எப்போதும் இளமையாகவும், ஒளிரும் தேகத்துடனும் இருப்பதற்கு உதவும் உணவு முறைகளைப் பற்றி விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
உடலுக்கு நீர்த்துவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தேவையான அளவு நீரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் மருத்துவர்களும், ஊட்டச்சத்து ஆலோசகர்களும், சரும மருத்துவர்களும் வலியுறுத்துகின்றனர்.
குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அவரவர் தேக நிலைக்கேற்ப நான்கு லிட்டர் வரையிலும்கூட தண்ணீர் குடிக்கலாம். வெளியேறும் சிறுநீர் நிறமற்று தெளிவாக இருந்தால் ஆரோக்கியமான உடலுக்கு அடையாளம். ஆனால், அதுவே மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் போதுமான அளவு நீர்த்துவம் இல்லை என்பதைக் குறிக்கும்.
உடலைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க போதுமான இரவு உறக்கம் தேவை. இரவு 10 மணிக்கு உறங்கி காலை 6 மணிக்கு எழுவது ஆரோக்கியமான பழக்கமாகும். ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்ளும்போது உடல் பொலிவு பெறும். சருமம் ஆரோக்கியமாக அமையும், உடல் புத்துணர்வு பெறும்.
மூன்று முதல் நான்கு தக்காளிப் பழங்களை எடுத்து மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து, சிறிது உப்பும் மிளகும் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தோ எடுத்துக் கொள்ளலாம். தக்காளியில் சிவப்பு நிறமி லைகோபின் ( Lycopene) இருப்பதால் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தக்காளி தவிர, சிவப்பு நிறம் உள்ள பீட்ரூட், கேரட், மாதுளை, தர்பூசணி போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாகவே, அதிக நிறமுள்ள காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக்கொள்வது நன்மை தரும். அவற்றில் காணப்படும் பீட்டா கரோட்டின் (Beta-carotene) என்ற வேதிப்பொருளை, கல்லீரல் தேவைப்படும்போது வைட்டமின் ஏ-வாக மாற்றி பயன்படுத்திக்கொள்ளும். இதனால் சருமம் பொலிவாகக் காணப்படும்.
பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகளுக்கு பதில் இதுபோன்ற இயற்கை காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.
முளைகட்டிய பயறு தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடலாம். தொடர்ந்து இதைச் சாப்பிட்டு வர அவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
முக்கியமாக கேரட், பீட்ரூட், ஆரஞ்சு போன்றவற்றின் ஃப்ரெஷ் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய், புதினா, கொத்தமல்லியை தனியாகவோ அல்லது அதனுடன் வெள்ளரிக்காய் சேர்த்தோ ஜூஸ் செய்து பருகலாம். இதில் புதினாவையும் சேர்க்கலாம். இதற்கு பதிலாக இளநீரும் வழுக்கையும் சாப்பிட்டு வரலாம்.
நாள் ஒன்றுக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையும் மோர் குடிக்கலாம். இது சருமத்துக்கும் செரிமானத்துக்கும் நன்மை செய்யும்.
சப்ஜா விதைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்னாரி சர்பத் சாப்பிடலாம்.
கீரைகளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா சட்னி போன்றோ அல்லது கறிவேப்பிலை பொடியை சாப்பாட்டில் சேர்த்தோ, ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
இதைப் போன்று இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இட்லிப் பொடியில் கறிவேப்பிலை பொடியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். இட்லி பொடியில் கறுப்பு எள்ளையும் ஆளி விதைகளையும் (flax seeds) சேர்த்துப் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் சருமத்தை பொலிவாக்க உதவும்.
மாலை நேர ஸ்நாக்ஸுக்கு பழங்கள், கடலை, எள் உருண்டை, வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை உண்ணலாம்.
சுண்டல் வகைகளில் அதிகப் புரதச்சத்து உள்ளது. சுண்டல்களில் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, புதினா, மிளகாய், மாங்காய் போன்றவை சேர்த்துச் சாப்பிட புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என அனைத்தும் கிடைக்கும். சாம்பாரில் அதிக காய்கறிகள் சேர்த்தும், புதினா, கொத்தமல்லியை வதக்காமல் அப்படியே தேங்காயுடன் சேர்த்து அரைத்து சட்னியாகவும் சாப்பிடலாம்.
அசைவ உணவில் ஈரல், மட்டன் சூப், சிக்கன் சூப் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான இரும்புச்சத்தும், வைட்டமின்கள், தாதுக்களும் உள்ளன. இவை வைட்டமின் குறைபாடுகளைத் தடுத்து சருமத்தைப் பளபளபாக்கும். இப்படி உங்கள் உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொண்டால் என்றும் இளமையாக இருக்கலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: அதிகரிக்கும் கொசுத்தொல்லை… இயற்கை முறையில் விரட்ட இதோ வழி!
டாப் 10 நியூஸ் : ரெட் அலர்ட் முதல் இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் வரை!