ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தக்கூடாது என்று சென்னை நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ban on Jacto Geo protest
அரசு ஊழியர்கள் சங்கம், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை (பிப்ரவரி 25) தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 24) முதல்வர் ஸ்டாலின் அமைத்த, அமைச்சர் எ.வ. வேலு தலைமையிலான குழு அரசு ஊழியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதற்கிடையே தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி திருச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்று ஏற்கனவே உச்ச, உயர் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளன. வேலை நிறுத்த போராட்டங்களுக்கு தடையும் விதித்துள்ளன.
அதன் அடிப்படையில் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் சட்டவிரோதமானது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்றாலும் அது அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சனை.
சாலை மறியல் நடத்தினால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், மருத்துவமனைகளுக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.
சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கும் போது அவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படும்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து தற்காலிக பணி நீக்கம் செய்து விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு ,ஸ்ரீமதி அமர்வில் இன்று (பிப்ரசரி 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில், அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களுக்கு குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பேச்சுவார்த்தை முடியும் வரை எவ்விதமான போராட்டங்களையும் நடத்தக்கூடாது என்று கூறி மனு தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்
இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். ban on Jacto Geo protest