பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யாவைத் தொடர்ந்து ஆர்யா, அதர்வா ஆகியோரும் நாயகனாக இணைந்துள்ளனர்.
சென்ற வாரம் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தைத் தொடர்ந்து, தற்போது இறுதிச் சுற்று படத்தின் இயக்குநர் சுதா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களுக்குப் பிறகு நடிக்கவுள்ளார் சூர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாலா, கடந்த சில வருடங்களாக தொடர் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய இரு படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்தன. விக்ரம் மகன் துருவ்-ஐ நாயகனாக அறிமுகப்படுத்த, அர்ஜூன் ரெட்டி ரீமேக்கை பாலா ’வர்மா’ என்ற தலைப்பில் இயக்கி முடித்தார். ஆனால், தயாரிப்பாளருக்கு அப்படம் பிடிக்காததால் வர்மா கைவிடப்பட்டது.
இந்நிலையில், பாலா ஒரு இடைவெளிக்குப் பின் சூர்யாவை நாயகனாக வைத்து, ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். துவக்கத்தில் சூர்யா மட்டுமே நாயகன் என செய்திகள் வந்தது. இந்நிலையில், ஆர்யா, அதர்வா ஆகிய இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இப்படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்துள்ள நிலையில், ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் இப்படம் குறித்த முழு தகவலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அதே சமயம், சூர்யா-ஆர்யா-அதர்வா ஆகிய மூவரும் பாலா படத்தில் முன்னரே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
