IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மெகா சாதனை படைத்த அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ball hitting rishab pant hardly… india in tough
இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று (ஜூலை 23) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சுப்மன் கில் 12 ரன்களில் எடுத்து வெளியேறினார்.
அதன்பின்னர் அணியை மீட்கும் முயற்சியில் சாய் சுதர்சன் – ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்து வந்தது.
சாதனையும்… வேதனையும்…
அதிரடியாக ஆடத் தொடங்கிய ரிஷப், 19 ரன்களை கடந்தபோது, இங்கிலாந்து மண்ணில் 1000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் (13 இன்னிங்ஸ்) என்ற வரலாற்று சாதனையை படைத்தார். முன்னதாக, இதற்கு முன்னாள் இந்திய அணி வீரர் தோனி 778 ரன்களை சேர்த்திருந்ததே சாதனையாக இருந்து.
தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த அவர், 37 ரன்களை எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்றார். ஆனால் நேராக சென்ற அந்த பந்து அவரது கால் பாதத்தை வேகமாக தாக்கியது. உடனடியாக பிசியோ களத்திற்கு வந்தார்.

அப்போது ரிஷப் பண்ட் ஷூவை கழற்றி பார்த்த போது, அவரது சுண்டு விரலுக்கு அருகில் மிகப்பெரிய வீக்கம் ஏற்பட்டு காலில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. இதனையடுத்து வலியால் துடித்த அவரை மினி ஆம்புலன்ஸில் அமர வைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக வீரர் சாய் சுதர்சன் சர்வதேச டெஸ்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். களத்தில் ஜடேஜா மற்றும் ஷர்துல் இருவரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

ரிஷப் பண்ட்டிற்கு இந்தத் தொடரில் காயம் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முந்தைய லார்ட்ஸ் டெஸ்டில் விக்கெட் கீப்பிங் செய்தபோது, அவருடைய விரலில் காயம் ஏற்பட்டது. இப்போது காலில் அடிபட்டுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் அபாரமான ஃபார்மில் இருந்து வரும் ரிஷப் பண்ட் இதுவரை 448 ரன்களை சேர்த்திருக்கிறார். காயத்தின் காரணமாக அவர் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால், அது இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு பின்னடைவாக இருக்கும்.
