–மணியன் கலியமூர்த்தி
நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற சில பொதுத்துறை நிறுவனங்களில் இப்போது கவனம் பெற்றிருக்கிறது பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 1970 ஜூலை 16 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இணைக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் மினிரத்னா நிறுவனமாக இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் இந்திய ஆயுதப்படைகளுக்கு ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை தயாரித்து வழங்குவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் (OEMs) இணைந்து செயல்படுகிறது.
ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் அதன் பெரும்பாலான சேவைகளை இந்திய ஆயுதப்படைகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் அதன் பங்குகளை பட்டியலிட்டதன் மூலம் BDL பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறியது.
2024 மே 24 வர்த்தக இறுதியில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 55,992.42 கோடியாக உள்ளது. இந்நிறுவனம் சுமார் 20,000 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டரை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதன் சந்தை மதிப்பு உயர்ந்து சந்தையில் இதன் பங்கு ஆரோக்கியமான வளர்ச்சிப் பார்வையை கண்டுள்ளது.
மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் பாரத் டைனமிக்ஸ் வருவாய் 2,350 கோடியை ஈட்டியதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் அது அறிவித்த 2,489 கோடியை விடக் குறைவான வருவாயை ஈட்டியதாக தெரிவித்தது.
இந்நிறுவனத்தின் பங்குகள் ஸ்பிலிட் செய்ய உள்ளதாக நிறுவன மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில் பாரத் டைனமிக்ஸ் (BDL) பங்கு பிரிவிற்கு முன்னதான வியாழக்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் 6 சதவீதம் உயர்ந்து புதிய உச்சமாக 2,813.75 ரூபாயை எட்டியது.
அதன்படி இந்நிறுவன பங்கின் முகமதிப்பு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக ஸ்பிலிட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான மே 24 ஆம் தேதி பாரத் டைனமிக் பங்குகள், கடந்த ஒரு வருடத்தில் இல்லாத புதிய உச்சமாக 1,650 ரூபாயைத் தொட்டு ஒரே நாளில் 17.3% லாபத்தைப் பதிவுசெய்தது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் வருகிற 30 மே 2024 வியாழன் அன்று நடைபெறும் என்று BDL அறிவித்துள்ளது.
2014 மார்ச் 31 நிலவரப்படி இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அடிப்படையில் மத்திய அரசு 74.93 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
சில்லறை முதலீட்டாளர்கள் 8.07 சதவீத பங்குகளையும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் 7.93 சதவீதம், காப்பீட்டு நிறுவனங்கள் 3.95 சதவீதம், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 2.95 சதவீதம் பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் பட்டியலில் இந்த நிறுவனத்தின் பங்கை பரிந்துரைக்கின்றன பல்வேறு தரகு நிறுவனங்கள்.
முக்கிய அறிவிப்பு!
பங்குச்சந்தை முதலீடுகள், முதலீட்டு அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு திட்டம் சார்ந்த ஆவணங்களையும்; முதலீட்டு ஆலோசகர்களின் வழிகாட்டலை பெறுவது நல்லது. முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது இந்த கட்டுரை.
கட்டுரையாளர் குறிப்பு:
மணியன் கலியமூர்த்தி, பிரபல தனியார் வங்கியில் மாநில அளவிலான முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பங்குச் சந்தை விவகாரங்கள் குறித்து பல வருடங்களாக கட்டுரைகள் எழுதி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காவேரி கூக்குரல்… ஈஷாவுக்கு அமைச்சர் நேரு புதிய கோரிக்கை!
மழைக்கு ரெஸ்ட்… மீண்டும் கொளுத்தப்போகும் வெயில்: வானிலை மையம் அப்டேட்!