வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி விதிகளை மீறியவர்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை போக்குவரத்து போலீசாரின் அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், மருத்துவர்கள் எந்த விதமான விதி மீறல்களிலும் ஈடுபடுவதில்லை. மருத்துவர் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இடைக்கால அனுமதிக்கு மறுப்பு!

இந்த மனு நீதிபதி ஆர். கலைமதி முன்பு நேற்று (மே 9) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வழக்கறிஞர் K.M.D. முகிலன் ஆஜராகி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களுக்கு தனியாக விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை என்றும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமெனவும் கோரினார்.

ADVERTISEMENT

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர்கள் ஸ்டிக்கர் பயன்படுத்த இடைக்கால அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மாநிலம் முழுவதும் அமல்படுத்த மனு!

அதே போன்று, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது.

இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா என்று விளக்கப்படவில்லை. மேலும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை.

வாகனங்களின் முன்புறம், பின்புறம் உள்ள கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும்.

பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

KL Rahul: கேப்டன் பதவியை இழக்கிறாரா கே.எல்.ராகுல்?

அட்சய திருதியை : அதிகாலையில் உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share