சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் பிச்சை எடுக்கும் தாய்மார்கள் உண்மையிலேயே அந்த குழந்தைகளின் தாய் தானா என்பதை கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழ் வேந்தன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பிச்சை எடுக்கும் பெண்களுக்கும் அவர்களது கையில் இருக்கும் குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையையும் காண முடிவதில்லை. பிச்சை எடுக்கும் போது அந்த குழந்தைகள் எந்த நேரமும் தூங்கிக் கொண்டே இருக்கின்றன. கடும் வெயில், மற்றும் வாகனங்களின் சத்தத்துக்கு கூட அவர்கள் முழிப்பதில்லை.
ஒருவேளை அவர்களுக்கு தூக்க மாத்திரை அல்லது மது கொடுக்கப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் இருந்து கடத்திவரப்பட்டு பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகிறதா?. இவர்கள் பின்னணியில் இருப்பது யார்? என்பதை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (டிசம்பர் 5) தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
