*(புகைப்படம்: விக்ராந்த் கெனி, குர்தாஸ் ரவுத் ஆகியோர் மார்ச் 4 ஆம் தேதி சவுரவ் கங்குலி, ஜெய் ஷா ஆகியோரிடமிருந்து காசோலையை பெற்ற போது)*
காலதாமதத்திற்குப் பின், 2019ஆம் ஆண்டில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான உலகக் கோப்பையை வென்ற வீரர்களின் வங்கிக் கணக்குகளில் அவர்களுக்கு சேர வேண்டிய 65 லட்சம் ரூபாயை பிசிசிஐ செலுத்தியுள்ளது.
இந்தியாவின் மாற்றுத் திறன் கொண்ட அணியின் கிரிக்கெட் வீரர்கள் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகத் தொடர் பட்டத்தை வென்றதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பி.சி.சி.ஐ) தங்கள் பணத்தைப் பெற்றுள்ளனர். மாற்றுத் திறன் வீரர்களுக்கான டி20 உலக கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இவ்வெற்றியைத் தொடர்ந்து, நிர்வாகிகள் குழு அவர்களுக்கான பண வெகுமதியை அளிக்க அனுமதியளித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 4 ஆம் தேதி, பி.சி.சி.ஐ அலுவலக பொறுப்பாளர்கள் கேப்டன் விக்ராந்த் கெனி மற்றும் அவரது அணி வீரர் குர்தாஸ் ரவுத் ஆகியோரை தங்கள் தலைமையகத்தில் கோப்பையை வென்ற வெகுமதிக்கான காசோலையை ஒப்படைக்க அழைத்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் உலகத் தொடரை வென்றதற்காக ரூ .65 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். ஆனால் வீரர்கள் இன்னும் அதற்கான தொகையை தாங்கள் பெறவில்லை என்று முறையிட்டனர். நாடு தழுவிய ஊரடங்கால், பி.சி.சி.ஐ அலுவலகம் மார்ச் நடுப்பகுதியில் இருந்து மூடப்பட்டுள்ளது. இதனால், ஒரு சில எழுத்துப்பூர்வமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் சங்கத்தின்(PCCAI) செயலாளர் ரவி சவுகான் பிசிசிஐ தலைவருக்கு மே 1ஆம் தேதி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நேற்று(மே 2) வீரர்களுக்கான பணத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளில் பி.சி.சி.ஐ நிர்வாகம் டெபாசிட் செய்தது. ஸ்போர்ட்ஸ் ஸ்டார் வெளியிட்டுள்ள தகவலின்படி, 17 வீரர்கள் தலா ரூ .3 லட்சம் பெற்றனர்; மீதமுள்ள தொகை பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி மற்றும் உதவி ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து சவுகான், எனது கடிதத்தைப் பெற்ற பிறகு, பிசிசிஐ செயலாளர் அருண் துமால், பணம் விரைவில் டெபாசிட் செய்யப்படும் என்று எனக்கு உறுதியளித்தார். அவர் உறுதியளித்தபடி நடந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற சவாலான காலங்களில் வீரர்களுக்கு உதவியதற்கு பி.சி.சி.ஐ.க்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ”என்று ஸ்போர்ட்ஸ்டாரிடம் கூறினார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**,”









