நம் வீடுகளைப் பொறுத்தவரை உசிலி என்பது வழக்கமான டிஷ்தான். ஆனால், பீட்ரூட் உசிலி… யாரும் முயற்சி செய்யாத ஒரு புது டிஷ். ஆனால், சத்தான டிஷ்ஷாகவும் கேட்டு வாங்கிச் சாப்பிடக்கூடிய டிஷ்ஷாகவும் அமைய இதை ஒருமுறை செய்து பாருங்களேன்.
என்ன தேவை? Beetroot Paruppu Usili Recipe
துவரம்பருப்பு – அரை டம்ளர்
கடலைப்பருப்பு – ஒரு டம்ளர்
பீட்ரூட் – 300 கிராம்
காய்ந்த மிளகாய் – 8
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் – ஒன்றரை குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது? Beetroot Paruppu Usili Recipe
பீட்ரூட்டை தோல் சீவி நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டை வைத்து, நீளமாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை அதில் வைத்து, மூடி போட்டு, பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு வேகவைத்த பீட்ரூட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் நன்கு கழுவி, ஆறு காய்ந்த மிளகாயோடு சேர்த்து, தண்ணீர் சேர்த்து, முக்கால் மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங் கள். இப்போது இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி, அரைத்த பருப்புகளை இட்லி தட்டில் போட்டு பத்து நிமிடம் மூடி போட்டு வேகவிடுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். வேகவைத்த பருப்பை இதோடு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை வதக்கவும். அதனுடன் வேகவைத்த பீட்ரூட் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறவும். இப்போது தண்ணீர் இல்லாமல் பீட்ரூட்டும், பருப்பும் சேர்ந்து உதிரியாக வரும். விருப்பப்பட்டால், கடைசியாக இரண்டு டீஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால்… அற்புதமான பீட்ரூட் உசிலி ரெடி.