2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் 23ம்தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று (டிசம்பர் 21) ஐபிஎல் விதிகளில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
15 வருட காலமாக நடத்தப்படும் ஐபிஎல் ஆட்டத்தில் ஒவ்வொரு முறையும் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரை முன்னிட்டு இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்பேக்ட் பிளேயர் யார்?
பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முன் எப்போதும் 11 வீரர்களை அணி கேப்டன் தேர்வு செய்வார். ஆனால் எதிர்பார்த்தது போல் ஆடுகளம் செயல்படவில்லை என்றால் இந்த வீரருக்கு பதில் வேறு வீரரை தேர்வு செய்திருக்கலாமே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழும். இதனால் போட்டியில் எந்த விறுவிறுப்பும் இன்றி வெற்றி ஒரு அணிக்கு சாதகமாக மாறும் சூழ்நிலை உள்ளது.
இதனை மாற்றும் விதமாகதான் தற்போது இம்பேக்ட் பிளேயர் என்ற விதியை பிசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருவரை ’இம்பேக்ட் வீரர்’ என்று போட்டி தொடங்குவதற்கு முன்பே அணி கேப்டன்கள் முடிவு செய்ய வேண்டும்.
அதன்படி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிளேயிங் லெவனில் அவர் இல்லாத போதும் சூழலுக்கு தேவை என்றால் அந்த இம்பேக்ட் வீரரை பந்து வீசவோ பேட்டிங் செய்யவோ கேப்டன் அழைக்கலாம்.
இந்த விதியானது ஆட்டத்தின் முடிவுகளின் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள மூன்று பக்க அறிக்கையில், “விளையாடும் லெவன் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, இம்பேக்ட் வீரர் இந்திய வீரராக இருக்க முடியும்” என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது.

இம்பேக்ட் வீரர் தொடர்பான விதிகள்:
1.1 டாஸ் நேரத்தில் விளையாடும் 11 வீரர்கள் மற்றும் 4 மாற்று வீரர்களை அணிகள் அடையாளம் காண வேண்டும். டீம் ஷீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 4 மாற்று வீரர்களில், ஒரு வீரரை மட்டுமே இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்த முடியும்.
1.2 இரு அணிகளும் ஒரு போட்டிக்கு ஒரு இம்பேக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். இருப்பினும், இது கட்டாயமில்லை. இம்பேக்ட் பிளேயரைப் பயன்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது அணி கேப்டன்களின் முடிவினை பொறுத்தது.
1.3 இம்பேக்ட் பிளேயரை பின்வரும் முறையில் பயன்படுத்தலாம்:
கேப்டன் இம்பேக்ட் பிளேயரை பரிந்துரைப்பார்.
இம்பேக்ட் பிளேயர் (i) இன்னிங்ஸ் தொடங்கும் முன் அறிமுகப்படுத்தப்படலாம்;
அல்லது (ii) ஒரு ஓவர் முடிந்ததும்;
அல்லது (iii) ஒரு பேட்டர், விக்கெட் வீழ்ச்சியின் போது அல்லது ஓவரின் போது எந்த நேரத்திலும் பேட்டர் ஓய்வு பெற்றால்
பந்துவீச்சு அணியும் விக்கெட் வீழ்ச்சியின் போது ஒரு இம்பேக்ட் வீரரைப் பெறலாம். ஆனால் அந்த ஓவரில் மிட் ஓவரில் விக்கெட் விழுந்தால் அந்த ஓவரில் மீதமுள்ள பந்துகளை வீச அந்த இம்பேக்ட் பிளேயர் அனுமதிக்கப்படமாட்டார்.
1.4 இம்பேக்ட் பிளேயர் மூலம் மாற்றப்படும் ஒரு வீரர், அந்த போட்டியின் எஞ்சிய நேரத்தில் மாற்று பீல்டராக மீண்டும் களத்தில் அனுமதிக்கப்படமாட்டார்.
1.5 மிட்-ஓவரில் பீல்டிங் செய்யும் போது ஒரு வீரர் காயம் அடைந்தால், தற்போதைய விளையாடும் நிலை நிலவும் (விதி 24.1 – மாற்றுக் களத்தடுப்பாளர்கள்). காயம்பட்ட வீரருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயரை அணி அறிமுகப்படுத்தினால் அவர் இனி போட்டியில் பங்கேற்க முடியாது.
1.6 இம்பேக்ட் பிளேயர் அணியால் பயன்படுத்தப்படும் நேரத்தில், வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அவர்கள் விளையாடும் நிலையில் தற்போது உள்ள அதே விதி பொருந்தும்.
அதாவது போட்டியின் போது ஒரு பீல்டர் காயம் அல்லது நோய்வாய்ப்பட்டதாக நடுவர்கள் திருப்தி அடைந்தால், காயம்பட்ட வீரருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்க அனுமதிக்கப்படுவார். எனினும் அந்த மாற்று வீரர் பந்துவீசவோ அல்லது கேப்டனாக செயல்படவோ கூடாது.
1.7 ப்ளேயிங் லெவன் அணியில் 4க்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் மட்டுமே இம்பேக்ட் பிளேயர் இந்திய வீரராக இருக்க முடியும்.
கிறிஸ்டோபர் ஜெமா