வட மாநில உணவு வகைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள சப்ஜி, தற்போது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் ஃபேவரைட் உணவாகிவிட்டது. இந்த பீட்ரூட் கொண்டைக்கடலை சப்ஜி அனைத்தும் வயதினருக்கும் சத்தான சைடிஷ் ஆகும்.
என்ன தேவை?
- நீளமாக நறுக்கிய பீட்ரூட் – ஒரு கப்
- ஊறவைத்த கொண்டைக்கடலை – கால் கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்
- தக்காளி – இரண்டு
- கீறிய பச்சை மிளகாய் – இரண்டு
- மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
- மல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
- சோம்பு – அரை டீஸ்பூன்
- பட்டை – இரண்டு சிறிய துண்டு
- கொத்தமல்லித் தழை – சிறிதளவு
- எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு குக்கரில் பீட்ரூட் மற்றும் கொண்டைக்கடலையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் சோம்பு, பட்டை சேர்த்துத் தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த பீட்ரூட், கொண்டைக்கடலையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் மசாலா நன்றாகச் சேரும் வரை மூடி வைக்கவும். பின்பு கரம் மசாலாத்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.