ஹாலிவுட்டின் அடையாளமாகக் கருதப்படும் HOLLYWOOD என்ற போர்டு, லாஸ் ஏஞ்சல்ஸில் நகரிலுள்ள சேன்டா மானிகா மலைத்தொடரில் அமைந்துள்ளது. 45 அடி உயரமும் 350 அடி நீளமும் கொண்ட ஹாலிவுட் சைன் போர்டு, நேற்று நியூஇயர் நாளில் அடையாளம் காணாத நபர் ஒருவரால் HOLLYWeeD என பெயர் மாற்றப்பட்டது. அத்தனைப் பெரிய போர்டில் யார் கை வைத்திருப்பார்கள்? என்ற ஆச்சர்யம் உண்டாகிறதல்லவா? ஃபேஸ்புக்கில் இந்தப்படத்தைப் பார்த்ததும், நமக்கும் அதே ஆச்சர்யமான கேள்வி தான் உண்டானது. இதைப்பற்றித் தொடர்ந்து படித்தபோது இந்த சம்பவம் நடப்பது முதல்முறை அல்ல என்ற தகவலும் கிடைத்தது.
அந்த மிகப்பெரிய ஹாலிவுட் எழுத்துக்களின் பல்வேறு இடங்களில், தொட்டால் அலாரம் அடிக்கக்கூடிய சென்சார் இருக்கின்றது. இருப்பினும் அந்த நபர், எந்த இடத்தில் தொட்டால் அலாரம் அடிக்கும் என்பதை சரியாக தெரிந்துவைத்துக்கொண்டு இந்த வேலையை செய்துள்ளார். இரவு 2 மணியளவில் இதனை செய்ததாலும், அப்போது மழை பெய்துகொண்டிருந்ததாலும் சிசிடிவி வீடியோ பதிவிலும் அந்த நபரினை பற்றிய அடையாளம் ஏதும் கிடைக்கவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த போர்டின் முன்பகுதியில் அதன்மீது ஏறுவதற்கு வாய்ப்புகள் இல்லாததால், பின்புறத்தில் இருந்தே இதனை செய்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினார்.
இதே வேலையை 1976 ஆம் ஆண்டு டேன்னி பைன்குட் என்ற மாணவர் செய்திருக்கிறார். அதுவும் இந்த நாளிலேயே நடைபெற்றிருந்தது குறிப்பிட தக்கது. மிகவும் பாதுகாப்பு நிறைந்த அந்த இடத்தில் ஒரு நபர் இவ்வாறு செயல்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 45 அடி உயரமுள்ள அந்த போர்டில் சென்சார் இல்லாத இடத்தினைக் கண்டறிந்து இந்த வேலையை செய்திருப்பது ஏதோவொரு ஹாலிவுட் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது.