‘கர்நாடகாவில் விரைவில் தெருவோரக் கடைகளுக்கு தடை விதிக்கப்படும்’ என மேலவையில் அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே, சாலையோரக் கடைகளில் விற்கப்படும் உணவு வகைகள், தின்பண்டங்கள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பதால் அதன்மூலம் மக்களுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற உணவுகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற மேலவையில் பாஜக உறுப்பினர் ராமச்சந்திர கவுடா கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ்குமார் பதிலளித்தார். அதில், சீன வகை உணவுப் பொருட்களான கோபி மஞ்சூரியன் போன்றவை சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக கையேந்தி பவன் போன்ற சிற்றுண்டி கடைகளை நடத்திவரும் உரிமையாளர்கள் ஆபத்தான சுவையூட்டிகளையும் ரசாயனங்களையும் சேர்ப்பது தெரியவந்தது. அதாவது, மோனோ சோடியம் மற்றும் லோடோமேட் போன்ற செயற்கையான சுவையூட்டிகளைச் சேர்க்கின்றனர்.
இச்செயற்கையான சுவையூட்டிகள் மனிதர்களுக்கு ஆபத்தை உருவாக்கும். அதனால் அரசு அந்தக் கடைகளை மூடுவதற்கு யோசித்து வருகின்றன. மேலும் செயற்கையான சுவையூட்டிகளின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
