எஸ்.வி.ராஜதுரை
அறுவை சிகிச்சையும் ‘பகவத் கீதை’யும்
2007 ஏப்ரல் மாதத்தில், சென்னையில் கிரேக்க இதிகாசத்தில் குறிப்பிடப்படும் ஒரு கடவுளின் பெயரைத் தாங்கிய தனியார் மருத்துவமனையொன்றில் இதய அறுவை சிகிச்சை (bypass surgery) செய்துகொண்டேன். அறுவை சிகிச்சை செய்யும் இடத்துக்கு நான் கொண்டு செல்லப்படும் முன் ஒரு செவிலியர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது ‘பகவத் கீதை’. எதற்காக அதை என்னிடம் தருகிறீர்கள் என்று கேட்டேன். “இது மிக முக்கியமான, கடினமான அறுவை சிகிச்சை. எனவே உங்களுக்கு மன வலிமை தருவதற்காக இதைத் தருகிறோம்” என்றார் அவர். அதைத் தொட்டுப் பார்க்கக்கூட மறுத்துவிட்டேன். என் செய்கை அவருக்குப் புரியவில்லை.
ஒருவேளை நான் கிறிஸ்தவனாக இருக்கலாமோ என்று நினைத்த அவர் ஓடிப்போய், பைபிள் பிரதியொன்றைக் கொண்டு வந்தார். நல்லவேளையாக என் பெயர் முஸ்லிம் அடையாளம் எதையும் கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால், அவர் ‘குர்ஆன்’ பிரதியொன்றைக் கொண்டு வந்திருப்பார். நான் அவரிடம், “மருத்துவர்களையும் நவீன மருத்துவ முறைகளையும் நம்பித்தான் இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கின்றேனே தவிர, நீங்கள் காட்டும் காகிதங்களை நம்பியல்ல. மேலும், கிறிஸ்தவர்களுக்கு ‘பைபிளும்’ இஸ்லாமியர்களுக்கு ‘குர்ஆனும்’ இருப்பது போல, இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு பொதுவான மறை நூல் ஏதும் இல்லை. தவிரவும், ‘பகவத் கீதை’ புனித நூலோ, மறை நூலோ அன்று. அது சகோதரக் கொலையை நியாயப்படுத்தும் நூல்; ஒழுக்கக்கேட்டைப் பரப்பும் நூல்” என்றேன். இதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி அதிர்ச்சியடைந்துவிட்டார்.
நவீன மருத்துவ சிகிச்சை தரும் அந்த மருத்துவமனையிலேயே ‘பகவத் கீதை’ இந்துக்களின் மறை நூல் என்று கருதப்பட்டிருந்த நிலை இப்போது வளர்ச்சியடைந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டாயப் பாடமாக – குறுகிய காலமே என்றாலும் – ஆக்கப்பட்டிருந்தது என்பதைக் கருத்தில் கொள்கையில் இந்துத்துவ சக்திகள் அதை ஏன் மக்கள் மீது திணிக்க முயல்கிறார்கள் என்பதை என்னால் இன்று இன்னும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.
அண்ணல் அம்பேத்கர் பார்வையில் ‘பகவத் கீதை’
இந்தப் புரிதல் எனக்குக் கிடைப்பதற்கு முதன்முதலில் உதவியவை, அண்ணல் அம்பேத்கரின் ‘இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ நூலில் அவர் ‘கீதை’ பற்றிக் கூறியுள்ளவை. இதில் அவர், ‘பகவத் கீதை’யை ஒரு அறநூல் என்று கூறுவதை ஆணித்தரமாக மறுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணங்களில் ஒன்றை மட்டும் இங்கு காண்போம்.

