பம்பரம் இல்லையென்றால் தீப்பெட்டி… துரை வைகோ திட்டம்!

Published On:

| By Kavi

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நாளை காலை  9  மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (மார்ச் 26) காலை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இவ்வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தபோது, “பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை. எனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து  சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரே முடிவெடுப்பார்” என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள் நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்கவும், அதுதொடர்பான அறிக்கையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால்  28  ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை முடிந்து, 30 ஆம் நாள் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரான பிறகுதான் அனைத்து வேட்பாளர்களுக்கும் என்ன சின்னம் என்று தொகுதி தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார்.

பம்பரம் பொது சின்னப் பட்டியலிலும்  இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே மதிமுக வேட்பாளர் துரை வைகோ பம்பரம் சின்னத்தை கேட்கவும் வாய்ப்பில்லை.

24 ஆம் தேதி திருச்சியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘செத்தாலும் தனிச் சின்னம்தான்’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார் துரை வைகோ.  இந்த நிலையில் பம்பரம் இல்லையென்றால் தீப்பெட்டி சின்னம் கேட்பது என்ற முடிவில் இருக்கிறார் துரை வைகோ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Vettaiyan: டீசர் ரிலீஸ் எப்போது?

மீண்டும் வெல்வாரா தமிழச்சி…குறிவைக்கும் ஜெயவர்தன்…தட்டிப் பறிப்பாரா தமிழிசை..தென்சென்னை ரேஸில் முந்துவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share