பீலா வெங்கடேஷ் புகார்… ராஜேஷ் தாஸ் கைது!

Published On:

| By Kavi

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல்  வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே அவரது மனைவியான தற்போதைய எரிசக்தித்துறை செயலாளர் பீலா, ராஜேஷ் தாஸை பிரிந்தார்.

பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார்.

இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா ஒன்றை வாங்கினர்.

இருவரும் பிரிந்ததால், அந்த பங்களா பீலா நியமித்த காவலாளியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாகவும், அந்த பங்களாவுக்கு கடந்த 18ஆம் தேதி சென்ற ராஜேஷ் தாஸ் காவலாளியை தாக்கி வெளியேற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தையூரில் உள்ள பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து பீலா வெங்கடேசன், தையூர் பங்களாவின் மின் இணைப்பை துண்டிக்குமாறு செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு கடிதம் அனுப்பினார்.

அதன்படி,மின்வாரிய ஊழியர்கள் தையூர் பங்களா மின் இணைப்பை துண்டிக்க சென்றிருக்கின்றனர். அவர்களிடம் ராஜேஷ் தாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் மின் கம்பத்தில் இருந்து பங்களாவுக்கு செல்லும் மின் இணைப்பை ஊழியர்கள் துண்டித்து சென்றுள்ளனர்.

இதை எதிர்த்தும், மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரியும்  ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி,  இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பீலா வெங்கடேசனுக்கு உத்தரவிட்டார். விசாரணையை மே 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்தநிலையில் பீலா வெங்கடேஷ் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேஷ் தாஸ் இன்று (மே 24) கைது செய்யப்பட்டுள்ளார்.

பனையூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Poco F6: இந்தியாவில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை களமிறக்கிய போகோ

சிங்கிள் தான்… மிங்கிளாக தயார் : ஸ்ருதிஹாசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share