கீதை போரை நியாயப்படுத்துகிறது. அர்ஜுனன், தான் போரை விரும்பவில்லை என்றும் சொத்துக்காக மக்களைக் கொல்லக்கூடாது என்றும் கூறுகிறான். ஆனால், போருக்கு ஆதரவாகவும் போரில் பிறரைக் கொல்வதற்கு ஆதரவாகவும் கிருஷ்ணன் தத்துவ விளக்கம் கூறுகிறான். இந்தத் தத்துவ விளக்கம் இரு கூறுகளைக் கொண்டுள்ளது:
(1) இவ்வுலகம் அழியக்கூடியது. மனிதனும் இறப்புக்குரியவன். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். மனிதன் மரணத்தைச் சந்தித்தே தீர வேண்டும். மனிதன் இயற்கை மரணம் அடைகிறானா, வன்முறையின் மூலம் கொல்லப்படுகிறானா என்பதைப் பற்றி விவேகிகள் கவலைப்பட வேண்டியதில்லை. வாழ்வே மாயம். எனவே வாழ்வு முடிவதைப் பற்றி ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
(2) உடலும் ஆன்மாவும் ஒன்றே என்று கருதுவது தவறு. இரண்டும் வெவ்வேறானவை. அதுமட்டுமன்று. உடல் அழியக்கூடியது; ஆன்மா அழிவற்றது; நிரந்தரமானது. சாவு நேர்கையில் அழிவது உடல் மட்டுமே! ஆன்மா என்றும் அழிவதில்லை. ஆன்மா அழியாதது மட்டுமன்று. அது காற்றால் உலராதது; தீயினால் பொசுங்காதது; ஆயுதத்தால் வெட்டப்படாதது. எனவே ஒரு மனிதன் கொல்லப்படுகையில் அவனது ஆன்மாவும் கொல்லப்படுகிறது எனக் கருதுவது தவறு. ஒருவன் தனது ஆடைகளைக் களைந்தெறிந்துவிட்டுப் புதிய ஆடைகளை அணிந்துகொள்வது போலத்தான், ஆன்மா ஓர் உடலை விட்டு மற்றொரு உடலுக்குள் நுழைவதும் ஆகும். ஆன்மா கொல்லப்படுவதில்லை என்பதால் ஒரு மனிதனைக் கொல்வது இரங்கத்தக்கதல்ல. போரும் கொலையும் துயரத்துக்கோ, வெட்கப்படுவதற்கோ உரியன அல்ல.
கொலை செய்வது சத்திரியர்களின் கடமை என்று கிருஷ்ணன் தத்துவ விளக்கம் கொடுப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று கூறும் அம்பேத்கர், ஒரு கொலை வழக்கில் கிருஷ்ணன் நீதிமன்றத்துக்கு வந்து ‘பகவத் கீதை’யில் அவன் கூறும் விவாதத்தின் அடிப்படையில், கொலை கொலையன்று (அதாவது அழிக்கப்பட்டது உடலேயன்றி, ஆன்மாவல்ல) என்று வாதாடினால் அவனை மனநோய் விடுதிக்கு அனுப்ப மாட்டார்களா என்று கேட்கிறார். கீதையின் அடிப்படைக் குறிக்கோளே வர்ண தர்ம முறையை நிலைநிறுத்துவதுதான் என்பதற்கான ஏராளமான சான்றுகளையும் தருகிறார் அம்பேத்கர்.
இந்திய வரலாற்றில் ‘பகவத் கீதை’
அடுத்ததாக, கீதை பற்றி நான் படித்தது கோவையிலுள்ள ‘விடியல் பதிப்பகம்’ 2004இல் வெளியிட்ட ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ என்னும் நூல். ஜம்மு காஷ்மீரின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் ஷேக் அப்துல்லாவுடன் இணைந்திருந்தவர், ஷேக் அப்துல்லாவின் அமைச்சரவை உறுப்பினர், பிறப்பால் பார்ப்பனர் (காஷ்மீர் பண்டிட்), ஆராய்ச்சி அறிஞர் என்ற பரிமாணங்களையுடைய பிரேம்நாத் பஸாஸ் ஆங்கிலத்தில் கீதை பற்றிய எழுதியிருந்த நூலின் தமிழாக்கம்தான் அது. கே.சுப்பிரமணியத்தால் சிறப்பாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நூலின் (960 பக்கங்கள்) மலிவுப் பதிப்பு (விலை ரூ.400/-) அண்மையில் வெளிவந்துள்ளது.

