நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை… இரு மாநில உயர் நீதிமன்றங்கள் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

Ban on publishing NEET exam results

இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 17) தடை விதித்துள்ளது. Ban on publishing NEET exam results

கடந்த மே 4ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இளநிலை நீட் தேர்வு நடைபெற்றது. 

அப்போது தேர்வு அறைக்கு செல்வதற்கு மாணவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

மூக்குத்தி, திருமணமானவர்கள் தாலி ஆகியவை கூட கழட்டி வைத்துவிட்டு வரவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  இதுபோன்ற கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு முன்பே பதற்றமடைந்தனர். 

இதனால் மாணவர்களால் சரியான நேரத்திற்கு தேர்வறைக்கு செல்லாத நிலையும் ஏற்பட்டது. இப்படி நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதத்தில் வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டிருந்தது. 

இந்த சூழலில், திருவள்ளூரை சேர்ந்த சாய் பிரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன், ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 மாணவர்கள் நடந்து முடிந்த நீட் தேர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில், “கடந்த மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா சிஆர்பிஎஃப் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. 

தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை என்றாலும், காலை 11 மணிக்கே மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

அனைத்து சோதனைகளுக்குப் பிறகு 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், அன்றைய தினம் 2.45 மணிக்கு கன மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக மாலை 4.15 வரை மின்தடை ஏற்பட்டதால், குறைவான வெளிச்சத்தில் சரியாக தேர்வு எழுத முடியவில்லை. 

அதே நேரம் தேர்வு மையத்திற்குள் மழை நீரும் புகுந்ததால் மாற்று இடத்தில் அமர வைக்கப்பட்டோம். இதன் காரணமாக நீட் தேர்வை எழுதுவதில் மேலும் சிரமத்தைச் சந்தித்தோம். 

எனவே கூடுதல் நேரம் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தேர்வு மைய அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டது. எங்களால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை. 

இது தொடர்பான புகாரை தேசிய தேர்வு முகமைக்கும் மின்னஞ்சல் மூலம் புகாராக அனுப்பி வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

பலருடைய கனவான மருத்துவ படிப்பு, நுழைவு தேர்வின் போது ஏற்படும் சிறு குறைபாட்டால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது.

மறுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 

எனவே நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும். மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (மே 17) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜரானார். 

அவர், “மின்தடை ஏற்பட்டதா என்பது குறித்தும் அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்தும் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். Ban on publishing NEET exam results

ஏற்கனவே மத்திய பிரதேச உயர் நீதிமன்றமும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 12 தேர்வு மையங்களில், மே 4 அன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் போதுமான வெளிச்சம் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டனர். 

இந்த சூழலில் தான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த மனுவில், “3.30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை. தேர்வு முடிய வெறும் 30 நிமிடங்களுக்கு முன்புதான் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. எனவே தேர்வு முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், தேசிய தேர்வு முகமை, போதிய அடிப்படை வசதிகளுக்கான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவில்லை என்று தெரியவருகிறது. 

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கமளிக்க வேண்டும். அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது. Ban on publishing NEET exam results

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share