நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஜனவரி 27 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) இடையே கடந்த 2024 மார்ச் மாதத்திலேயே அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்தன.
இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆனால் எச்டிஎஃப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) போன்ற தனியார் வங்கிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஜனவரி 25- ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜனவரி 26- குடியரசு தினம் விடுமுறை நாட்களாக இருந்த நிலையில் 3-வது நாளாக இன்று வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
