்போது விஷால் கேட்பதற்கு காரணம் சாச்சனா எஃபெக்ட். விஷாலை கண்டெண்ட் தராத பிளேயர் என அவர் கூறியது தான் இந்த ஆவேசத்திற்கு காரணமாக இருக்கக் கூடும்.
அவர் கேட்டதற்கு ரவீந்தர் அளித்த பதில், பலியை அப்படியே தர்ஷிகா பக்கம் மாற்ற நினைத்த முயற்சி என அனைத்துமே நமக்கு சீசன் 4 ல் இருந்த சுரேஷ் தாத்தாவின் ஸ்ட்ராடஜியை நினைவூட்டியது. அதற்கு பிறகு அவர் அழுத காட்சியும் நம்பகத்தன்மையாக இல்லை.
ரவீந்தர் செய்யும் கேம் பிளான் அனைத்துமே ஒருவரை பகடக் காய் ஆக்குவது, மேனிபுலேட் செய்வது என்றே நகர்கிறது என்பது இன்றைய எபிசோடில் மிக அப்பட்டமாகத் தெரிந்தது. குறிப்பாக, பெண்கள் அணியிடமே சாச்சனா குறித்து அவர் பற்ற வைத்த கடைசி காட்சி அதை மேலும் உறுதிப்படுத்தியது.
ஆக, சாச்சனாவின் ரீ எண்ட்ரி ஆண்கள் அணியில் சலசலப்பை மிக தாக்கத்துடன் ஏற்படுத்தியுள்ளது. இதை அந்த அணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது? குறிப்பாக முதல் வாரத்தில் நடந்த இந்த பிரச்சனைகள் குறித்த வி.சே- வின் அணுகுமுறை என்னவாக இருக்கப் போகிறது என்பதற்காக என் போலவே பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதை அடியேன் அறிவேன்.
புதிய தொகுப்பாளரான சேதுபதியின் அணுகுமுறை குறித்து, ஏனைய சுவாரஸ்ய நிகழ்வுகளின் அவரது கருத்து குறித்தும் நாளை பார்க்கலாம்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இன்னும் பாடம் படிக்காத அரசு…ரயில் விபத்தால் கொந்தளித்த ராகுல்