கை கால்களிலும், உடலின் பிற பகுதிகளிலும் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் க்ரீம் உபயோகிக்க எளிதானது என்றாலும் அது சருமத்துக்கு நல்லதல்ல. இதை உபயோகித்தால் சருமம் கருத்துப்போகலாம். தடிப்பு, அலர்ஜி வரலாம். தவிர முடி வளர்ச்சியும் முன்பைவிட அதிகரிக்கும். அதைவிட வாக்ஸிங் முறையே சிறந்தது. வீட்டிலேயே வாக்ஸ் தயாரித்தும் உபயோகிக்கலாம்.
600 கிராம் சர்க்கரையுடன் 250 மில்லி எலுமிச்சைப் பழச்சாறு கலந்து அடிகனமான பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்களுக்குச் சூடாக்கவும். இரண்டும் கரைந்து மெழுகு பதத்துக்கு வந்ததும் அரை கப் தண்ணீர் ஊற்றவும். அதில் சிறிதளவை எடுத்து இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் உள்ள வேறு பாத்திரத்தில் விட்டால், கலவை அடியில் செட்டாகும். அதுதான் சரியான பதம். மாறாக கலவை, தண்ணீரில் கரைந்தால் இன்னும் சிறிது நேரம் மிதமான தீயில் வைத்துக் கிளறி பதம் சரியாக வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
இதுதான் வாக்ஸ். இதை அவ்வப்போது தேவைக்கேற்ப ஃப்ரெஷ்ஷாக செய்துகொள்ளலாம். முதலில் சருமத்தில் முடிகளை நீக்க வேண்டிய பகுதியில் டால்கம் பவுடர் தடவவும். பிறகு மர ஸ்பூனால் வாக்ஸை எடுத்து சருமத்தில், முடியை நீக்க வேண்டிய இடத்தில் முடி எந்த நோக்கில் வளர்ந்திருக்கிறதோ அதே திசையில் தடவவும். பிறகு அதன் மேல் வாக்ஸ் ஸ்ட்ரிப்பை (கடைகளில் கிடைக்கிறது) வைத்து அழுத்தவும். பிறகு முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் ஸ்ட்ரிப்பை பிடித்து இழுக்கவும்.
இப்படிச் செய்யும்போது வாக்ஸின் சூட்டை சரி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்குப் பொறுக்கும் சூட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சருமத்தில் கொப்புளங்கள் வரலாம். முடிகளை முழுமை யாக நீக்கியதும் ஈரத்துணியால் கைகால்களைத் துடைத்துவிட்டு, மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் அல்லது லோஷன் தடவிக்கொள்ளவும். காயங்களோ, கட்டிகளோ, புண்களோ இருந்தால் அந்த இடங்களில் வாக்ஸ் செய்ய வேண்டாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்