தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை அவர் காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் விஜய் இன்று காலை பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “எனது 50 ஆண்டுகால நண்பர் பாரதிராஜா. என்னை வாழ வைத்தவர். திரையுலகில் யாருக்கேனும் பிரச்சினை என்றால், அதற்காக முதல் குரல் பாரதிராஜாவிடமிருந்துதான் வரும். அவரது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீடிக்கும்.
விமர்சனங்களை வெளிப்படையாகக் கூறக்கூடியவர்; என்னைப் பற்றிப் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். பிடித்தால் பிடித்திருக்கிறது, இல்லையென்றால் இல்லை என்று மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடுவார்.
‘உன்னை எனக்குப் பிடிக்கும், ஆனால் உன் நடிப்பைப் பிடிக்காது’ என்று என்னைப் பற்றி நேரிடையாகவே விமர்சனம் செய்வார். அவரோடு இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி என எல்லோருடனும் நட்போடும் அன்போடும் இருந்தவர்; அனைவரிடத்திலும் உரிமையோடு பழகக்கூடியவர். உடல்நிலை சரியாகித் திரும்பி வந்துவிடுவார் என்று நம்பினேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாகக் கூறினார்.
மேலும், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேசுவதற்கு ஒன்றும் இல்லை.. பேசுவதற்கு என்ன இருக்கிறது? அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
