விஜய் ரசிகராக பசில் ஜோசப்!
இன்றைய தேதியில் மலையாள சினிமாவில் பிஸியாக இருக்கிறவர்களில் முதலாவது நபர் இவர் தானோ என்கிற அளவுக்குத் தொடர்ச்சியாக பசில் ஜோசப் நடித்த படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரவீன் கூடு ஷாப்பு, பொன்மன் படங்களை அடுத்து இந்த ஆண்டு மூன்றாவதாக அவர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘மரணமாஸ்’. நடிகர் சிஜு சன்னி இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். சிவபிரசாத் இயக்கியிருக்கிறார். basil joseph maranamass movie review april 2025
ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, பாபு ஆண்டனி, சுரேஷ் கிருஷ்ணா, அனிஷ்மா அனில்குமார், புலியானம் பௌலோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்திருப்பது நடிகர் டொவினோ தாமஸ்.
எப்படி இருக்கிறது ‘மரணமாஸ்’ தரும் திரையனுபவம்?

’த்ரில்லர்’ காமெடி! basil joseph maranamass movie review april 2025
ஒரு சீரியல் கில்லர் பேருந்தொன்றில் ஏறிவிடுகிறார். அவரால் அதில் இருப்பவர்கள் உயிருக்கு ஆபத்து நேர்வது போன்ற கதையம்சத்தை வெளிப்படுத்தியது ‘மரணமாஸ்’ பட ட்ரெய்லர்.
ஆனால், படத்தைப் பார்க்கத் தொடங்கினால் நமக்கு வேறொரு அனுபவம் கிடைக்கிறது.
அரசு ஊழியராகப் பணியாற்றும் ஸ்ரீகுமார் எனும் எஸ்கே (ராஜேஷ் மாதவன்), தொடர்ச்சியாக மூன்று வயதான ஆண்களைக் கொலை செய்கிறார். கொடூரமாகக் காயப்படுத்தி, வாயில் பூவன் வகை வாழைப்பழம் திணிக்கப்பட்ட நிலையில் அவர்களது சடலங்கள் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, அந்த சைக்கோ கொலையாளியைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கிறது காவல் துறை.
இன்னொரு புறம் வள்ளிக்குன்னு கிராமப்பகுதியில் அந்த சைக்கோ கில்லர் பிடிபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த லூக் (பசில் ஜோசப்) எனும் நபரைக் கைது செய்கின்றனர். ஆனால், அவரது அட்ராசிட்டி தாங்க முடியாமல் அந்த கிராமத்தினரே 16 லட்சம் ரூபாய் வசூல் செய்து அவரை செக்கோஸ்லோவோக்கியாவுக்கு அனுப்பும் முடிவில் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதனால், லூக்கை விடுவிக்கின்றனர்.
உள்ளூர் காவல் நிலையம் ஓஎல்எக்ஸ் செயலியில் விற்பனைக்கு வருவதாக அறிவித்தது உட்படத் தான் செய்பவற்றை எல்லாம் ‘சமூக சேவை’யாக, புரட்சியாக எண்ணுபவர் லூக். அவரது செயல்கள், அவரைக் காதலிக்கும் ஜெஸ்ஸியை (அனிஷ்மா அனில்குமார்) எரிச்சல்படுத்துகிறது. அதனால் இருவரும் பிரிந்துவிடுவோம் என்கிறார். அது, லூக்கை தவிப்பில் ஆழ்த்துகிறது.
வள்ளிக்குன்னு பகுதியில் ஓடும் ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநரான ஜிதின்குமாருக்கு (சுரேஷ் கிருஷ்ணா) அவ்வார இறுதியில் திருமணம் நடக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதுகளைத் தொட்டவராக அவர் இருக்கிறார்.
அதில் நடத்துனராக இருக்கும் அருவி (சிஜு சன்னி), சிறு வயதில் தனது தந்தையைத் தொலைத்தவர். அதனால், தொடர்ச்சியாக இருபதாண்டுகளாகத் தந்தைக்கு ‘திவசம்’ கொடுத்து வருகிறார்.
ஒருநாள் ஜெஸ்ஸி அவர்களது பேருந்தில் ஏறுகிறார். அதில் முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிவரும் கேசவகுரூப் என்பவரும் ஏறுகிறார். அவரைக் கொலை செய்யும் நோக்கோடு சீரியல் கில்லர் ஸ்ரீகுமாரும் பின்னே வருகிறார்.
