சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடித்து வரும்படம் பீஸ்ட். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு படமாக்கி வந்தபோது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால், திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் அங்கு படமாக்க முடியாமல் படக்குழு தாயகம் திரும்பியது.
அதையடுத்து சென்னை, டெல்லி என்று படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வில்லனுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்க படப்பிடிப்பு தொடங்கிய ஜார்ஜியாவுக்கு படக்குழு மீண்டும் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதுபோன்று ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என்று பன்மொழி முன்னணிசசச்ஜ நடிகர்கள் நடித்து வரும் படம்.
கமல்ஹாசன் பிறந்தநாள் நெருங்குவதால் விக்ரம் படம் பற்றிய தகவல்கள் கூறுமாறு அவரது ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் கையில் துப்பாக்கியுடன் தீயாக இருக்கும் போஸ்டரை வெளியிட்டு விக்ரமின் உலகை நாளை மாலை 6 மணிக்கு காணலாம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் படம் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று லோகேஷ் தெரிவித்துள்ளார். அதே 2022ம் ஆண்டு ஏப்ரலில் தான் விஜய்யின் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஜய் படத்துடன் லோகேஷ் கனகராஜின் படம் சேர்ந்து வருவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான பிகிலுடன் கைதி வெளியானது.
இந்த நிலையில் விக்ரம் படம் ஏப்ரல் மாதம் என்பதை உறுதி செய்திருக்கிறார் லோகேஷ்.
**-இராமானுஜம்**
