ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை பவானி தேவி இன்று (ஜூன் 19) படைத்துள்ளார்.
சீனாவில் உள்ள வூக்ஸி மாகாணத்தில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 வயதான வீராங்கனை பவானி தேவி பங்கேற்றுள்ளார்.
உலக சாம்பியனை வீழ்த்திய பவானி
பெண்களுக்கான சேபர் பிரிவு காலிறுதி போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பானை சேர்ந்த மிசாகி எமுராவை எதிர்த்து வாள் வீசினார் பவானி தேவி.
முதல் சுற்றில் இருந்தே துணிச்சலாக வாள் வீசிய அவர் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை 15-10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதன்மூலம் இந்தியாவிற்கான வெண்கல பதக்கம் உறுதியான நிலையில் பவானி தேவி அரையிறுதி போட்டிக்கு நுழைந்தார்.
போராடி தோல்வி!
இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், உஸ்பெகிஸ்தானின் சைனாப் தயிபெகோவாவிடம் 15-14 என்ற கணக்கில் போராடி தோல்வியை தழுவினார்.
இறுதிகட்டத்தில் 14-14 என்ற நிலையில் இருந்தபோது, நடுவர் பவானி தேவிக்கு சிவப்பு அட்டை கொடுத்தார். இதனால் சைனாப் தயிபெகோவாக்கு ஒரு புள்ளி எளிதாக கிடைக்க அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பெருமைக்குரிய தருணம்!
எனினும் தனது முதல் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியிலேயே வெண்கலம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்று கொடுத்துள்ளார் பவானி தேவி.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ உலகின் சில முன்னணி வீராங்கனைகளை வீழ்த்துவதே எனது கனவாக இருந்தது. மிசாகிக்கு எதிரான வெற்றியை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆசிய சாம்பியன்ஷிப்பில் நாட்டிற்காக பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய தருணம்” என்று பவானி தேவி தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
இந்த வரலாற்று சாதனைக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர், “ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சி.ஏ.பவானி தேவிக்கு வாழ்த்துகள். ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இது என்பதன் மூலம் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
உலக அரங்கில் உங்களது இடைவிடாத வெற்றிகள், தமிழ்நாட்டை வாள்வீச்சில் அதிகார மையமாக மாற்றுகிறது. SDAT இன் ELITE விளையாட்டு வீரர்கள் ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக பவானி தேவி இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்” என்று வாழ்த்தியுள்ளார்.
இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வருகிறார் பவானி தேவி.
கிறிஸ்டோபர் ஜெமா
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது… டிஜிபிக்கு பறந்த உத்தரவு!
அமைச்சரின் குடும்பத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