நேரம் ஏற ஏற, கேசவனின் அத்துமீறல்கள் அதிகமாகின்றன. பெரும்பாலானோர் பேருந்தில் இருந்து இறங்கிவிடுகின்றனர். அப்போது ஜெஸ்ஸியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் கேசவன். உடனே தன்னிடமுள்ள பெப்பர் ஸ்பிரேவை அவர் மீது பீய்ச்சுகிறார் ஜெஸ்ஸி.
அடுத்த நொடி கேசவன் இருக்கையில் விழுகிறார். அவரிடத்தில் பேச்சு மூச்சில்லை. அதனைக் கண்டதும் நடத்துனர் அருவி அதிர்கிறார். பின்னே அமர்ந்திருக்கும் ஸ்ரீகுமார் பற்கள் நறநறக்க ‘என்னோட பழிக்குப் பழி பாழாயிடுச்சே’ என்று மனதுக்குள் கருவுகிறார்.
அந்த நேரத்தில், ஜெஸ்ஸியைப் பின் தொடர்ந்துவரும் லூக் அந்த பேருந்தில் ஏறுகிறார்.
அதன்பின் என்னவானது? முதியவர் கேசவன் என்ன ஆனார்? சீரியல் கில்லர் ஸ்ரீகுமார் அந்த பேருந்தில் இருப்பவர்களை என்ன செய்தார்? இப்படிப் பல கேள்விகளுக்கு ‘அவல நகைச்சுவையை’ அள்ளித் தெளிக்கும் பதில்களைத் தந்து நிறைவுறுகிறது ‘மரணமாஸ்’.
என்னதான் ஒரு சீரியல் கில்லரை படத்தில் காட்டினாலும், நமக்கு என்னவோ பதற்றம் தொற்ற மாட்டேன் என்கிறது. அதனால், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் கொஞ்சம் ரத்தம் தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குனர் சிவபிரசாத்.
வெளித்தோற்றத்தில் ‘பிளாக் காமெடி த்ரில்லர்’ ஆகத் தெரிந்தாலும், ஆங்காங்கே ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஸ்பூஃப் வகைமை தெரியச் சில காட்சிகள் வந்து போகின்றன. அதனால், இன்ன வகைமை என்று வரையறுக்க முடியாதவாறு புதுவித திரையனுபவத்தை வழங்குகிறது ‘மரணமாஸ்’. இப்படத்தின் பலமாகவும் பலவீனமுமாகவும் அதுவே இருக்கிறது.

பசில் ஜோசப் ‘அட்ராசிட்டி’1
‘மரணமாஸ்’ படத்தின் யுஎஸ்பி என்று பசில் ஜோசப்பின் பெர்பார்மன்ஸை குறிப்பிடலாம். அதற்கேற்ப கலரிங் தலைமுடி, கண்ணைக் கவரும் காஸ்ட்யூம், ‘உவ்வே’ என்று சொல்ல வைக்கும் உடல்மொழி மற்றும் குரல் உச்சரிப்போடு இதுவரை நாம் பார்க்காத இருப்பை வெளிப்படுத்தி ‘அட்ராசிட்டி’ செய்திருக்கிறார். வழக்கமாக பசிலின் படங்களில் இருக்கும் ‘அப்பாவித்தனமான’ டெம்ப்ளேட் இதில் லேசாகத் தலை நீட்டுகிறது. அதனால், அவரது பாத்திரத்தோடு நாம் பொருந்திப் போவதில் எந்தத் தடையும் இல்லை.
அது போக, விஜய்யின் ரசிகராக வேறு இதில் வந்து போகிறார் பசில். காவல்நிலையத்தில் இருந்து வெளியே வருகிற ஷாட்கள் உட்படச் சில இடங்களில் ‘தலைவா’ உள்ளிட்ட விஜய் நடித்தவற்றில் சிலவற்றை ‘இமிடேட்’ செய்கிறார். அதனைப் புரிந்தவர்கள் கைதட்டி ஆரவாரிக்கலாம்.
நாயகியாக இதில் அனிஷ்மா அனில்குமார் நடித்திருக்கிறார். குறும்பும் சிரிப்பும் அழுகையுமாக இதில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
’காதலுக்கு மரியாதை’ காலம் தொட்டு நம் கண்களில் தென்பட்டாலும், இதுவரை நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவைக் கொண்டாடுகிற படங்களை நாம் கண்டதில்லை. இப்படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் அக்குறையைத் தீர்த்திருக்கிறது.
