தி டோர் : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

bhavana the door movie reivew mar 28

பிகினிங்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா..!?

சில திரைப்படங்களின் கதைக்கரு ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆனால், அதற்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத டைட்டில், காட்சிகள் என்று ஒட்டுமொத்தப்படமும் வேறொரு திசை நோக்கி நகர்ந்திருக்கும். bhavana the door movie reivew mar 28

இப்படியொரு எண்ணம் எழுவதற்கும், பாவனா நாயகியாக நடித்துள்ள ‘தி டோர்’ படத்திற்கும் என்ன சம்பந்தம்?

இன்னொரு ‘பேய்க்கதை’! bhavana the door movie reivew mar 28

மித்ரா (பாவனா) சென்னையிலுள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் ‘ஆர்க்கிடெக்ட்’ ஆக இருந்து வருகிறார். புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே இருக்கும் பழைய கோயிலொன்றை இடிக்குமாறு அங்கிருக்கும் பணியாளர்களிடம் சொல்கிறார். அவர் சொன்னபடியே அது இடிக்கப்படுகிறது.

அந்த தருணத்தில், மதுரையில் வசித்துவரும் அவரது தந்தை (நந்து) மொபைலில் பல முறை அழைக்கிறார். அதனை ஏற்காமல் நிராகரிக்கிறார் மித்ரா.

அன்றிரவு மித்ராவின் தந்தை சாலை விபத்தில் மரணமடைகிறார். அவர் மீது விழும் நீர்த்துளியொன்று பனிக்கட்டியாக பெருகி முடக்குவதால் அந்த விபத்து நிகழ்கிறது.

தந்தையின் திடீர் மரணம் மித்ராவை உருக்குலைக்கிறது. அந்த நினைவால் நான்கு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருக்கிறார்.

நிறுவன உரிமையாளர் வேல்முருகன் (ஜெயபிரகாஷ்) வற்புறுத்தி அழைக்கவே, அவருடன் சென்னைக்குச் செல்கிறார். அவர் ஏற்பாடு செய்யும் வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் மரியா (சிந்தூரி) எனும் பெண்ணுடன் தங்குகிறார்.

மித்ராவைக் கண்டாலே மரியாவுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், அந்த வீட்டில் நிகழும் சில விஷயங்கள் அவரது போக்கை மாற்றுகிறது. மெதுவாக, மித்ரா உடன் அவர் நட்பு பாராட்டத் தொடங்குகிறார்.

சில நாட்கள் கழித்து, வித்தியாசமான ஏதோ ஒன்று தன்னை பீடித்திருப்பதாக உணர்கிறார் மித்ரா. அதனைத் தனது தோழியிடம் (பிரியா வெங்கட்) கூறுகிறார்.

அமானுஷ்யமான நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யும் நபர் ஒருவரை (ரமேஷ் ஆறுமுகம்), அந்த தோழி மித்ராவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த வீட்டில் நுழைந்ததுமே நுட்பமாகச் சிலவற்றை அந்த நபர் உணர்கிறார்.

ஒரு தாய், பதின்ம வயது மகளின் ஆவி மித்ராவின் அருகில் இருப்பதை உணர்கிறார். அது மட்டுமல்லாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக மித்ராவின் பின்னால் அவை திரிவதாக எண்ணுகிறார். அது மட்டுமல்லாமல, அவரது தந்தையின் இறப்புக்கும் அவற்றுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறுகிறார்.

அதனை நம்புவதா, வேண்டாமா என்று குழம்புகிறார் மித்ரா. அனைத்தையும் தாண்டி, கட்டுமானப் பணி நடக்குமிடத்தில் இருந்த கோயிலை இடித்தபிறகே இப்படியொரு நிலைக்கு ஆளானதை அவரும் உணர்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, இடிக்கப்பட்ட கோயில் யாருக்குச் சொந்தமானது? கட்டுமானப் பணி நடந்த இடத்தில் ஏற்கனவே இருந்த வீடு யாருடையது என்று ஆராய முற்படுகிறார். அந்தச் செயல்பாட்டில் மித்ராவின் தோழி, அவரது நண்பர் மட்டுமல்லாமல் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் (கணேஷ் வெங்கட்ராமன்) உதவுகிறார்.

கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படும் இருந்த இடத்தில் ஏற்கனவே வசித்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கும் இந்த ஆவிகளுக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேள்விகளுக்கு மித்ரா பதில் அறிந்தாரா என்று சொல்கிறது ‘தி டோர்’ படத்தின் மீதி.

