இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13
“வர்தா புயலின்போதுகூட தானே புயலின்போதுகூட பள்ளிக்கூடத்தையோ, கல்லூரியையோ பார்க்காதவனெல்லாம் வக்கீலாயிட்டான். இப்படிப்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாகுறதுக்கு யார் மூலக்காரணம்னு கேக்குறீங்களா?
அகில இந்திய பார் கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும்தான் இதுக்குக் காரணம். இதை நாம் ரொம்பத் தெளிவா சொல்றேன். ஏன்னா, எனக்கு ரொம்ப சங்கடம். ரொம்ப வேதனையோடதான் இதை நான் பதிவு பண்றேன்.
அதாவது உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்லாருக்கும் சட்ட அறிவு வேணும்னு நினைக்கிறாங்களே ஒழிய, அந்தச் சட்ட அறிவு எப்படி வரணும், எந்த மாதிரி வந்தால் அந்தச் சட்ட அறிவை கொடுக்க முடியும்குற சிந்தனையே இல்லாம, எல்லாரும் சட்டம் தெரிஞ்சிக்கணும். இந்தியாவுல இருக்குற 125 கோடி பேரும் சட்டம் படிக்கணும்னா அதுக்கு சாத்தியக் கூறுதான் என்ன? அந்த சாத்தியக் கூறுகள் பற்றிய ஆலோசனை இல்லாமலேயே, எந்த வயசுல வேணும்னாலும் சட்டம் படிக்கலாம்னு சொன்ன கொடுமைதான், இந்த சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் தவறான பாதைக்கு போறதுக்குக் காரணம்” என்று தன் இயல்பான சட்டத் தமிழில் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் பார் கவுன்சில் தலைவருமான ஆர்.கே.சந்திரமோகன்.
எந்த வயதில் வேண்டுமானாலும் சட்டம் படிக்கலாம் என்பதற்கான பின்னணியைப் பார்த்தோம் என்றால் அதில் நம் நாட்டின் பல உயர் நீதிமன்றங்கள், அகில இந்திய பார் கவுன்சில், உச்ச நீதிமன்றம் என்று போகிறது இந்த விவகாரம்.
சட்டம் படிக்க வயது தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கான பின்னணியை இப்போது நாம் சற்று ஆராய வேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருக்கும் டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசியச் சட்டப் பல்கலைக்கழகம், சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அதாவது Common Law Admission Test (CLAT) எழுதுவதற்கு 20 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று வரம்பு நிர்ணயித்திருந்தது.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதைக் காரணம் காட்டி தேர்வு எழுத அனுமதி மறுத்துவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம். அவர்களில் இருவர் 2014ஆம் ஆண்டே இந்தத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், தங்கள் விருப்பப்படி இடம் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் 2015ஆம் ஆண்டு எழுதினார்கள். ஆனால் அவர்களுக்கு வயது ஆகிவிட்டது என்று சொல்லி மறுத்துவிட்டது நிர்வாகம்.
தேர்வு எழுத மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அப்போது அகில இந்திய பார் கவுன்சிலின் கருத்தைக் கேட்டது உயர் நீதிமன்றம். அப்போதுதான் முக்கியமான தகவல் உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதாவது, சட்டக் கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலின் அதிகாரபூர்வ அமைப்பான அகில இந்திய பார் கவுன்சில் தனது சட்டக் கல்வி சட்டம் 2008-ன்படி, சட்ட நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு அதிகபட்ச வயது 20 என்று நிர்ணயித்திருந்தது. ஆனால், இதுபற்றி பல முறையீடுகளை எதிர்கொண்ட அகில இந்திய பார் கவுன்சில், ‘ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதிட அதிகபட்ச வயது 20’ என்ற தனது விதிமுறையை 2013ஆம் ஆண்டு வாபஸ் பெற்றது.
இதைக் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் குப்தா, ‘டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசியச் சட்டப் பல்கலைக் கழகமானது அகில இந்திய பார் கவுன்சில் வயது உச்சவரம்பை திரும்பப் பெற்றதுகூட தெரியாமல், கண்ணை மூடிக்கொண்டு தேர்வுக்கு வயது உச்சவரம்பை நிர்ணயித்திருக்கிறது. பார் கவுன்சிலே வயது வரம்பு பற்றிய தனது ஆணையை வாபஸ் பெற்ற பிறகு, சட்டப் பல்கலைக்கழகங்கள் சட்டம் படிக்க வயது வரம்பு நிர்ணயிப்பது சரியல்ல. பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்தலாமே தவிர, வேறு எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. அதனால் வயது உச்சவரம்பு நிர்ணயித்த லோகியா பல்கலைக்கழகத்தின் உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவை வி.கோபால கவுடா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.
இதற்கு முன்பே சட்டம் படிக்க வயது வரம்பு பற்றி பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம், ‘சட்டம் படிக்க வயது ஒரு தடையில்லை’ என்று அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
சமூக விரோதிகள் பலர் தங்கள் சமூக விரோத தொழிலுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ள எப்போது வேண்டுமானாலும் தாங்களே சட்டம் படித்துக் கொள்ளலாம் என்று நிலைக்கு வர காரணம், பார் கவுன்சில் வயது வரம்பைத் திரும்பப் பெற்றதும், அதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும்தான் என்கிறார் மூத்த வழக்கறிஞர் சந்திரமோகன். இவர்களை நீக்குவதற்கான நடவடிக்கையின் பெயரால்தான் இன்று பார் கவுன்சில் தேர்தல் தாமதமவதற்கும் காரணமாகிறார்கள்!
உண்மையிலேயே பார் கவுன்சில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறதா?
(விளக்கு ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12