நகைச்சுவை மன்றமான பார் கவுன்சில்! மினி தொடர் – 14

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு – 14

சட்டம் படிக்க வயது தடை இல்லை என்ற அகில இந்திய பார் கவுன்சிலின் கொள்கையும் அதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும்தான் இன்று சட்டத் துறையில் தவறான நபர்கள் நுழைய காரணமாக அமைந்துவிட்டது என்று முன்னாள் பார் கவுன்சில் தலைவரும், மூன்றாவது முறையாக பார் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. சந்திரமோகன் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களைப் பார்த்து வருகிறோம்.

ADVERTISEMENT

Bar Council of India and Lawyers Mini Series 14

அவரே தொடர்கிறார்…

ADVERTISEMENT

“ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், கஞ்சா வியாபாரிகள் என்று பல்வேறு சட்ட விரோதத் தொழில் செய்பவர்கள் என அந்தக் கூடாரம் பூராவும் தங்களையும் தங்கள் தொழிலையும் காப்பாற்றிக்கொள்ள சட்டம் படிக்க ஆரம்பித்துவிட்டனர். இவர்களால்தான் நெறி சார்ந்த, நேர்மையான, சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்கள் நிறைந்த இந்த சமுதாயத்துக்கே கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது.”

**இதற்கும் பார் கவுன்சில் தேர்தல் தாமதமாவதற்கும் என்ன காரணம்?**

ADVERTISEMENT

“இவர்களைப் போன்ற தவறான வழக்கறிஞர்களை நீக்குவதாகச் சொல்லிதான், அதுபற்றி விசாரணை நடத்துவதாகச் சொல்லித்தான் 2015இல் இருந்து இந்திய பார் கவுன்சில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்கள். அதை வைத்துதான் தேர்தலைத் தள்ளிவைக்க தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்கள். போலி வழக்கறிஞர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற போர்வையில் அகில இந்திய பார் கவுன்சில் நாள்களை ஓட்டிக்கொண்டிருந்தார்களே தவிர, அதன்மூலம் தேர்தலைத் தள்ளிப்போட வைத்து தங்கள் பதவிக் காலத்தை நீட்டித்துக்கொண்டிருந்தார்களே தவிர அதற்காக ஒன்றையுமே செய்யவில்லை.

இந்தியா முழுவதும் தவறான வழக்கறிஞர்களைக் கண்டுபிடிக்கவோ, நீக்கவோ உண்டான எந்த செயல்பாட்டையும் எந்த பார் கவுன்சிலும் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து அறிக்கை கொடுப்பதோடு சரி.

இதை எதிர்த்துதான் பல வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். தேர்தலை நடத்த வேண்டும் என்று முறையிட்டார்கள். வழக்குத் தொடுத்தார்கள். அதில்தான் உச்ச நீதிமன்றம் இப்போது தேர்தலை 2018 மார்ச் 15க்குள் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது.

எனக்கிருக்கும் சந்தேகமெல்லாம் இந்த உத்தரவைக்கூட அகில இந்திய பார் கவுன்சில் நடைமுறைப்படுத்துமா என்பதுதான். ஏனென்றால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இதேபோன்ற உத்தரவைப் பிறப்பித்தபோதும்கூட, ‘வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை… அப்படி, இப்படி’ என்று சொல்லி தாமதித்தார்கள். கடைசியாக இனிமேல் அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

இந்த நிலையில் இப்போதும் தேர்தலை வேறு ஏதாவது காரணங்களைச் சொல்லி தள்ளிப்போடலாமா என்றுதான் அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் நினைக்கிறார்கள். அதற்கான வேலைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள் என்று நான் 100 சதவிகிதம் உறுதியாக நம்புகிறேன்.”

**அகில இந்திய பார் கவுன்சில் பற்றி விரிவாக சொன்னீர்கள். தமிழக பார் கவுன்சில் நிர்வாகம் எப்படி இருக்கிறது?**

“தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு கடந்த 2016ஆம் ஆண்டே தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் நடத்தியிருந்தால் புதிய நிர்வாகம் பதவியேற்று இந்நேரம் ஒரு வருடத்துக்கு மேல் ஆகியிருக்கும். ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சிலில் என்ன நடக்கிறது? தேர்தல் நடத்தாமல் பார் கவுன்சில் சட்டப்படி 8(ஏ) கமிட்டி என்ற ஒரு குழு அமைக்கப்படுகிறது.

இதில்தான் மிகவும் நகைப்புக்குரிய ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், நமது மக்களாட்சி முறை போலத்தான் மாநில பார் கவுன்சில்களை மத்திய பார் கவுன்சில் நிர்வாகம் கையிலெடுத்துக் கொள்கிறது என்று. இப்போது ஒரு மாநில அரசை மத்திய அரசைக் கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது முதல்வர், அமைச்சர்கள் பதவி இழப்பார்கள். அந்த ஆளுநர் ஆட்சி நடத்தும்போது ஆலோசனை கேட்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை, சான்றோர்களை, அறிஞர்களை வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், அந்த ஆளுநர் எந்த ஆட்சியைக் கலைத்தாரோ அந்த ஆட்சியின் முதல்வரையும், பொருளாதார அமைச்சரையும் தனக்கு ஆலோசகர்களாக வைத்துக்கொள்வாரா? அப்படி ஒரு நகைச்சுவைதான் தமிழ்நாடு பார் கவுன்சிலில் நடந்துகொண்டிருக்கிறது.

அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்…

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share