விஜய்யின் ஜனநாயகம் திரைப்பட சர்ச்சை நீடித்து வரும் நிலையில் சென்சார் போர்டுக்கு (மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்) திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள் என தெரிவித்துள்ளார்.
ஜனநாயகனுக்கு தடை
விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இத்திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்குவதாகவும் சில திருத்தங்கள் செய்யவும் சென்சார் போர்டு முதலில் கூறியது. இதனடிப்படையில் படத் தயாரிப்பு நிறுவனம், திருத்தங்கள் செய்து மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பியது.
ஆனால் திடீரென ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் சென்சார் போர்டு உடனே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா அமர்வில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க கோரியது. இதனை ஏற்று இன்று பிற்பகல் நடந்த விசாரணையில், சென்சார் போர்டு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் ஆஜராகினர். இந்த வழக்கின் விசாரணை முடிவில், ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு வரும் 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிக்கைக்கு விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை.
