டிலிமிட்டேஷனில் பஞ்சாப்புக்கு என்ன பிரச்சனை? – பட்டியல் போட்ட பகவந்த் மான்!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. bhagwant mann addressed problems

இந்த கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசும்போது, “தொகுதி மறுவரையறைப் பிரச்சினை தொடர்பாக நம் அனைவரையும் ஒன்றிணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி மற்றும் எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக நாங்கள் உங்களுக்கு 100 சதவிகிதம் ஆதரவளிக்கிறோம்.

நாட்டில் தற்போது 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. பஞ்சாப்பில் 13 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இது மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 2.39 சதவீதமாகும்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தற்போதைய எண்ணிக்கையை 850 ஆக அதிகரித்தால், பஞ்சாபில் மேலும் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் சேர்க்கப்படும்.

இதன் மூலம் பஞ்சாபில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கும். அந்த வகையில், 850 நாடாளுமன்ற இடங்களில் 18 என்பது 2.11 சதவீதமாகும். மொத்த நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், நாடாளுமன்றத்திற்கான பஞ்சாப் பங்களிப்பு குறையும். பஞ்சாபில் தற்போதைய இடங்களின் சதவீதத்தை மத்திய அரசு அதே அளவில் பராமரிக்க விரும்பினால், 21 இடங்கள் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், “பஞ்சாப்பில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறாது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக தென்னிந்தியாவிற்கான தண்டனை தான் டிலிமிட்டேஷனா? ஒருபுறம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். மறுபுறம் நாடாளுமன்ற தொகுதிக்கான இடங்களைக் குறைக்கிறீர்கள்.

தொகுதி மறுவரையறை செய்யுங்கள். ஆனால், அதன் அளவுகோல் மக்கள் தொகையை மட்டும் சார்ந்ததாக இருக்கக்கூடாது. இதுதொடர்பான அடுத்த கூட்டம் எங்கு நடந்தாலும் அந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம்” என்று தெரிவித்தார். bhagwant mann addressed problems

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share