‘உடற்பயிற்சி செய்தால்தான் அழகாக இருக்கலாம். நோய்கள் அண்டாது. நீண்ட ஆயுள் கிடைக்கும்‘ என்று அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி செய்ய விரும்புகின்றனர் பலர்.
இந்த விழிப்பு உணர்வு காரணமாகவே சமீபகாலமாக உடற்பயிற்சி நிலையங்களும் பெருகி வருகின்றன. இந்த நிலையில் அழகைப் பராமரிக்க… ஜிம்முக்குச் செல்வது அவசியம்தானா? ஃபிட்னெஸ் டிரெய்னர்ஸ் சொல்லும் விளக்கம் என்ன?
‘எனக்கு என்ன தேவை? சாதாரணமாக சாப்பிடுகிறேன், சாதாரணமாக ஒரு வேலைக்குச் செல்கிறேன், சாதாரணமாக ஒரு வாழ்க்கை வாழ்கிறேன். இந்தச் சாதாரண வாழ்க்கை முறையில் என் உடலை நான் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவே இப்போது பயிற்சிகள் தேவை. எனவே, எனக்கேற்ற சாதாரணமான பயிற்சிகள் செய்தாலே போதும்‘ என்கிற தெளிவு ஜிம்முக்கு செல்கிற எல்லோருக்கும் இருப்பதில்லை.
தங்கள் உடல்நிலை என்னவென்பதும் தெரிவதில்லை. தன்னுடைய இலக்கு எதுவென்றும் தெரிவதில்லை. இதனால் தேவையற்ற கடினமான பயிற்சிகளைச் செய்கிறார்கள்.
உடலுக்குத் தேவையற்ற அழுத்தம் கொடுத்து ஆபத்திலும் சிக்குகிறார்கள். எனவே, தான் எதற்காக உடற்பயிற்சிகள் செய்கிறோம் என்ற இலக்கில்லாமல் செயல்படுவது தவறு.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்தப் பிரச்சினைக்காக டாக்டரிடம் சென்றாலும், எந்த மருத்துவரும் ஜிம்முக்கு போகச் சொல்லி அறிவுறுத்துவதில்லை. முதலில் உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள், பின்பு வாக்கிங் என்றுதான் சொல்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் மருத்துவர்களின் ப்ரிஸ்க்ரிப்ஷனில் ஜிம் என்பதே இல்லை. எனவே, உடலில் ஏதேனும் பிரச்னையைச் சரி செய்ய ஜிம்முக்கு போகிறேன் என்றும் சொல்லக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் உலகிலேயே மிகச்சிறந்த உடற்பயிற்சி நடைப்பயிற்சிதான்.
நீங்கள் என்ன கடினமான, கார்டியோ பயிற்சிகள் செய்தாலும் அதனால் கிடைக்கும் பலன் என்பது 20 சதவிகிதம்தான். ஆனால், நடைப்பயிற்சியினால் உடலுக்குக் கிடைக்கும் பலன் 100 சதவிகிதம் என்பதே உண்மை.
வாக்கிங் என்பது உடல் எடைக்குறைப்புக்கு அல்லது வயதானவர்களுக்கு என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி இல்லை. வாக்கிங் எல்லோருக்குமானது. எல்லா நேரத்துக்குமானது.
எனவே, ஜிம் என்பது மட்டுமே ஆரோக்கியம் தந்துவிடாது. அடிப்படையில் ஆரோக்கியமான உணவு, அளவான தூக்கம் தேவை. நோய்க்கேற்ற சிகிச்சைகள் தேவை. அதன் பிறகே ஜிம்மில் செய்யப்படும் பயிற்சிகள் உங்களுக்குப் பலன் தரும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…