தமிழ் சினிமாவில் இன்னொரு பேய்க்கதையை இப்படம் சுமந்து நின்றாலும், ஒரு ‘ஐடியா’வாக இது சுவாரஸ்யம் தருவது என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை.

கதறவிடும் ‘திரைக்கதை!

படம் முழுக்க மித்ரா எனும் பாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது. அதற்குப் பொருத்தமான வகையில் நாயகி பாவனாவின் நடிப்பு அமைந்துள்ளது. கொஞ்சம் குண்டான உடல்வாகு, அதீத ஒப்பனை ஆகியவற்றைத் தாண்டி ஒரு இளம்பெண்ணாகத் தெரிய மெனக்கெட்டிருக்கிறார்.

பாவனாவின் பெற்றோராக ஸ்ரீரஞ்சனியும் நந்துவும் நடித்துள்ளனர். சகோதரியாக வருபவர் இரண்டொரு காட்சிகளில் வசனம் பேசிவிட்டுக் காணாமல் போகிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் கணேஷ் வெங்கட்ராமன், இத்தனை ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் இருந்தும் வசனங்களைக் கடித்து மென்றிருக்கிறார். அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

இவர்களோடு ஜெயபிரகாஷ் மற்றும் சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், வில்லனாக வரும் கபில் வேலவன் மற்றும் பிளாஷ்பேக் காட்சியில் வரும் சங்கீதா உட்படச் சுமார் ஒரு டஜன் பேர் இதில் நடித்திருக்கின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் என்ற எண்ணம் எழவிடாமல் பார்த்துக் கொள்கிறது கௌதம் ஜியின் ஒளிப்பதிவு.

கலை இயக்குனர் கார்த்திக் சின்னுடையான் பிளாஷ்பேக் காட்சிகளின் பின்னணியை அமைத்த விதத்தில் ஈர்க்கிறார்.

முன்பாதி முழுக்கப் பேய் குறித்த பயத்திலேயே கழிந்துவிடும் வகையிலுள்ள திரைக்கதையைச் செப்பனிட மறந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அதுல் விஜய். பின்பாதியிலோ ஏகப்பட்ட காட்சிகளைச் சுருக்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் அடங்குமாறு திணித்திருக்கிறார்.

வருண் உன்னியின் பின்னணி இசை நம்மைப் பயமுறுத்துகிறது. ஆனால், புதிதாக எதையும் நாம் இசையில் உணர முடிவதில்லை.

தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் பயந்து மிரள வேண்டுமென்ற நோக்கில் இப்படத்தில் ஒலி வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றபடி விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட இதர நுட்பங்களின் தரம் படத்தோடு நாம் ஒன்றுவதில் தடையாக அமையவில்லை.

இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெய்தேவ். இவர் பாவனாவின் சகோதரர்.

எதனால் பாவனா இப்படத்தில் நடித்தார் என்பதற்கான காரணம் தெரிந்துவிடுவதால், இதன் காட்சியாக்கம் எப்படியிருக்கிறது என்பதை மீண்டும் அசைபோட வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்த்தால், நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே.

பார்த்திபன் இயக்கிய ‘இவன்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் டி.பி.கஜேந்திரன் ‘நான் நிக்குறேன்.. நிக்குறேன்..’ என்று கத்துவார். கிட்டத்தட்ட அப்படியொரு தொனியில் இப்படத்தின் முன்பாதியில் நம்மிடம் கதறுகிறது திரைக்கதை. அதற்குச் சேர்த்து வைத்தாற்போலப் பின்பாதியில் ஏகப்பட்ட காட்சிகளை அவசர கதியில் அடுக்கி நம்மைக் கதறவிட்டிருக்கிறது.

ஒரு பேய் படத்தை உருவாக்குவதற்கு ஏற்றதொரு கதை இப்படத்தில் இருக்கிறது. ஆனால், அதனைத் திரையில் ‘ஸ்டைலிஷாக’ சொல்ல நிறையவே வாய்ப்புகள் இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். அதனால், ‘பிகினங்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா’ என்று சொல்லியவாறே வெளியே வர வேண்டியிருக்கிறது.

அனைத்தையும் மீறி ரியல் எஸ்டேட், வீடு வாங்கல் விற்பனை, கட்டுமானப் பணி தொடர்பான காட்சிகள் உள்ளன என்ற காரணத்திற்காக மட்டுமே ‘தி டோர்’ எனும் டைட்டிலை இயக்குனர் வைத்தாரா என்ற கேள்வி மட்டும் நம் மனதை விட்டு அகன்றபாடில்லை. அந்த சந்தேகத்தை மட்டும் ‘தி டோர்’ படக்குழு தீர்த்து வைத்தால் தேவலை..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share