காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று (செப்டம்பர் 16) 9-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை கேரள மாநிலம் கொல்லத்தில் தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடா யாத்ரா, ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
இந்த ஒற்றுமை நடைபயணத்தில், 150 நாட்கள், 3,500 கி.மீ தூரம் வரை நடைபயணம் செய்ய உள்ளனர்.

செப்டம்பர் 7- ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற்றது.
செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கினார். 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் செய்யும் அவர், 22 மாவட்டங்களில் பயணிக்கிறார்.
நேற்று முன் தினம் (செப்டம்பர் 14) 8-வது நாள் நடைபயணம் திருவனந்தபுரத்தில் தொடங்கி சாத்தனூரில் பொதுக்கூட்டத்துடன் முடிவடைந்தது. இதுவரை ராகுல் காந்தி 150 கி.மீ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தி மற்றும் அவருடன் நடந்து செல்பவர்களின் கால்களில் ஏற்பட்ட கொப்புளங்களால் நேற்று (செப்டம்பர் 15) நடைபயணம் செய்ய முடியவில்லை. இதனால் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டது.
இன்று (செப்டம்பர் 16) காலை 6 மணி முதல் தொண்டர்களுடன் உற்சாகமாக கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
