முன்பெல்லாம் கை, கால்களில் மருதாணி வைத்துக் கொள்வதை அழகு என்று பார்த்தார்கள். வீட்டில் ஏதேனும் விழா என்றால் அதற்கு தயாராக முந்தைய நாள் இரவு மருதாணி வைத்தக் கைகளுடன்தான் தூங்கப் போவார்கள். காலையில் கைகள் சிவப்பாக இருப்பதை காணும்போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். வீட்டுத் தோட்டத்தில் பறித்த மருதாணியையே பெரும்பாலும் பயன்படுத்தினர். மருதாணியை கையில் வைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினம்தான்.
இந்தியாவில் பல மாநிலங்களில் திருமணத்தின்போது பெண்களின் கையில் மருதாணி வைப்பது ஒரு சடங்காகவே உள்ளது. மணமகன் கைகளிலும் கூட மருதாணி வைக்கும் வழக்கம் உள்ளது. மருதாணி வைப்பதில் அழகியல் மட்டுமல்லாமல், ஆரோக்கியக் காரணமும் இருக்கிறது. கைகளில் மருதாணி வைப்பதில் இருக்கும் மருத்துவ குணங்களும் நன்மைகள் என்னவெனத் தெரிந்துகொள்ளலாம்.
நகங்களை பாதுகாக்கும்
மருதாணியை கை, கால்களில் தடவும்போது நகங்களுக்கும் சேர்த்துத் தடவுங்கள். இதனால் உங்கள் நகம் வலிமைப் பெறுகிறது. மருதாணி நகங்களின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும் பிசின் போல அடர்த்தியாக இருப்பதால், அது பிளவுகள், கீறல்களில் இருந்து பாதுகாக்கிறது.
தலைவலி நீங்கும்
மருதாணி கைகளுக்கு மட்டும் அல்ல தலைமுடிக்கு இயற்கையான நிறத்தை அளித்து அழகு கூட்டுகிறது. தலைமுடிக்கு மருதாணி தடவுவதன் மூலம், மருதாணி கலவை அழற்சி வீக்கங்களைக் குறைப்பதோடு, தலைவலியைப் போக்குகிறது. மருதாணி நேரடியாக உச்சந்தலையைப் பாதுகாப்பதோடு, தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சருமத்தைப் பாதுகாக்கிறது
பொதுவாகவே கைகள் மூலமாகவே பல நோய் தொற்றுகள் நமக்கு ஏற்படும். மருதாணி பல சரும தொற்றுகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. முந்தைய காலங்களில் மக்கள் மருதாணி கலவையை தீக்காயங்கள் மற்றும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தினர். காயங்கள் மற்றும் சிராய்ப்புகளை குணப்படுத்தவும் பயன்படுத்தினார்கள். சருமத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சி உடலை குளிர்விக்கும் திறன்களையும் மருதாணி கொண்டுள்ளது.
அலர்ஜியை கட்டுப்படுத்தும்
பெரும்பாலான மக்கள் மூட்டு வலி மற்றும் வாத வலிகளுக்கும் சிகிச்சையளிக்க மருதாணி எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். அதுபோல கைகளில் மருதாணி தடவுவதும் பல வகைகளில் நன்மை தரும். மூட்டுகள் மட்டுமல்ல, மருதாணி உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள வலியையும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன.
மருதாணி அடர் சிவப்பாக இருப்பது ஏன்?
சில மருதாணி வகைகள் பாரா-ஃபெனிலெனெடியமைன் அல்லது பிபிடி இருப்பதால் அது நிறத்தை கருமையாக்குகிறது. ஆனால், மருதாணி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும். இயற்கை மருதாணி ஒருபோதும் இயற்கையான ஆரஞ்சு- சிவப்பு நிறத்தைத் தவிர வேறு எந்த நிறத்தையும் கொடுக்காது. இயற்கையான மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்துவதில் வேறு எந்த வேதிப் பொருட்களும் கலக்காமல் இருந்தால் அதனை பயன்படுத்துவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
