லயோலா நூற்றாண்டு விழா: கல்விக்கான தடைகள் புதிய வடிவில் வருகிறது… முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வந்து கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 1) அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் எழிலன், இனிகோ இருதயராஜ், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், முன்னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “சென்னையில் எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும் லயோலா மட்டும் தான் தனித்துத் தெரியும். கல்வி, ஸ்போர்ட்ஸ், ஆர்ட்ஸ் என அனைத்திலும் லயோலா ஸ்டூடன்ஸ்தான் ஹைலைட்டாக தெரிவார்கள்.

ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கியிருக்கக்கூடிய இந்த லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கலந்துகொண்டிருக்கிறேன். அதேநேரத்தில் இங்கே நான் படிக்காமல் சென்றுவிட்டேன் என்ற வருத்தத்தோடு நிற்கிறேன். நான் படித்தது பிரஸிடன்ஸி கல்லூரி.

என்னுடைய மகன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி படித்ததும் இந்த லயோலா கல்லூரிதான்.  உதயநிதி மட்டுமல்ல, தயாநிதிமாறன், கலாநிதி மாறன் ஆகியோர் இங்குதான் படித்தார்கள்.

நான் மட்டும்தான் மிஸ் ஆகிவிட்டேன். எனினும் இந்த நிகழ்ச்சிக்கு நான் முதலமைச்சராக மட்டுமல்ல உங்கள் காலேஜில் படித்த மாணவரின் பெற்றோராகவும் வந்திருக்கிறேன்.

இன்றைக்கு எவ்வளவோ மாறிவிட்டது. சென்னையை சுற்றி மட்டுமில்லை, தமிழ்நாடு முழுக்க பல்கலைக்கழகங்களையும் ஏராளமான கல்லூரிகளையும் உருவாக்கியிருக்கிறோம்.

ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலை இருந்ததா? இல்லை!. தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற கல்லூரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கல்விதான் அழிக்க முடியாத செல்வம் என்று சொல்கிறோமே, அந்த செல்வம் அப்போது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

கலைஞர் பிறந்த 1924-ஆம் ஆண்டில்தான் இந்த லயோலா நிறுவனத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 1925-ஆம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை இந்தக் கல்லூரி தொடங்கியது.

75 மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்விக் கண்ணைத் திறந்து விட்ட கல்லூரி இந்தக் கல்லூரி.

இந்திய நாட்டின் முதல் பத்து சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இந்த லயோலா கல்லூரி இருக்கிறது. இது லயோலாவுக்கு மட்டும் பெருமை மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தான் பெருமை.

இந்தியாவில் எந்த வகைப்பட்ட கல்வி நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடுதான் இருக்கிறது.

இதற்குக் காரணம், கல்விதான் ஒருவரின் அனைத்துத் தடைகளையும் தகர்த்து தலைநிமிரச் செய்யும் என்று கல்வி புரட்சியை தொடங்கி வைத்த நீதிக்கட்சி. அந்த நீதிக்கட்சி வழிவந்தவர்கள் நாங்கள்.

அதனால்தான் கல்விக்கு நாங்கள் அதிகம் முக்கியத்துவத்துவம் தந்தோம். தந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தருவோம் என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம். அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால்தான் திராவிட மாடல் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும்.

பெருந்தலைவர் காமராசரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. கலைஞரின் ஆட்சிக்காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது.

இவ்வளவு பெரிய கல்லூரியில் படிக்க கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பை எல்லோரும் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வியின் தேவையை அடுத்தடுத்து வருகின்ற மாணவர்களிடமும் பதிய வைக்கவேண்டும். ஏனென்றால், கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வர தொடங்கியிருக்கிறது.

கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கின்ற மாதிரியான பேச்சுக்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; ஆனால் மாணவர்களான நீங்கள் அறிவுக்களத்தில் உள்ள பயணத்தை பார்த்துக் கொள்ளுங்கள்”என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வாங்கலையா? – உங்களுக்கு கடைசி சான்ஸ்!

ஹெல்மெட் போடாமல் பைக் ரெய்டு: பிரஷாந்துக்கு அபராதம் விதித்த போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share