பியூட்டி டிப்ஸ்: அழகை மேம்படுத்தும் மேக்கப் பிரஷ்… அலட்சியம் வேண்டாம்!

Published On:

| By Minnambalam Desk

beauty tips makeup brush uses

“அழகை மேம்படுத்திக் காட்டுவதற்காக தினமும் பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்ஷை சரியான முறையில் பராமரிக்காவிட்டால், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள். beauty tips makeup brush uses

க்ரீம், பவுண்டேஷன், பவுடர் ஆகியவற்றை முகம் முழுவதும் பூசுவதற்கு ஏற்ற வகையில் மேக்கப் பிரஷ்ஷில் உள்ள இழைகள் மிதமான அடர்த்தியோடு மென்மையாக இருக்க வேண்டும். மேக்கப் பிரஷ்களின் இழைகள், இயற்கையாகக் கிடைக்கும் ரோமங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது நல்லது. இவை, மென்மையாகவும், முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற வகையிலும் இருக்கும்.

மேக்கப் பிரஷ்ஷை  மேக்கப் போட ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அவசியம் சுத்தம் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல்… வாரத்துக்கு ஒரு முறையாவது அவற்றை தண்ணீரில் கழுவ வேண்டும்.  தண்ணீரில் நீண்ட நேரம் அவற்றை ஊறவைக்கக் கூடாது. மேக்கப் பிரஷ்ஷை கழுவிய பிறகு, அவற்றை ஒரு பருத்தி துண்டில் அல்லது டிரேவில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கி சுத்தமான, உலர்ந்த இடத்தில்  வைத்து உலர்த்த வேண்டும்.

மேக்கப் பிரஷ்களை அடுக்கி வைக்கும் ஹோல்டர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்வதற்கென பிரத்யேகமாக பிரஷ் கிளீனர்கள் உள்ளன. இவை பிரஷ்களில் உள்ள அழுக்குகளையும், பிசுபிசுப்பு தன்மையையும் முழுமையாக  நீக்கும். மேக்கப் பிரஷ்ஷின் ஒவ்வோர் இழையையும் சுத்தம் செய்யும் வகையில், ‘பிரஷ் மேட்’ கடைகளில் கிடைக்கிறது. இது, பிரஷ்ஷில் படிந்துள்ள க்ரீம் மற்றும் பிசுக்குகளை முழுமையாக நீக்கும்.

முக்கியமாக, உங்கள் மேக்கப் பிரஷ்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கென பிரத்யேகமாக மேக்கப் பிரஷ்களை  வைத்திருப்பது சிறந்தது. சருமத்தின் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சில அழகு சாதனப் பொருட்கள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதுபோன்ற சமயங்களில்,  மற்றவர் பயன்படுத்திய மேக்கப் பிரஷ்ஷை, மீண்டும் உங்கள் சருமத்தில் பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share