தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, இலக்கிய உலகின் உயரிய விருதான பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. bharathiya bhasha parishad announced for s ramakrishnan
இந்திய மொழிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பாரதிய பாஷா பரிஷத் இலக்கிய அமைப்பு 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தங்களது மொழிகள் மூலம் இந்திய இலக்கியத்திற்கு பங்களித்த சிறந்த இந்திய எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக பாரதிய பாஷா விருது வழங்கி வருகிறது. இலக்கிய உலகில் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதுடன் 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான பாரதிய பாஷா விருது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 1 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.
புதினம், சிறுகதை நாவல் என நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ். ராமகிருஷ்ணன், தனது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், பிரெஞ்சு, ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.