இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அறிவிப்பு!

Published On:

| By Selvam

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக நீண்ட காலமாகவே இருந்தது.

இந்நிலையில், இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) விண்ணப்பங்களை பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக இருந்த கவுதம் கம்பீர் இப்பொறுப்புக்கு விண்ணப்பித்தார். அதேபோல, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் W.V.ராமனும் இப்பொறுப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.

இவர்கள் இருவரிடையேவும் பிசிசிஐ நேர்காணல் நடத்திய நிலையில், அந்த பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இதற்கிடையில், 2 பேருக்குமே பொறுப்புகளை பகிர்ந்து வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கவுதம் கம்பீரை இந்திய ஆடவர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிப்பதாக பிசிசிஐ தலைவரான ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ஷா, “கிரிக்கெட் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. இந்த மாற்றத்தை கௌதம் கம்பீர் மிக அருகில் இருந்து பார்த்துள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு நெருக்கடியான பொறுப்புகளில் சிறந்து விளங்கியுள்ளதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் கம்பீர் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன்.

இந்திய அணி பற்றிய அவரது தெளிவான பார்வை மற்றும் பரந்த அனுபவம், இந்த பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபர் கவுதம் கம்பீர் தான் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவரது இந்த புதிய பயணத்திற்கு பிசிசிஐ முழு ஆதரவு வழங்கும்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், “இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். நான் திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன்.

எப்போதும்போல, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை இந்திய அணி சுமக்கிறது. அந்த கனவுகளை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்”, என குறிப்பிட்டுள்ளார்.

 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு, இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில், ஜூலை 27 துவங்கி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த தொடரில் இருந்தே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக்கொள்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: இரவு நேர உடற்பயிற்சி ஆரோக்கியமானதா?

பியூட்டி டிப்ஸ்: பருக்கள் மறைய இதைச் செய்யுங்க!

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்குப்பதிவு முதல் அதிமுக ஆலோசனை வரை!

கிச்சன் கீர்த்தனா: கேஷு தம் புலாவ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share