ஆதிக்கக் கருத்துநிலை
எந்த ஒரு சமுதாயத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் ஆளும் வர்க்கத்தினரின் கருத்துகளே என்பது மார்க்ஸின் கருத்து. தன்னால் திரட்ட முடிந்த பல்வேறு தரவுகளிலிருந்து இந்தியாவில் நிலவிய சாதிய அமைப்பைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்த மார்க்ஸ், பார்ப்பனியம் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்கான வாய்ப்புப் பெற்றிருந்தால் இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கருத்துகள் பார்ப்பனியக் கருத்துகளே என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் காட்டியிருக்க மாட்டார். இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய காலனியச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக தார்மிக ஆவேசத்துடன் கண்டனக் குரல் கொடுத்த அவர், பெளத்தப் புரட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, முகலாயர் ஆட்சிக் காலம் வரை சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நிலவிய பார்ப்பனியக் கொடுங்கோன்மையுடனும் மனிதர்களின் மனத்தில் அது ஏற்படுத்திய வக்கிரங்களுடனும் ஒப்பிடுகையில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம் என்னும் முடிவுக்குக்கூட வந்திருக்கக்கூடும் என நாம் நினைக்கும் அளவுக்கு பிரமிக்கத்தக்க சான்றுகளையும் வாதங்களையும் நமக்கு வழங்குகிறது ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’

இந்தியாவின் அறிவொளித் தத்துவ மரபு
இந்தியத் தத்துவ வரலாற்றைக் கற்க விரும்புபவர்களுக்கு இன்றியமையாத கருத்துக் களஞ்சியமாக விளங்கும் இந்த நூல், இந்தியாவில் எப்போதும் செல்வாக்குப் பெற்றிருந்த, நீடித்து நிலைத்துள்ள ஒரே தத்துவ மரபு ‘வேதாந்த ஆன்மிகம்’ மட்டுமே என்னும் பார்ப்பனியக் கருத்தைத் தகர்த்தெறியும் வகையில், பண்டைய கிரேக்கச் சிந்தனை மரபில் காணப்படும் பொருள்முதல்வாதப் போக்குகளைக் காட்டிலும் மேலும் அறிவியல்தன்மை வாய்ந்த, வெகுமக்கள் ஆதரவைப் பெற்றிருந்த பகுத்தறிவுக் கொள்கைகள் இந்தியாவில் மக்கள் அறிவொளி பெறுவதற்கும் சமூக நீதியையும் சாதி மறுப்பையும் நிலை நிறுத்துவதற்கும் எவ்வாறு துணை புரிந்தன என்பதை ஆணித்தரமாக மெய்ப்பிக்கிறது.
சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற பார்ப்பனியம்
பார்ப்பனியம் பற்றிய பிரேம்நாத் பஸாஸின் விரிவான விளக்கங்கள் யாவும் பெரியாரின் ரத்தினச் சுருக்கமான கூற்றுக்குப் பொருத்தமானதாக அமைகின்றன: “ ‘பலித்த வரை’ என்பதுதான் பார்ப்பனியமும் இந்து மதமும் ஆகும்.” பார்ப்பனியம் பற்றிய பஸாஸின் கருத்துகளைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கூறலாம்: பார்ப்பனியக் கருத்துநிலை (ideology) பார்ப்பனர்களின் தனி நலனைப் பொது நலனாகவும் தேசம் முழுவதன் நலனாகவும் அடையாளப்படுத்துகிறது. பார்ப்பனியத்தின் மதிப்பீடுகள், அது முன் நிறுத்தும் வருண-சாதி அறங்கள் ஆகியன காலத்துக்கேற்றாற்போல் தம்மைப் புதுப்புதுப் வகைகளில் வெளிக்காட்டி வந்துள்ளன. பல சமயங்களில் பார்ப்பனியம் தனது அடிப்படைகளையே மறுத்த சாங்கியம், வைசேடிகம், சமணம், பெளத்தம் போன்ற மாற்றுத் தத்துவங்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு அவற்றின் சில கூறுகளைத் தனது நலன்களுக்கு உகந்தவாறு திரித்துத் தன்வயப்படுத்திக் கொண்டுள்ளது. எந்த வடிவத்தையும் எந்த நேரத்திலும் எடுக்கக் கூடியதாய் கிரேக்கத் தொன்மங்களில் கூறப்படும் புரோட்டியஸ் என்ற கடவுளுக்கு (’வடிவங்களின் கடவுள்’ என்று அது கூறப்படுகிறது) பார்ப்பனியத்தை ஒப்பிடலாம்.