சிஜு சன்னி இதில் நடித்திருப்பதோடு, இயக்குனர் சிவபிரசாத் உடன் இணைந்து திரைக்கதை வசனத்தையும் அமைத்திருக்கிறார். அவர் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்திற்கு இக்கதையில் பெரிதாக இடமில்லை. பணிச்சுமை அதன்பின்னே இருக்கலாம்.
சைக்கோ கில்லராக வரும் ராஜேஷ் மாதவன், இப்படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்.
தமிழில் ‘ரௌத்திரம்’ படத்தில் வில்லனாக வந்த சென்ட்ராயனை எப்படி நாம் கொண்டாடாமல்விட்டோமோ, கிட்டத்தட்ட அப்படியொரு இக்கட்டில் மாட்டுகிற அபாயத்தை லாவகமாக இதில் ராஜேஷ் மாதவன் கடந்திருக்கிறார். அவரது நடிப்பு ஒருசேர நமக்கு மிரட்சியையும் சிரிப்பையும் தருகிறது.
இது போக போலீஸ் உயரதிகாரியாக வரும் பாபு ஆண்டனி, முதியவர் கேசவகுரூப் ஆக வரும் புலியானம் பௌலோஸ், இன்ஸ்பெக்டராக வரும் பிரசாந்த் அலெக்ஸ், ப்ரீ வெட்டிங்ஷூட் நடத்தும் தம்பதிகளில் ஒருவராக வரும் பூஜா மோகன்ராஜ் உட்படச் சிலர் இதில் நடித்திருக்கின்றனர்.

பச்சை குத்துபவராகக் குரு சோமசுந்தரமும், கல்லறையில் இருக்கும் பிணமாக நடிகர் டொவினோ தாமஸும் ஒரு காட்சியில் தோன்றியிருக்கின்றனர்.
காட்சிகள் வெவ்வேறு இடங்களில் நடப்பதாகக் காட்டப்பட்டபோதும், இரவில் அவை நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அது உறுத்தலாகவோ, எரிச்சலூட்டுவதாகவோ தெரியாத அளவுக்கு அமைந்திருக்கிறது நீரஜ் ரவியின் ஒளிப்பதிவு.
பரபரவென்று நகரும் காட்சியமைப்புக்கு ஏற்ப ஷாட்களை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ.
’டார்க் காமெடி த்ரில்லர்’ வகைமையிலமைந்த ஒரு திரைப்படத்தின் காட்சிகளில் பின்னணிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென்று உணர்ந்து உழைத்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் மானவ் சுரேஷ்.
இது போக ஒலி வ்டிவமைப்பு, ஒப்பனை, விஎஃப்எக்ஸ், டிஐ என்று இப்படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் நமக்குச் செறிவானதொரு திரையனுபவம் கிடைக்க உதவுகின்றன.
ஜேகேவின் இசையில் பாடல்கள் சட்டென்று கவரும் வகையில் இல்லை. ஆனால், காட்சிகளில் தெரிகிற வேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறவாறு பின்னணி இசை இருப்பது சிறப்பு.
’காட்சிகளில் சீரியசாக சொல்லப்படுகிற விஷயங்கள் பார்வையாளர்களுக்குச் சிரிப்பை வரவழைக்க வேண்டும்’ என்கிற சவாலைத் திறம்படச் சமாளித்திருக்கிறார் இயக்குனர் சிவபிரசாத். ‘டைமிங்’ தவறாதவாறு அனைத்து விஷயங்களையும் அவர் ஒருங்கிணைத்திருப்பது சிறப்பு.
நிறையவே சினிமாத்தனம் உள்ள காட்சிகள் என்பதால், இதில் யதார்த்தம் சார்ந்த லாஜிக்குகளை எதிர்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தால், இப்படமே ‘அபத்தமாக’த் தெரியும். அதுவே ‘மரணமாஸ்’ படத்தின் பலவீனம்.
மற்றபடி, வழக்கத்திற்கு மாறான ஒரு ‘பிளாக் காமெடி’ படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு நல்லதொரு சாய்ஸ் ஆக இருக்கும் இந்த ‘மரணமாஸ்’. அது போக பசில் ஜோசப் உட்படச் சிறப்பான அரை டஜன் நடிகர்களின் பெர்பார்மன்ஸும் இதில் இருக்கிறது.