இந்த ஊரடங்கு கால நெருக்கடியில் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்தை பாதுகாப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று முகத்திற்கு புத்துணர்வு அளிக்கும் குளுமையான கற்றாழை வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் செய்வது எவ்வாறு என பார்க்கலாம்.
இந்த கற்றாழை ஃபேஸ் பேக்கை செய்வதற்கு வீட்டில் கற்றாழை செடி வைத்திருப்பவர்கள், அதில் ஒரு கால் பகுதி இலையை நறுக்கி அதற்குள் இருக்கும் சோற்றை உபயோகிக்கலாம். வீட்டில் கற்றாழை செடி இல்லாதவர்கள் கடையில் வாங்கிய கற்றாழை ஜெல் இரண்டு ஸ்பூன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புத்துணர்வு அளிக்கும் பேஸ் பேக்கை செய்வதற்கு ஒரு வெள்ளரிக்காயில் கால் பகுதியை வெட்டி அதை மிக்ஸியில் போட்டு இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் அல்லது கால் பங்கு இலையின் கற்றாழை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் போட்டு 15 நிமிடங்கள் நன்கு காயவிட்டு பிறகு முகத்தை கழுவவும்.
பின் குறிப்பு: இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் மட்டும் போடவும். கண் மற்றும் வாய் பகுதிகளின் அருகில் போடுவதை தவிர்க்கவும்!
