அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுமா?

Published On:

| By Balaji

குற்றாலம் அருவிகளில் வருகிற 20ஆம் தேதி முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது பாபநாசம் அகஸ்தியர் அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வார்கள். மேலும் சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகளால் நிறைந்து பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகள் கலகலப்பாக காணப்படும்.

ADVERTISEMENT

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காரையார் அணை, அகஸ்தியர் அருவி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போது பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குற்றாலம் அருவிகளில் வருகிற 20ஆம் தேதி முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இந்த அருவியைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள அப்பகுதி வியாபாரிகள், “விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அகஸ்தியர் அருவியை நம்பி இருக்கிறோம். இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் இங்குதான் வாங்கி செல்வார்கள்.

தற்போது அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளதால் வாழ்வாதாரம் இழந்து உள்ளோம். எனவே அகஸ்தியர் அருவிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share