பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்-7

Published On:

| By Balaji

பார் கவுன்சில் நிர்வாகம் என்ற உயரத்தில் புதிய வழக்கறிஞர்கள், புதிய சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், புதிய வெடிப்புகளை, புதிய தெறிப்புகளை உருவாக்கும் வழக்கறிஞர்கள் ஏறி வந்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான்… ‘ பார் கவுன்சில் தேர்தலில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கக் கூடாது, வாக்குறுதிகள் வழங்கப்படக் கூடாது’ என்ற புதிய நிபந்தனைகளை திணிக்க வைக்கிறது. இதுவே பெரும்பாலான இளம் வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தான் பார் கவுன்சிலில் போட்டியிடும் தகவலையும், தான் உறுப்பினரானால், என்னென்ன செய்வேன் என்பது பற்றிய வாக்குறுதிகளையும் சிறு சித்திரமாக வடிவமைத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். அவரிடம் பார் கவுன்சில் தேர்தலில் இதுபோன்ற விஷயங்களை செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே என்று நாம் கேட்டபோது அந்த வழக்கறிஞர் அளித்த பதில் முக்கியமானது.

’’ஆமாம்… இப்படி விளம்பரம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள். நான் என்னை அறிமுகம் செய்துகொள்ள வேறு என்ன வழி? ஏன் பார் கவுன்சிலே அனைத்து வேட்பாளர்களுக்கும் ஓர் மேடை அமைத்துக் கொடுக்க வேண்டியதுதானே? தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பார் கவுன்சிலே மேடைகள் அமைத்து அதில் வேட்பாளர்களை ஏற்றி, அவர்களின் கருத்துகளை வழக்கறிஞர்களை சொல்ல ஏற்பாடு செய்யலாமே? அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில் இந்த நிபந்தனைகள் ஒரு சாராருக்கு மட்டுமே சாதகம் செய்யக் கூடியவை. மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் எதிரானவை.

என் எதிர்ப்பை நான் எப்படித் தெரிவிப்பது? வார்த்தைகளால் அல்ல, அவர்கள் எதைச் செய்யக் கூடாது என்கிறார்களோ அதைச் செய்வதுதான் எதிர்ப்பைத் தெரிவிக்க ஒரே வழி. அதனால் நான் என்னைப் பற்றி மற்றவர்களிடம் அறிமுகம் செய்துகொள்வேன். அதை அவர்கள் விளம்பரம் என்கிறார்கள், நான் அறிமுகம் என்கிறேன்’’ என்று சிரித்தார்.

இந்த நிலையில்தான், பார் கவுன்சில் முன்னின்று நடத்த வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்ச்சியை தன் தோளில் போட்டுக் கொண்டு மதுரையில் நடத்தியிருக்கிறார்கள் மதுரை லாஸ் சட்ட செயல்பாட்டு மையத்தினர்.

ஆம்… பார்கவுன்சில் தேர்தலில் , போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அமரவைத்து, அவர்கள் அனைவரையும் பேசவைத்து, அதன் பின்னர் வழக்கறிஞர்கள் அவர்களிடம் நேருக்குநேராக கேள்விகள் கேட்டு ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தும் அருமையான நிகழ்வு மதுரையில் நடத்தப்பட்டிருக்கிறது.

பார் கவுன்சில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் வாழ்த்து கலந்த எச்சரிக்கைக்குப் பின் வெற்றிகரமாக நடந்திருக்கிறது இந்த நிகழ்வு.

இந்தியாவிலேயே முதன்முதலாக இப்படி ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை நடத்தி மதுரை வழக்கறிஞர் பெருமக்கள் நல்லதோர் முன்னுதாரணத்தை இந்திய வழக்கறிஞர் சமூகத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

மதுரையிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களில் ஒன்பது வழக்கறிஞர் பெருமக்களான திருமதி. திலகா பாலசுப்பிரமணியன் (173), திரு. B.அசோக் (15), திரு. P. தர்மராஜ் (32), திரு. N.முத்து அமுதநாதன் (85)), திரு. T. வில்லவன் கோதை (190), திரு. M. K. சுரேஷ் (166), திரு. T. சேகரன்(140) திரு. V. முருகன்(82), மற்றும் திரு. P. தனசேகரன் (30) ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அடைப்புக்குறிக்குள் இருப்பவை அவர்களின் வேட்பாளர் எண்கள்.