பார்ப்பனியக் கருத்துநிலை, ஒருபுறம் எக்காலத்துக்கும் பொருந்தும் நீதி, அறங்கள், சாத்திரங்கள் பற்றியும் இவற்றில் உள்ளார்ந்த உண்மையை அறிய வல்லவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே என்றும் கூறுகிறது; மறுபுறம், உண்மை என்பது ஒரேபடித்தானவையல்ல; அதை ஒப்பீட்டளவில்தான் புரிந்து கொள்ளமுடியும்; பல உண்மைகள் இருக்கலாம்; குறிப்பிட்ட உண்மையிலும்கூட முரண்படும் கூறுகள் இருப்பதுண்டு என்றும் கூறுகிறது. இத்தகைய ‘பின் – நவீனத்துவக்’ கருத்தை நவீனத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டு வரும் பார்ப்பனியம், சமுதாயப் படிநிலையில் மேல் தட்டில் இருப்போருக்கும் அடிமட்டத்தில் இருப்போருக்கும் அவரவர்களுக்கே உரிய அறங்களும் உலகக் கண்ணோட்டமும் உள்ளன என்றும் படிநிலைச் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பும் பிற உறுப்புகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதாலும் ஒவ்வொரு சமுதாயப் பிரிவும் தனக்கே உரிய கடமைகளைச் செய்து வருவதாலும் சமுதாயத்தில் போட்டி பொறாமைகள் தவிர்க்கப்பட்டு நல்லிணக்கமும் ஒற்றுமையும் உருவாகின்றன என்றும் பசப்பித் திரிகிறது.
இந்திய வரலாற்றின் மூன்று கட்டங்களும் பகவத் கீதையும்
இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை பெளத்த காலத்துக்கு முந்தியது, பெளத்தர் காலம், பெளத்தர் காலத்துக்குப் பிந்தியது என மூன்று கட்டங்களாகப் பிரிக்கும் பஸாஸ், இந்தியாவில் ஏற்பட்ட ஒவ்வொரு சமூகப் புரட்சியையும் மறுமலர்ச்சியையும் ஒழித்துக்கட்டுவதில் பார்ப்பனியம் இன்று வரை தொடர்ந்து வெற்றியடைந்துள்ளதைத் தத்துவ, வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறார். இந்த அழிவு வேலைக்காகப் பார்ப்பனர்கள் வடித்தெடுத்த கருவிகளில் மிக வலுவானதாக இன்று வரை நீடித்துவருவது ‘பகவத் கீதை’ என்பதை நிறுவுவது இந்த நூலின் முதன்மை நோக்கமாகும்.
திலகரிலிருந்து காந்தி வரை, ஹெட்கேவரிலிருந்து மோகன் பகவத் வரை, பாரதியிலிருந்து வினோபா பாவே வரை, ஆதிசங்கரரிலிருந்து காஞ்சி ‘பரமாச்சாரியார்’ வரை, பலராலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, ‘கீதை’யில் கூறப்படுவதில் எது முக்கியமானது – ஞானமா, கருமமா, பக்தியா – என்ற எண்ணற்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் எல்லோராலும் மிகப் புனிதமானதாகக் கருதப்பட்ட அந்த நூல் வகித்த எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தை விளக்குகிறார் பஸாஸ்.
பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டங்களுக்கும் தத்துவங்களுக்கும் சத்திரியர்கள் ஆதரவு கொடுத்ததாலும், பெளத்தப் புரட்சியின் தோல்விக்குப் பிறகும் அதன் கருத்துகளும் சாங்கியம் போன்ற பொருள்முதல்வாதத் தத்துவங்களும் வெகுமக்களிடையே தொடர்ந்து செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்ததாலும் பார்ப்பனர்கள் சில சூழ்ச்சிகளைச் செய்தனர். சாங்கியம், பெளத்தம் போன்றவற்றிலிருந்து சில கருத்துகளைக் களவாடி அவற்றின் பொருளை உருத்திரித்தனர். ஊசலாட்டமிக்க சத்திரியனான அர்ச்சுனன், பார்ப்பனியத்தின் உறுதியான அடிவருடியான மற்றொரு சத்திரியனான கிருஷ்ணன் ஆகியோருக்கிடையில் நடைபெறும் உரையாடலாக கீதையை வடிவமைத்தனர். முன்னுக்கும் பின்னான முரண்பாடுகள், வக்கிரங்கள், தர்க்கரீதீயான விவாத முறையிலிருந்து விலகிச் சென்று அச்சுறுத்தல்கள், மூட நம்பிக்கைகள் மூலம் சரணாகதித் தத்துவத்தைத் திணித்தல், வருண-சாதிய முறைக்கான நியாயவாதங்கள், அடிப்படையான மனித விழுமியங்களுக்கு எதிரான கருத்துகள் முதலியனவற்றை கீதை கொண்டிருப்பதை ஆழ்ந்த புலமையுடன் விளக்குகிறார் பஸாஸ்.
“நேர்மையின்மை, சூழ்ச்சி, ஏமாற்று வேலை, இரக்கமின்மை, சகிப்பின்மை போன்ற குணநலன்கள் அனைத்தும் இந்து சமூகத்துக்குப் பார்ப்பனியம் அளித்த கொடை” என்றால் இந்தக் கொடையை வழங்குவதற்கான முதன்மையான சாதனமாக இன்றுவரை இருப்பது கீதைதான். கீதை கூறும் ‘நிஷ்காமிய கர்மா’ (பயன் கருதாக் கருமம்) ஒருபோதும் ஆதிக்க சாதிகளாலும் சுரண்டும் வர்க்கங்களாலும் கடைப்பிடிக்கப்பட்டதில்லை. மாறாக, “பயன்கருதாக் கருமம் அல்லது ஊதியமின்றி உழைத்தல் என்ற இந்தக் கருத்தியல் உழைக்கும் வர்க்கத்தை என்றென்றும் அடிமைத்தனத்தில் வைத்திருப்பதற்கும் பார்ப்பன, புரோகித வர்க்கம் மேல் நிலையிலிருந்து கொண்டு வசதிகள் அனைத்தையும் அனுபவிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.”

மகாபாரதப் போர்
பார்ப்பனியத்துக்கு இன்றுவரை நீடிக்கும் உறுதியான இடத்தைப் பெற்றுத் தந்தது மகாபாரதப் போர் என்று கூறும் நூலாசிரியர், பெரும் அழிவை ஏற்படுத்திய இந்தப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்களை வரவேற்றவர்கள் அனைவரும் “தண்டாக் களிப்பில் தாண்டவமாடிய பார்ப்பனக் கும்பல்தான்” என்பதையும், போரைக் கண்டனம் செய்த பகுத்தறிவாளனான ஒரு சார்வாகன் பார்ப்பனர்களால் எரித்துக் கொல்லப்பட்டான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கொலைவெறி காந்தியின் சீடரும் ‘அஹிம்சாவாதி’யுமான வினோபா பாவேவிடமும் கூட எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும் கூறுகிறார். 1974இல் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அணுகுண்டு வெடிக்கப்பட்டதை , “அறிவியலும் ஆன்மிகமும் இணைந்த சாதனை” என வர்ணித்தார் வினோபா.
