மணநாள் அன்று பரிசு எதுவும் வழங்காமல், சாதாரண நாளைப் போல கணவர் இருக்க… ஆத்திரமடைந்த மனைவி, இரவு கணவன் தூங்கும்போது சமையலறையிலிருந்து கத்தியை எடுத்துக் குத்தியிருக்கும் விபரீத சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி வித்யா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது).
கடந்த வார இறுதியில் கிரண் – வித்யா தம்பதிக்குத் திருமண நாள் வந்திருக்கிறது. அதைக் கொண்டாடாமலும், வித்யாவுக்குத் திருமண நாள் பரிசு வழங்காமலும், சாதாரண நாளைப் போல கிரண் இருந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த வித்யா, இரவு கிரண் தூங்கும்போது சமையலறையிலிருந்து கத்தியை எடுத்துவந்து, கிரணை குத்தியிருக்கிறார்.
இதனால் கையில் பலத்த காயமடைந்த கிரண், மனைவியைத் தள்ளிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். மேலும், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார்.
முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம், கிரண் தாக்குதல் தொடர்பாகக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், கிரணிடம் விசாரித்த காவல் துறை, நடந்தவை குறித்து விவரமறிந்து, வித்யாவை கைது செய்திருக்கிறது.
இதுகுறித்து பேசியுள்ள காவல்துறையினர், “பிப்ரவரி 27-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த கிரணை வித்யா கத்தியால் கையில் குத்தியதாக கிரண் தெரிவித்தார்.
கிரணின் தாத்தா இறந்ததால் திருமண நாளுக்காக வித்யாவுக்கு பரிசு வழங்க முடியாமல் போயிருக்கிறது. கிரண் முதல் முறையாகப் பரிசு கொடுக்காததால் கலக்கமடைந்த வித்யா, கோபத்தை விபரீதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், கணவன் – மனைவி மத்தியில் சில தனிப்பட்ட பிரச்னைகளால் உறவுச் சிக்கல் இருப்பதாகவும் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, வித்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. குடும்ப பிரச்சினை என்பதால், பேசி தீர்த்துக்கொள்ள அவகாசம் கொடுத்திருக்கிறோம். வித்யாவுக்கு மனநல ஆலோசனை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா
டிஜிட்டல் திண்ணை: சிறுத்தைக் கணக்கு… ஸ்டாலின் ஆலோசனை!
திருமா கிண்டும் தெலங்கானா குருமா: அப்டேட் குமாரு
”மேல ஏறி வாரோம்”: வசூலில் வரலாற்று சாதனை படைத்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’