முதலில் வேட்பாளர்கள் சீட்டுக்குலுக்கல் முறையில் வரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வொருவராக பேசினர். பின்னர், வழக்கறிஞர்களான பார்வையாளர்கள் நேருக்குநேராக வேட்பாளர்களிடம் கேள்விகள் கேட்க அரங்கம் சூடுபிடித்தது.

பார் கவுன்சிலின் முக்கியத்துவம், பார் கவுன்சிலின் தற்போதைய தரமும் நிலைமைகளும், போலி வக்கீல்கள், வழக்கறிஞர்களின் உரிமைகள், அதற்கான போராட்டங்கள், எதிர்கொண்ட பிரச்சனைகள், வெளிமாநில விசாரணைகள், விதிக்கப்பட்ட கொடுந்தண்டனைகள், இன்னும் தீர்வு காணப்பட வேண்டிய சென்னை வழக்கறிஞர்களின் தண்டனைகள், வழக்கறிஞர் சேமநல நிதி, உயர்நீதிமன்றத்தில் தமிழ், பார் கவுன்சில் தேர்தல்களில் நிகழும் சீரழிவான முறைகேடுகள் என்று பல்வேறு கேள்விகள் பல்வேறு பதில்கள் என்று இந்த நிகழ்வு சூடுபிடித்தது.

பார் கவுன்சில் தரப்பில் இருந்தும் இந்த நிகழ்ச்சி எவ்வாறு நடக்கிறது என்பதைக் கண்காணிக்க ஆட்கள் வந்திருந்தார்கள். பல நீதிபதிகளும் இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடப்பதை சுட்டிக்காட்டி மனதாரப் பாராட்டுகிறார்கள்.

எதை பார் கவுன்சில் தேர்தல் அலுவலர்கள் தடை செய்தார்களோ, அந்த ஜனநாயகத்தை மதுரையில் மீட்டிருக்கிறது லாஸ் சட்ட செயல்பாட்டு மையம்.

இந்நிகழ்வின் நெறியாளரான மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லனிடம் பேசினோம்.

“இந்த தேர்தலில் வெற்றிபெறுகிற வேட்பாளர்கள், பார் கவுன்சில் தலைவர் துணைத்தலைவர் மற்றும் இந்திய பார் கவுன்சில் பிரதிநிதி போன்ற தேர்வுகளில் திரைமறைவு வேலைகளுக்கு இரையாகாமல், நேர்மையாகவும் வெளிப்படையாகயாகவும் வழக்கறிஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நபர்களை தேர்வு செய்வோமென்ற உறுதியையும் அளித்தார்கள்.

ஆக மொத்தத்தில், அருமையான இந்த முதல் முயற்சி செறிவான விவாதங்களோடு பெருவெற்றி அடைந்தது. இதேபோன்ற கலந்துரையாடல்கள் அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் வழக்கறிஞர் சங்கங்களே முன்வந்து நடத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள், பார் கவுன்சில் தேர்தல் தவறுகளை முற்றிலுமாக ஒழித்து, ஆரோக்கியமான பொறுப்பான பார் கவுன்சிலை உருவாக்கும். மதுரையில் வைத்த இந்த விழிப்புணர்வு தீ இப்போது தமிழகம் முழுதும் பரவிக்கொண்டுள்ளது. இதேபோன்ற வேட்பாளர்கள் ஒருங்கிணைவு நிகழ்வை தமிழகத்தின் வேறு இடங்களிலும் தேர்தலுக்கு முன்பே நடத்த திட்டமிட்டு வருகிறார்கள் சில வழக்கறிஞர்கள்.

அதுமட்டுமன்றி, தீய சக்திகளை ஓரங்கட்டி நீதிபரிபாலன அமைப்பின் நலன்களையும் பாதுகாக்கும் நல்லதோர் பார் கவுன்சிலை இத்தகைய சிந்தனை அரங்கங்கள் உருவாக்கும். இத்தகைய நற்செறிவு மிகுந்த அருமையான முயற்சிகளை துவக்கிய லாஸ் சட்ட செயல்பாட்டு மையத்தின் பொறுப்பாளரான வழக்கறிஞர் சந்தானத்தையே சேரும்’’ என்கிறார்.

இந்த விழிப்புணர்வுத் தீ பரவட்டும்….

(பயணம் தொடரும்)

எழுத்தாக்கம்: ஆரா

[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-6]

Bar Council Election Mini Series 7

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share