இந்தியாவில் ஏன் புரட்சி தோன்றவில்லை?
பண்டைக் கிரேக்கத்தில் புரோகிதர்களின் ஆட்சியைத் தூக்கியெறிந்த வணிக வர்க்கம் போலவோ, ஐரோப்பாவில் மத்திய காலத்துக்குப் பிறகு போப்பின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்கத் துணிவு பெற்றிருந்த மன்னர்களைப் போலவோ அல்லது மத நிறுவனங்கள் அனைத்தினதும் அதிகாரத்தையும் அரசு அதிகாரத்திலிருந்து முற்றிலுமாக வெட்டியெறிந்த நவீன பூர்ஷ்வா வர்க்கம் போலவோ இந்தியாவிலிருந்த சத்திரியர்களும் வணிகர்களும் செயல்படவில்லை என்பதை பஸாஸ் சுட்டிக்காட்டுகிறார். பார்ப்பனர்களின் ஏற்புடன் ஆட்சிபுரிந்த மன்னர்கள் வருண தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டியவராகவும் பார்ப்பனர்களின் மேன்மையை உறுதி செய்யக் கடமைப்பட்டவராகவுமே அடையாளப்படுத்தப்பட்டனர். மன்னனின் அரசியல் செயல்பாடுகள் அவனது அரசியலதிகாரத்தை வெளிப்படுத்தி அவனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த உதவிய போதிலும், சமூகத்தின் சமய, பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசனின் ஒப்புதலைப் பெற்ற பார்ப்பனியக் கருத்துநிலையால் வடிவமைக்கப்பட்டன. இங்கு அரசனின் செல்வாக்கைவிட பார்ப்பனர்களின் செல்வாக்கே மேலோங்கியிருந்தது. மனு காலத்திலிருந்தே வணிகர்கள் பார்ப்பனர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக்கப்பட்டிருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாகிய தரகுப் பெருவாணிப-பூர்ஷ்வாக்களும் முழுக்க முழுக்கப் பார்ப்பனியக் கருத்து நிலைக்கு அடிமைப்பட்டவர்களாகவே இருந்தனர். “ அடக்குமுறையால் நிலை தாழ்த்தப்பட்ட, கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு, ‘வேதாந்தம்’… அல்லது ‘ஆன்மிகம்’ என்ற பகுத்தறிவுக்குப் புறம்பான தத்துவத்தின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர வேறு வழியில்லாது போயிற்று.”
இந்தியாவில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சிய பெளத்தம் கி.பி. 4ஆம் – 5ஆம் நூற்றாண்டுகளில் தோற்கடிக்கப்பட்ட பிறகு இந்திய சமுதாயத்தின் மீது பார்ப்பனியம் கொண்டிருந்த கொடூரமான இறுக்கம் ஓரளவு தணியத் தொடங்கியது முகலாயர் ஆட்சிக் காலத்தில்தான் என்பதைத் தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்கும் பஸாஸ், பார்ப்பனரல்லாத வெகுமக்களுக்கு இருண்ட காலமாக இருந்த குப்தர் காலத்தை இந்தியாவின் பொற்காலமாக நேரு கருதியதற்குக் காரணம் அவர் அடிப்படையிலேயே ஊசலாட்டமிக்க பார்ப்பன அறிவுஜீவியாக இருந்ததுதான் என்கிறார். அவருக்கும் காந்திக்கும் இருந்த உறவு அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இருந்த உறவு போன்றதுதான். கிருஷ்ணனுடன் உரையாடலைத் தொடங்கியபோது சிறிது மனிதநேயமும் பகுத்தறிவும் கொண்டிருந்த அர்ச்சுனன் உரையாடல் முடிகையில் கிருஷ்ணனிடம் முழு சரணாகதி அடைந்துவிட்டதைப் போலவே நேருவின் பகுத்தறிவுவாதம் காந்தியின் பகுத்தறிவு விரோத உள்ளுணர்வுத் தத்துவத்திடம் மண்டியிட்டுவிட்டது.

‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ்
‘மதச் சார்பற்ற’ காங்கிரஸ் தேசியவாதிகளின் அப்பட்டமான பார்ப்பன இந்துத்துவத்துக்குச் சில எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறார் பஸாஸ்…
(1) பார்ப்பனச் சோதிடர்களால் நல்ல நேரம் என்று குறித்துத் தரப்பட்ட நேரத்தில் நேரு பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
(2) கங்கை நீரைக் கொண்டு பார்ப்பனர்களின் காலைக் கழுவினார் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத். அவர் குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதியை இந்துக் கோவிலாக மாற்றினார்; ‘ஆவிகளுடன் பேசுவதிலேயே நேரத்தைச் செலவிட்டார்.
(3) 12ஆம் நூற்றாண்டில் கஜினி முகமதால் இடிக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தைப் புதுப்பித்துத் தருவதை ‘மதச் சார்பற்ற’ இந்திய அரசாங்கத்தின் செயல்திட்டமாக ஆக்கினார் வல்லபபாய் படேல்.
(4) பசு புனிதமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு பசு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
(5) இஸ்லாமியர் விரோத ‘வந்தேமாதரம்’ பாடல் அரசுப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
(6) இந்தியக் கூட்டமைப்பில் வேறு பண்பாடு, வேறு மொழி என்னும் பேச்சுக்கே இடமில்லை, அவ்வாறு பேசுபவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் புருஷோத்தமதாஸ் தாண்டன் அறிவித்தார்.
(7) அரசியலில் வெற்றி பெறுவதற்காக ஆனந்தமாயி மடம் கொடுத்த முத்து மாலையை அணிந்துகொண்டிருந்தார் இந்திரா காந்தி.
எது பொற்காலம்?
வேறு எந்த நாட்டிலும் காண முடியாதபடி புராணம், தத்துவம், மதம் ஆகிய மூன்றும் பிரிக்கமுடியாதபடி பின்னிப் பிணைந்துள்ள இந்தியாவில் பெளத்த காலத்துக்குப் பின் ஏற்பட்ட பொற்காலம், பிரிட்டிஷ் ஆட்சியே என பஸாஸ் கூறுவது தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல; மார்க்ஸியவாதிகளுக்கும் உடன்பாடற்றதாக இருக்கத்தான் செய்யும். ஆனால், அவர் இங்கு பொற்காலம் எனக் கூறுவது ஒப்பீட்டளவில்தான் என்பதைப் புரிந்துகொள்கையில் அவரது வாதங்களை ஏற்பதும் 19-20ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், சமூக சீர்திருத்த இயக்கங்கள், காங்கிரஸ் இயக்கத்திலேயே இருந்த மிதவாதிகள் ஆகியோர் ஏன் ஓரளவுக்கு பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தனர் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
பெளத்த காலத்துக்குப் பிறகு ‘எல்லா மனிதர்களும் சட்டத்திற்கு முன் சமம்’ என்பதைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரிவுபடுத்தியது பிரிட்டிஷ் ஆட்சிதான். சிசுக் கொலைத் தடைச் சட்டம், கைம்பெண் எரிப்புத் தடைச் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், கைம்பெண் மறுமண ஆதரவு, கலப்புத் திருமண ஆதரவு போன்றவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால்தான் கொண்டுவரப்பட்டன. தங்களது சொந்த நலன்களை தேச நலன்களாக அடையாளப்படுத்தும் சூழ்ச்சித் திறன் படைத்த பார்ப்பனர்கள் – இந்துத்துவவாதிகள், தேசியவாதிகள் ஆகிய இரு தரப்பிலும் இருந்தவர்கள் – இந்த சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்தனர். “இன்றுகூட, ஆங்கில ஆட்சியானது சனாதன தர்மப்படி – மனுதர்ம ஆட்சிப்படி நடத்தப்படுவதாக இருந்தால் இன்றைய தேசியமும் சட்ட மறுப்பும் ஒத்துழையாமையும் எல்லாம் பறந்தோடிப் போகும்” எனப் பெரியார் 1930களில் கூறியது இதனால்தான். இக்காரணத்தாலேயே அவருடன் சேர்த்து, அம்பேத்கர், எம்.என்.ராய் ஆகிய சமூகப் புரட்சியாளர்களும் பஸாஸால் போற்றப்படுகின்றனர்.
