நாம் இரண்டு வாரங்களுக்கு சர்க்கரையை தவிர்ப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
இப்போது 2026 புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. புத்தாண்டு உறுதிமொழி எடுக்க இதைவிட சிறந்த தருணம் வேறு எதுவும் இல்லை. உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக்கொள்ளவும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைக் கைவிடவும், எடையைக் குறைத்து உடல் தகுதியைப் பெறவும் சபதமெடுங்கள். அதற்கு முதலில் சர்க்கரையை தவிர்ப்பதில் இருந்து ஆரோக்கிய உணவுப் பழக்கத்திற்கு மாறுவோம்.
நமது அன்றாட வாழ்க்கையில் சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் ஒரு நாளும் முடிவதில்லை. காலையில் எழுந்த உடன் சர்க்கரை கலந்த தேநீரையே முதலில் பருகிறோம், இதுதவிர நாம் சாப்பிடும் உணவுகள், ஸ்நாக்ஸ்களில் சர்க்கரை கலந்திருக்கும். இதனால் கலோரிகள் அதிகரித்து உடல் எடை கூடுவதோடு, உடல்நல பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். ஆகவே, முதலில் சர்க்கரையை தவிர்ப்போம். அதற்கு முன்பாக முதல் 14 நாட்கள் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று மருத்துவர்கள் குறிப்பிடுவதை பார்ப்போம்.
சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்?
சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்வது உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு பெரிய அளவிலான ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. ஆகவே, சர்க்கரையை குறைப்பது வெறும் கலோரிகள் குறைப்பு என்பதோடு நின்றுவிடாது, உடல் ஆற்றல், பசி எடுப்பதில் மாற்றத்தை நிகழ்த்தும். இரண்டு வாரங்கள் சர்க்கரையை தவிர்ப்பது என்பது கலோரிகளை குறைத்து உண்பதை விட அதிக நன்மையை கொடுக்கும். அது மெட்டபாலிசத்தை மீட்டமைத்து, உங்கள் ஹார்மோன்கள் இயக்கத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக உணவு செரிமானத்திலும் நாம் முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
1 – 3 நாட்கள் கடினமாக இருக்கும்
சர்க்கரையை தவிர்க்க முதல் மூன்று நாட்கள் சற்று கடினமானதாக இருக்கலாம். இனிப்பு சாப்பிடுவதற்கான ஏக்கம் அதிகரிக்கும், தலைவலி, மயக்க உணர்வு ஏற்படலாம். எரிச்சல், மனநிலையில் மாற்றம், சோர்வாக உணருவீர்கள், கவனம் செலுத்துவதில் தடுமாற்றம் இருக்கும். இது ஆபத்தானது இல்லை, நமது மூளை சர்க்கரை இல்லை என்றால் அதனை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து தேட முயற்சிக்கிறது.. அவ்வளவுதான்.
4 – 7 நாட்களில் நிலைமை சீரடையத் தொடங்குகிறது
உங்கள் இயக்க ஆற்றல் நிலையாகிறது, இனிமேல் உடலில் சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் இருக்காது, உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை நிறுத்தும்போது, பசி தானாகவே குறையத் தொடங்குகிறது. செரிமானப் பிரச்னைகள் குறைகிறது, பிற்பகலில் ஏற்படும் சோர்வான உணர்வில் இருந்து விடுபடுவீர்கள்.
8 – 14 நாட்களில் உண்மையான மாற்றம் தொடங்குகிறது
8 – 14 நாட்களில்தான் சர்க்கரையை நிறுத்தியதால் ஏற்படும் உண்மையான மாற்றங்கள் தெரியவரும். உங்கள் வயிறு தட்டையாகத் தெரியத் தொடங்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கத் தொடங்கும், நீங்கள் எப்போது பசியாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், மன அழுத்தம் குறைந்து இரவில் தூக்கமும் நன்றாக வரத் தொடங்கும்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்ன நடக்கும்?
உங்களுக்கு இன்சுலின் அளவு குறைவாக இருக்கும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் கல்லீரல் ரிலாக்ஸாக இயங்கும், அதிகப்படியான சர்க்கரையை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், அது கொழுப்பைச் சேமிக்கும் வாய்ப்பு குறையும். உங்கள் சுவை மொட்டுகள் மீட்டெடுக்கப் படுவதால், இனிப்பு உணவுகள் அவ்வளவு கவர்ச்சிகரமாகத் தெரியாது.
சர்க்கரையை கைவிட்ட பிறகு ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்துவது அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சர்க்கரை உங்கள் ஆரோக்கியத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கணிக்க இரண்டு வாரங்கள் போதுமானது. அதற்கு பிறகு நீங்களே மாறிவிடுவீர்கள். என்ன 14 நாட்கள் சுகர் கட் சேலஞ்சுக்கு ரெடியாகிவிட்டீர்களா?
