பெங்களூரு ‘இந்தியா’ கூட்டம்: கமல் ஏன் கலந்து கொள்ளவில்லை?

Published On:

| By Jegadeesh

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இரண்டாம் முறையாக பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி கூடியது.

அதே நேரம் டெல்லியில், ஆளும் பாஜக அரசின் கூட்டணி கட்சிகளின் (என்.டி.ஏ) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 38 கட்சிகள் கலந்து கொண்டன.

ADVERTISEMENT

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டன. அதில், தமிழகத்தில் இருந்து திமுக, மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அடக்கம்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த கூட்டணிக்கு Indian National Democratic Inclusive Alliance (இண்டியா) என்ற பெயர் வைக்கப்பட்டது.

ஆனால், சமீபகாலமாக காங்கிரஸ் மற்றும் ராகுலுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு எதுவும் கொடுக்கவில்லை.

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும்  2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நகரபகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது.

ADVERTISEMENT

அதேநேரம் கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் கடும் போட்டியை கொடுத்தவர் கமல்.

அதுமட்டுமின்றி திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அவரின் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டார்.

அப்போது, “ஓர் அரசியல் தலைவராக இல்லாமல், ஓர் இந்திய குடிமகனாக ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொண்டேன்” என்று தெரிவித்தார். அதோடு மட்டுமின்றி ராகுலுடன் நீண்ட ஆலோசனையிலும் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் இணைந்து அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் மேற்க்கொண்டார்.

அந்த பிரச்சாரத்தின் போது,  “சின்னம், கட்சி, கொடி எல்லாம் தாண்டியது தேசம்.அதை காக்கவேண்டும் என்று வரும் பொழுது யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பெரியார் பேரன்தான் , நானும் பெரியார் பேரன்தான்” என்று கூறினார்.

இப்படி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கொள்கை அளவிலும் நெருக்கமாக இருக்கும் கமலுக்கு ஏன் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்று மநீம தரப்பினரிடம் நாம் விசாரித்தோம்.

அதற்கு அவர்கள், கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்றார்களே தவிர கமலுக்கு அழைப்பு கொடுத்தார்களா என்பது பற்றி தகவல் ஏதும் சொல்லவில்லை.

அதேநேரம் திமுக தரப்பினர் இது குறித்து விசாரித்த போது, “Indian National Democratic Inclusive Alliance கூட்டணியில்…Inclusive என்றால் அனைத்தையும் உள்ளடக்கியது என்று அர்த்தம்.

எனவே இன்னும் இருக்கிறது. பல்வேறு கட்சிகள் புதிதாக எங்கள் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டுகிறது. அதில் கமலும் இணைவார்” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

வேந்தன், ஜெகதீஸ்

அங்கே கொஞ்சம்…இங்கே கொஞ்சம்: அன்புமணியின் கூட்டணி பிளான்!

விராட் கோலியுடன் விளையாடுவது பாக்கியம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share