மெக்காலெ திட்டம்
பார்ப்பன தேசியவாதிகளாலும் இத்தேசியவாதத்தில் மயங்கிய மார்க்ஸியவாதிகளாலும் நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்ட தவறான செய்திகள் பல இந்த நூலில் தகர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் ஆட்சிக்கு என்றென்றும் ஊழியம் புரிந்துவரும் அரசாங்க அலுவலர்களை உருவாக்கவே மெக்காலெவின் கல்விச் சீர்திருத்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதுகாறும் நமக்குச் சொல்லப்பட்டு வந்தது.
“ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் சுத்தி செய்வதற்கு என்ன மந்திரங்கள் கூற வேண்டும், ஓர் ஆடு கொல்லப்பட்டால் அதற்குப் பரிகாரமாக எந்த வேதப் பாடலைப் பாட வேண்டும் என்பதை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டின் நிதியைச் செலவிடக் கூடாது” என்பதும் அவருடைய முக்கிய கருத்துகளிலொன்று என்பது திட்டமிட்டே மறைக்கப்பட்டது. அவர் கொண்டுவந்த நவீன கல்வித் திட்டத்தின்படி, ஆங்கிலத்தையும் அதன் வழியாக தேசியம், தேசம், தேசியக் கொடி, நாடாளுமன்ற ஜனநாயகம் போன்ற நவீனக் கருத்துகளைக் கற்றவர்கள்தான் அவற்றைப் பார்ப்பன-பனியா நலன்களுக்கான போராட்டக் கருவிகளாக்கினர். இன்று இந்து ராஷ்டிரத்தை உருவாக்கக் கடும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் மெக்காலெவுக்கு முந்திய பழைமைவாத, வருணமுறைப்படியான கல்விக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவின் சமூக, பண்பாட்டு, பொருளாதார வாழ்க்கைப் பிரிட்டிஷார் காலத்திலிருந்ததை விட மிகவும் சீரழிந்துவிட்டதாகக் கூறும் பஸாஸ் தனது வாதத்துக்கு ஆதாரமாக ஏராளமான சான்றுகளை முன் வைக்கிறார். இங்கு ஒரு சிந்தனைப் புரட்சி இல்லாமல் சமூக மாற்றம் ஏதும் ஏற்படாது எனக் கருதும் அவர் ஒரு அறிவொளி மரபை வளர்ப்பதில் கம்யூனிஸ்டுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்கிறார். அதே சமயம், பார்ப்பனியக் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்தும் வேலையில் நாடாளுமன்றக் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறார்.
இந்தியாவைப் பற்றிய வரலாற்று வரைவியலில் (Historiography) புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய எம்.என்.ராய், அம்பேத்கர் ஆகியோரின் அடியொற்றி பஸாஸ் எழுதியுள்ள நூல் சமூக நீதிக்காகவும் தமிழரின் தத்துவ மரபிலுள்ள மனிதநேயக் கூறுகளைக் காக்க விரும்புவோர்களாலும் கட்டாயம் படிக்கப்பட வேண்டியதாகும்.
மேலும், இந்தியாவில் பார்ப்பன-பனியாக் கூட்டணி மேலாதிக்கம் பெறுவதற்கான கருத்தாயுதங்களில், மிகுந்த ஊக்குவிப்பு பெற்று வந்த நூல்களில் முக்கியமானதாக இருப்பதும் ‘பகவத் கீதை’தான். இது குறித்த வரலாற்றுச் செய்திகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.
கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
