தெலுங்கு நடிகர் பாலய்யா என்று புகழப்படும் என்டிஆர் பாலகிருஷ்ணாவுக்கு, தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உண்டு.
அவர் தெலுங்குப் படங்களில் சுண்டு விரலால் குத்தி ரயிலை நிறுத்துவது, கோவில் கோபுரத்தை தூக்கித் திருப்பிப் போடுவது, கப்பலை கக்கத்தில் வைத்துத் தூக்கிக் கொண்டு போவது.. நாம் எல்லாம் ஆலங்குச்சி வேப்பங்குச்சியில் பல் விளக்கினால், பாலைய்யா ஆல மரத்தையே பிடுங்கி பல் விளக்குவது..
இவற்றை எல்லாம் கிண்டல் செய்ய ஆரம்பித்து அப்புறம் அவரையே ரசிக்க ஆரம்பித்த காரணத்தால் பெருகிய கூட்டம் அது. பாலய்யா தமிழ் நாட்டிலும் ஜெய் பாலய்யா ஆனது இப்படிதான், சனாதனம் வேதம் இவற்றின் முரட்டு ஆதரவாளர் இவர்.
தமிழ் சினிமாவை தெலுங்கு சினிமாவின் ஒரு ஏரியாவாக ஆக்கும் முயற்சியாக எல்லாம் தெலுங்குப் படங்களுமே அரைவேக்காடு டப்பிங்கில் தமிழ் பேசும்போது, என் டி ஆரின் மகன் மட்டும் என்ன மட்டமா?
தனது அகண்டா படத்தின் விளம்பரத்துக்காக சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
”என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. நான் இங்கு தான் பிறந்தேன். அகண்டா 2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். சென்னை என் ஜென்ம பூமி, தெலுங்கானா என் கர்ம பூமி (செயல்படும் நிலம்) ஆந்திரா ஆத்ம பூமி.
என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்கு தான் நடந்தது. மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. என் அப்பா என் டி ஆர் தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார். அதனால்தான் தெலுங்கு கங்கை திட்டம் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொடுத்தார்.
அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, இந்தப்படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல்லை, இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு.
நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப்படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது அனைவரும் படம் பாருங்கள். “
படத்தின் டிரைலரில் ஒரு காட்சியில் “பார்த்த உடனே நீ யாருன்னு தெரிஞ்சுக்க நீ என்ன வாத்தியார் எம் ஜி ஆரா? இல்லை (கையெடுத்துக் கும்பிட்டபடி) கடவுள் என் டி ஆரா?” என்று சொல்கிறார் என் டி ஆர் பாலகிருஷ்ணா.
அப்புறம் என்ன …? ம்ம்ம்… ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்..
— ராஜ திருமகன்
